‘வெற்றிமணி’ சஞ்சிகையின் 22.2.1955 இதழ் எம்.எம்.பாரிஸ் ((M.M.Faries) என்பவரை ஆசிரியராகக்கொண்டு நாவலப்பிட்டி மிட்லண்ட் அச்சகத்தில் அச்சடிக்கப்பட்டு அவராலேயே வெளியிடப்பட்டுள்ளது. இதில் மலர் 1, இதழ் 1 என்றிருப்பதால் இதுவே அவர் ஆசிரியராகவிருந்து , வெளியிட்ட முதலாவது இதழென்பது தெரிகின்றது. (ஆதாரம் – நூலகம் தளத்திலுள்ள வெற்றிமணி சஞ்சிகைகள்) 20-10-1955 இதழ் எம்.எம்.பாரிஸ் ஆசிரியராகவிருக்கின்றார். அச்சடிக்கப்பட்டது ஆனந்த, யாழ்ப்பாணத்தில்.
வெற்றிமணி சஞ்சிகையின் முதலாம் ஆண்டு மலராக 14.1.1956 இதழ் வெளியாகியுள்ளது. ஆசிரியர் ஏ.கே.சாமி. இவ்விதழில் அட்டைப்படம் அழகாக வந்துள்ளதுடன், சஞ்சிகையின் வடிவமைப்பும் மாறியுள்ளதையும் காண முடிகின்றது. அட்டையில் புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் பொங்கல் கவிதையும் வெளியாகியுள்ளது. முதலாவது ஆண்டு மலர் பொங்கல் மலராக வெளியாகியுள்ளது. 1.12.1956 இதழில் ஆசிரியர் ஏ.கே.சாமி ‘1957 தை மாதம் தொடக்கம் கெளரவ ஆசிரியராக வித்துவான் மு.கந்தையா அவர்கள் கடமையாற்றுவார் என்று அறிவித்திருக்கின்றார்.
வெற்றிமணி சஞ்சிகையின் 1.9.1956 இதழில் இலங்கை அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த செய்தியொன்று முன் பக்கத்தில் வெளியாகியுள்ளது. “தமிழ் பேசும் இனத்தின் உரிமைப்போராட்டத்தை நிர்ணயிக்கும் தமிழரசுக் கட்சியின் சரித்திரப்பிரசித்தி பெற்ற மாநாடு திருகோணமலையில் 18,19-8-1956 இல் நடைபெற்றது. தமிழ்பேசும் இனத்தின் உரிமைப்போராட்டத்திற்குச் செல்லும் “திருமலை யாத்திரை” என்னும் அறிவிப்புடன் நெடுங்கவிதையொன்றின் முதற்பகுதி , நவாலியூர் பண்டிதர் சோ.இளமுருகனார் எழுதியது, வெளியாகியுள்ளது. கவிதை “திருமலைக்குச் செல்லுவோம். சிறுமை அடிமை வெல்லுவோம்” என்று ஆரம்பமாகியுள்ளது.
இவ்விதழில் “எங்கள் ஊர் வவுனியா” என்னுமொரு கட்டுரையினை மாணவர் மன்ற உறுப்பினரான செல்வி.சே.சிவநேசமணி என்னும் மாணவி எழுதியிருக்கின்றார். சுருக்கமான , சுவையான கட்டுரை . அதில் அவர் வன்னிக்கு ‘அடங்காப்பற்று’ என்னும் காரணம் வந்த காரணத்தைக் குறிப்பிட்டிருப்பார். இதுவரை நான் கேட்காத விளக்கம். தர்க்கபூர்வமானது. அதனை இங்கு தருகின்றேன்: “வன்னிநகர் “அடங்காப்பற்று” எனும் மங்காப்பெயர் கொண்டது. இப்பெயர் பெறுவதற்குக் காரணம் அவர்கள் பேராசையன்று. முற்காலத்தில் பல்வகைச்செல்வங்களும் நிறைந்து விளங்கிய வன்னியிலே உள்ள மக்கள் ஈதலையே தலை சிறந்த அறமாகக் கொண்டிருந்தனர். இரப்போர்க்கு இல்லையென்னாது ஈந்தனர். ஈகையின்மேல் அவர்கள் கொண்டிருந்த அடங்காப்பற்றினாலேயே அவர்களது நாடாகிய வன்னிக்கு ‘அடங்காப்பற்று’ எனப்பெயர் உண்டாகியதென்று பலர் கூறுவர்”.