வாசிப்பும், யோசிப்பும் 291 : ‘பொதிகை’யின் ‘நூல் நயம்’ நிகழ்ச்சியில் வி.என்.மதியழகனின் ‘சொல்லும் செய்திகள்’ பற்றிய எண்ணத்துளிகள்..

'பொதிகை'யின் 'நூல் நயம்' நிகழ்ச்சியில் வி.என்.மதியழகனின் 'சொல்லும் செய்திகள்' பற்றிய எண்ணத்துளிகள்.. -வ.ந.கிரிதரன் -எம் மாணவப்பருவத்தில் எமது பிரதானமான பொழுதுபோக்குகள்: திரைப்படங்கள், புத்தகங்கள், சஞ்சிகைகள் & பத்திரிகைகள் மற்றும் இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத் தமிழ் நிகழ்ச்சிகள் இவையே. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத் தமிழ் ஒலிபரப்புச் சேவை இலங்கையில் மட்டுமல்ல, தமிழகத்திலும் மிகுந்த வரவேற்பைப்பெற்ற சேவை. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தமிழ்ச் சேவை என்றதும் உடனடியாக எனக்கு ஞாபகத்தில் வரும் பெயர்கள் அப்துல் ஹமீட், ‘பூவும் பொட்டும் மங்கையர் மஞ்சரி புகழ்’ ராஜேஸ்வரி சண்முகம், கே.எஸ்.ராஜா, ராஜகுருசேனாதிபதி கனகரத்தின்ம், சற்சொருபவதி நாதன், வி.என்,மதியழகன், சில்லையூர் செல்வராசன், கமலா தம்பிராஜா…இவர்களே. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத் தமிழ்ச்சேவையில் எல்லா நிகழ்ச்சிகளையும் நான் கேட்பவனல்லன். அவ்வப்போது வயதுக்கேற்ப கேட்கும் நிகழ்ச்சிகளும் மாறிக்கொண்டேயிருக்கும். ஒரு வயதில் பொங்கும் பூம்புனல் கேட்பது பிடித்திருந்தது. இன்னுமொரு சமயம் ‘தணியாத தாகம்’ போன்ற தொடர் நாடகங்கள், ‘இசையும் கதையும்’ போன்ற இசையுடன் கூடிய கதைகள், இன்னுமொரு பருவத்தில்’நெஞ்சை ஈர்க்கும் ‘நெஞ்சில் நிறைந்தவை’ என விரும்பிக் கேட்கும் நிகழ்ச்சிகளின் தன்மையினை  எம் வயதும் , அவ்வயதுக்குரிய உளவியலும் நிர்ணயித்தன. எனக்கு அக்காலத்தில் ராஜேஸ்வரி சண்முகத்தின் குரல் மிகவும் பிடிக்கும். சீரான வேகத்தில் நிதானத்துடன் சொற்களை வழங்கும் குரல் ராஜகுரு சேனாதிபதி கனகரத்தினத்துடையது. இவ்விதமாக முறையான பயிற்சியும், அனுபவமும் மிக்க அறிவிப்பாளர்கள் மொழி வளம் மிக்கவர்களாக விளங்கினார்கள்; தமிழ்த்திரைப்படப்பாடல்களின் ஆவணச்சுரங்கங்களாக விளங்கினார்கள்; எப்பாடலுக்கும் உரிய தமிழ்ச் சொற்களைக் கையாண்டு அவற்றை விபரிப்பதில் மிகவும் வல்லவர்களாகவிருந்தார்கள்.

