வாசிப்பும், யோசிப்பும் 288: கே.எஸ்.சிவகுமாரனின் ஆங்கில நூலான ‘On Films Seen’ என்னும் நூலை முன்வைத்துச் சில கருத்துகள்..! (1)

on films seen by K.S.Sivakumaran

கலை, இலக்கியத் திறனாய்வாளர் கே.எஸ்.சிவகுமாரன்

அண்மையில் திரு.கே.எஸ்.சிவகுமாரன் அனுப்பியிருந்த இரு நூல்களை (‘திரைப்பட விழாக்களின் படங்களும் அவை தொடர்பான சுவையான செய்திகளும்’, மற்றும் ‘On Films Seen ) ‘இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன’த்தின் புகழ்பெற்ற முன்னாள் ஒலிபரப்பாளரும் , ஊடகவியலாளருமான திரு.வின்.என்.மதியழகன் மூலம் பெற்றுக்கொண்டேன். இத்தருணத்தில் பல வருடங்களுக்கு முன்னர் நண்பரொருவரிடம் கே.எஸ்.எஸ் அவர்கள் கொடுத்திருந்த நூல்கள் இன்னும் என் கைகளை வந்தடையவில்லையென்பதையும் நினைவு கூர்ந்திடத்தான் வேண்டும். நூல்களை அனுப்பிய கே.எஸ்.எஸ் அவர்களுக்கும் அவற்றை விரைவாகவே கொண்டுவந்து என்னிடம் சேர்ப்பித்த வி.என்.எம் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி கோடி.

இவ்விரு நூல்களில் ‘கொடகே பிறதர்ஸ்’ பதிப்பக வெளியீடாக வெளியான கே.எஸ்.சிவகுமாரனின் ஆங்கில நூலான ‘On Films Seen’ என்னும் நூலைப்பற்றிய எனது குறிப்புகளே இச்சிறுகட்டுரை. இந்நூலைப்பார்த்தபோது எனக்கு மிகுந்த பிரமிப்பே ஏற்பட்டது. இலங்கைக்கு வெளியே நிகழ்ந்த சர்வதேசத் திரைப்பட விழாக்களில் அவர் அவ்வப்போது பார்த்து, களித்துச் சிந்தித்தவற்றை வைத்து எழுதப்பட்ட 58 கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். 1990 ஆம் ஆண்டுக்கு முன் எழுதிய கட்டுரைகள் கிடைக்காததால் , அதற்குப்பின்னர் எழுதிய கட்டுரைகளையே இந்நூல் அடக்கியுள்ளதென்பதை அவரது நூலுக்கான முன்னுரை புலப்படுத்தும். கூடவே அம்முன்னுரை இன்னுமொன்றையும் கூறும். அது இந்நூலுக்கான காரணம் பற்றியது. தன்னைப்போல் இவ்விதம் சர்வதேசத் திரைப்பட விழாக்களைக் கண்டு களிக்க  முடியாத சினிமாப்பிரியர்களுக்கு இவ்விதமான சர்வதேசத் திரைப்படங்கள் பற்றிய தகவல்களைத் தருவதே இந்நூலின் நோக்கம் என்று அவர் மேற்படி முன்னுரையில் குறிப்பிடுவார். உண்மையில் கடந்த பல தசாப்தங்களாகக் கலை, இலக்கியத்துறையில் அவர் தளராது இயங்கி வருவதற்குரிய காரணங்களிலொன்றல்லவா அது.

இந்நூலின் மிகவும் பிரதானமானதும் , முக்கியமானதுமான அத்தியாயம் முதலாவது அத்தியாயமாகவிருப்பது நூலின் சிறப்பான ஒழுங்கமைப்புக்கு  நல்லதோர் எடுத்துக்காட்டு. திரைப்படத்துறையில் ஆர்வமுள்ள எவரும் கலைத்துவம் மிக்க திரைப்படங்களைப் பார்த்து இரசிப்பதற்கு முக்கியமாகத் திரைப்படக்கலை பற்றிச் சிறிதளவாவது அறிந்திருக்க வேண்டும். அதன் பின்னர் அவர்கள் பார்க்கும் திரைப்படங்களை நன்கு அறிந்துகொள்ள இவ்விதமான ஆரம்ப அறிவு பயனுள்ளதாகவிருக்கும். இதனையுணர்ந்துதான் இந்நூலின் முதலாவது அத்தியாயத்துக்குத் ‘திரைப்படங்களை அறிந்துகொள்ளல்’ (Understanding the Films) என்று தலைப்பிட்டுள்ளார். இவ்வத்தியாயமெட்டுக் கட்டுரைகளை உள்ளடக்கியுள்ளது. தி ஐலண்ட் பத்திரிகையில் வெளியான ஆறு கட்டுரைகளும், டெய்லி நியூஸ் பத்திரிகையில் வெளியான இரண்டு கட்டுரைகளுமே அவை. ‘சினிமாவின் மொழியும், அமைப்பும்’, ‘திரைப்பட மொழி’, ‘பார்வையாளரொருவரின் பங்கு’ போன்ற பல விடயங்களில் சினிமா என்னும் ஊடகத்தைப்பற்றிய தனது கருத்துகளை முதல் ஆறு கட்டுரைகளில் வெளிப்படுத்துவார் கே.எஸ்.எஸ் அவர்கள். அடுத்த இரு கட்டுரைகளில் தமிழ்ப்படத் தயாரிப்பாளரும், இயக்குநருமான அமரர் பாலு மகேந்திராவின் சினிமா பற்றிய பார்வையினை நேர்காணல் மற்றும் கூற்றுகள் வாயிலாக வெளிப்படுத்துவார்.

Continue Reading →