– “வேதாளம் சொன்ன ‘சாட்’ கதை” என்னுமிந்தச் சிறுகதை திண்ணை ஆகஸ்ட் 12, 2001 இதழில் வெளியான எனது சிறுகதை. நானே மறந்திருந்த இச்சிறுகதை அண்மையில் என் கூகுள் தேடலில் மீண்டும் வந்தகப்பட்டுக்கொண்டது. முனைவர் வெங்கட்ரமணனின் ‘திண்ணைச் சிறுகதைகள் தேர்விலொரு சிறுகதையாக’ அத்தேடலில் என்னை மீண்டும் வந்தடைந்த சிறுகதையிது. –
முற்றும் மனந்தளராத விக்கிரமன் வழக்கம் போல் முருங்கையிலேறி வேதாளத்துடன் இறங்கிய பொழுது, எள்ளி நகைத்த வேதாளம் அவனைப் பார்த்துப் பின் வருமாறு கூறத் தொடங்கியது.
‘ விக்கிரமா! நான் ஒரு கதை கூறப் போகின்றேன். இது சைபர் உலகு பற்றியதொரு கதை. இதற்கான கேள்விக்குாிய பதிலைத் தொிந்திருந்தும் நீ கூறாது விட்டாயானால் உன் தலை வெடித்துச் சிதறி சுக்கு நூறாகி விடும். ‘ இவ்விதம் ஆரம்பித்த வேதாளம் தன் கதையினைக் கூற ஆரம்பித்தது.
ராமநாதன் அன்று மிகவும் ஜாலியான மனோநிலையில் இருந்தான். இன்னும் கொஞ்ச நேரத்தில் மனைவி பானுமதி வேலைக்குப் போய்விடுவாள். அவள் செய்வது ‘கிரேவ்யார்ட் சிவ்ட் ‘. நள்ளிரவிலிருந்து காலை வரை கனடாவின் பிரபல வங்கியொன்றின் தகவல் மையத்தில் வேலை. ராமநாதன் ஜாலியான மனோநிலையில் இருந்ததற்குக் காரணமிருந்தது. கடந்த இரண்டு நாட்களாக இணையத்தில் ‘சாட் ‘டில் ஒரு சிநேகிதி அகப்பட்டிருந்தாள். இதுதான் அவன் முதன் முறையாக ஒரு பெண்ணுடன் சாட் செய்வது. கடந்த இரண்டு நாட்களாக ஒருவிதமான கிளூகிளுப்பு. புது மாப்பிள்ளை போன்ற உற்சாகம். அவனில் தொிந்த மாற்றத்தை பானுமதியும் கவனித்துக் கொண்டிருந்தாள்.ஆனால் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. பானுமதி வேலைக்கு இறங்குவதற்கு ஆயத்தமானாள்.
‘என்னங்க, அப்ப நான் போயிட்டு வரட்டா ‘
‘ம்.. ‘ ராமநாதன் கணினியை ‘ஆன் ‘ பண்ணினான்.
‘என்ன நான் சொல்லுவது காதில் விழுகிறதா ? ‘ பானுமதியின் குரலில் சிறிது கடுமை தொிந்தது.
‘குழந்தை கட்டிலோரத்திலை படுத்திருக்கு..பார்த்துக் கொள்ளுங்க…பால் கரைத்து வைத்திருக்கிறேன். அழுதாலெடுத்துக் குடுங்கோ.. ‘
‘ம்.. ‘
‘ உணவெல்லாம் வெளியிலை இருக்கு. சாப்பிட்டதும் ஃபிரிட்ஜிற்குள் வைத்து விடுங்கோ..என்ன ? ‘
‘டோண்ட் வொரி ஐ வில் மனேஜ் இட்.. நீர் போய் வாரும் ‘
‘இப்பிடித்தான் எப்பவும் சொல்லுவீங்க..விடிய வந்தால் எல்லாம் வெளியிலை கிடக்கும்.. எத்தனை தரம் கொட்டியாச்சு..கொஞ்சமாவது கவனம் இருக்குதாயென்ன ? ‘