நிகழ்ச்சிகள் தவறுகள் அதிகமற்று, சிறப்பாக அமைந்திருந்ததற்கு முக்கிய காரணங்களிலொன்று இலங்கை ஒலிபரப்ப்புக் கூட்டுத்தாபனமென்னும் அரச கட்டமைப்பு. ஆனால் புகலிடச் சூழலிலோ இவ்விதமான கட்டமைப்புகள் எதுவுமற்றுள்ளன. பெரும்பாலும் தனிப்பட்டவர்களது பொருளீட்டுவதற்குரிய வர்த்தக முயற்சிகளாகவே இங்கு இயங்கும் வானொலிகளிருக்கின்றன. இதனால் ஒலி/ஒளி பரப்புத்துறையில் ஆர்வமுள்ளவர்கள் இத்துறையில் ஈடுபடுகின்றார்களே தவிர. இவர்களது நிகழ்ச்சிகளைக் கண்காணித்து, சீரமைப்பதற்குரிய முறையான கட்டமைப்பு இல்லாத காரணத்தால் பல தவறுகளை இவர்கள் புரிகின்றார்கள். உதாரணத்துக்கு ஒன்று: நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் ஒருவர் ஆர்வமுடன் உரையாடிக்கொண்டிருக்கின்றார். ஆனால் நடத்துபவருக்கோ அந்நிகழ்ச்சியினை விரைவாக முடித்து விட வேண்டுமென்று எண்ணம் போலும். கலந்து கொள்பவருடன் இவரால் ஆனந்தமாக , உற்சாகமாகத் தொடர்ந்தும் உரையாட முடியாமலுள்ளது. அவரது குரலிலும் அதற்கான சலிப்பு தென்படுகின்றது. கேட்கின்றவர்களுக்கும் அந்நிகழ்ச்சியினை நடத்துகிறவரின் சலிப்பும் தெரிகின்றது. இதனால் அவர்களுக்கும் சலிப்பு ஏற்படுகின்றது. இது போன்ற சலிப்புகளையெல்லாம் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத் தமிழ்ச் சேவை நிகழ்ச்சிகளிலெல்லாம் நான் அடைந்ததில்லை.

Continue Reading →

‘பாலியல் இலஞ்சம்’

ஶ்ரீ ரெட்டி!– நடிகை ஶ்ரீ ரெட்டியின் குற்றச்சாட்டுகளால் தமிழ் மற்றும் தெலுங்குத் திரையுலகின் ஆளுமைகள் பலர் நிலை கலங்கியுள்ளார்கள். ஆணும், பெண்ணும் புரிந்துணர்வுடன் நட்பு கொள்வதென்பது வேறு. பயன் ஒன்றுக்காகப் பெண்ணொருவரை ஆண் ஒருவர் தன் அதிகார நிலை காரணமாகப் பயன்படுத்துவது என்பது வேறு. அதுதான் நடிகை ஶ்ரீ ரெட்டியின் விடயத்திலும் நடத்துள்ளது. இவர் செய்தது சரியா தவறா என்று பார்ப்பதற்குப் பதிலாக இவரை இவ்விதம் பயன்படுத்திய ஆளுமைகள் செய்தது சரியா தவறா என்று பார்க்க வேண்டியதே மிகவும் முக்கியம். ஏனெனில் இத்துறையில் ஆயிரக்கணக்கில் ஆர்வமுள்ள பெண்கள் நுழைந்துகொண்டேயிருக்கின்றார்கள். அவர்கள் எவ்விதத் தயக்கமும் இல்லாமல் ஏனைய துறைகளைப்போல் இத்துறையில் நுழைவதற்கு ஶ்ரீ ரெட்டியின் குற்றச்சாட்டுகள் விடயத்தில் இந்தியச் சட்டட்த்துறை போதிய கவனம் எடுக்க வேண்டும். விசாரணைகளை நடத்த வேண்டும். குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். நண்பர் ராகுல் சந்திரா இது பற்றி நல்லதொரு கட்டுரையினை தனது முகநூல் பக்கத்தில் எழுதியுள்ளார். ஶ்ரீ ரெட்டிக்கு ஏற்பட்ட நிலையினைப் ‘பாலியல் இலஞ்சம்’ என்று கூறியிருக்கின்றார். ஆம்! சரியான சொல்லாடல் அது. பாலியல் இலஞ்சம் கொடுத்தும் அதற்குரிய பலனை அவர் அடையவில்லை. இலஞ்சம் வாங்குவது தவறானதொரு செயல். பாலியல் இலஞ்சமும் இலஞ்சத்தில் ஒரு வகையே. ஶ்ரீ ரெட்டியின் அனுபவங்கள் அவரது சொந்தக் கதையினை மட்டும் விவரிக்கவில்லை. தமிழ் மற்றும் தெலுங்குத் திரைப்படங்களில் நிலவும் சமூக விரோதச் செயல்களையும் வெளிப்படுத்துகின்றன. இவ்விதமான சமூக விரோதச் செயல்களைப் புரிபவர்கள் யாராகவிருந்தாலும் சட்டத்தின் முன் தப்ப முடியாது என்னும் நிலை ஏற்பட வேண்டும். பாதிக்கப்பட்டவருக்கு நட்ட ஈடு வழங்கப்பட  வேண்டும். அதன் மூலம் மேலும் பெண்கள் பலர் முன்னுக்கு வந்து தம் அனுபவங்களையும் கூறக்கூடும். திரையுலகினைச் சீராக்க வேண்டிய காலகட்டமிது. பெண்கள்  எவ்விதத் தயக்கமுமின்றி நடிப்புத் துறையில் ஈடுபடுவதற்குரிய சூழ்ழலை ஏற்படுத்த வேண்டும். அதற்குச் ஶ்ரீ ரெட்டியின் அனுபவங்கள் வழி வகுக்கட்டும். –  பதிவுகள் –


நடிகை ஶ்ரீ  ரெட்டியுடைய வீடியோ விவகாரம் தொடர்பாக கடந்த சில நாட்களாகவே சமூக ஊடகங்களில் பலவிதமான கருத்துக்களும் பரிமாறப்பட்டுக்கொண்டே இருக்கின்றன.ஆரம்பத்திலிருந்தே நான் இந்தவிதமான செய்திகளை hype பண்ணுவதை அசட்டை செய்யவே விரும்பினேன். இப்போது எனக்கு நெருக்கமான பலரும் தமது கருத்துக்களை முன்வைத்த நிலையில், நான் மௌனமாக இருப்பது “சாமி குத்தமாயிடும்” இல்லையா. ஆதலால் இந்த விடயம் தொடர்பாக எனது அபிப்பிராயங்களையம் முன்வைப்பது அவசியமானது என்று கருதி இதனை எழுதுகிறேன். எனக்கென்னவோ இதனை ஒரு பாலியல் இலஞ்சம் தொடர்பான விடயமாக பார்ப்பதே சரியானதாக இருக்கும் என்று படுகிறது. ஏன் என்பதை பார்ப்போம்.

எல்லா ‘அதிகாரபடிநிலை சமுதாயங்களை’ (Hierarchical Societies) போலவே, ஆணாதிக்க சமுதாயத்தில், சமூகத்தின் பொதுவான வளங்கள், வாய்ப்புகள், அதிகாரங்கள் போன்றவை ஆண் – பெண் ஆகிய இரு தரப்பினரிடையே சமமாக பங்கிடப்படுவதில்லை. இவற்றை தமது கரங்களில் குவித்து வைத்துக்கொண்டுள்ள ஆண்கள், இவற்றில் தமக்கு உரிய பங்கை பெற முனையும் பெண்களை தடுக்க முனைகிறார்கள். Gate Keepers போல செயற்படும் இவர்கள், பெண்கள் இவற்றை பெறுவதை தடுக்கிறார்கள். அவற்றை பெண்கள் பெறுவதை தாம் அனுமதிப்பதாயின், அதற்கு தமக்கு பெண்கள் பாலியல் இலஞ்சம் தரவேண்டும் என்று நிர்ப்பந்திக்கிறார்கள்.

பாடசாலை மாணவிகள், பல்கலைக்கழக ஆய்வு மாணவிகள், வீட்டு வேலை முதல் கட்டிட வேலை, சுத்தம் செய்தல் போன்ற அனைத்து அடிதட்ட மட்டத்திலும் பணியாற்றும் ஏழை உழைக்கும் பெண்கள், நடிகைகள், படை வீராங்கணைகள், விளையாட்டு வீரர்கள், அலுவலக ஊழியர்கள், அரசியலில் தீவிரமாக ஈடுபடுபவர்கள்… என்று எல்லா வர்க்க, இன, சாதிய பின்னணிகளில் இருந்து வரும் பெண்களும் இந்த விதமான பாலியல் சுரண்டலுக்கு உள்ளாகிறார்கள். முதலில் இது ஒரு அப்பட்டமான பாலியல் அத்துமீறல் என்பதனை குறித்துக்கொள்ள வேண்டும்.

Continue Reading →