[ 1983 கறுப்பு ஜூலைக் கலவரத்தைத்தொடர்ந்து ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்கள், யுவதிகள் பல்வேறு ஈழத்தமிழரின் விடுதலை அமைப்புகளில் இணைந்து போராடப் புறப்பட்டனர். அவ்விதமாகப் புறப்பட்டவர்களில் ‘கடல்புத்திர’னும் ஒருவர். தனது அனுபவங்களை மையமாக வைத்து ‘வெகுண்ட உள்ளங்கள்’ நாவலை இவர் படைத்திருந்தாலும், இந்த நாவல் விரிவானதொரு நாவலல்ல. ஆனால் இவ்விதமாகத் தமது இயக்க அனுபவங்களை மையமாகக்கொண்டு ஏனையவர்களால் படைக்கப்பட்ட நாவல்களிலிருந்து இந்த நாவல் முற்றிலும் வேறுபட்ட கோணத்தில் படைக்கப்பட்டிருப்பதொன்றே இந்த நாவலின் முக்கியமான சிறப்பாகக் கருதுகின்றோம். பொதுவாக இவ்விதமான படைப்புகளை எழுதுபவர்களின் எழுத்தில் விரவிக்கிடக்கும் சுயபுராணங்களை இவரது ‘வெகுண்ட உள்ளம்’ நாவலில் காண முடியாது. ‘வெகுண்ட உள்ளங்கள்’ என்னுமிந்த இந்த நாவல் 1983ற்கும் 1987ற்குமிடைப்பட்ட பகுதியில், ஈழத்தமிழர்களின் போராட்ட எழுச்சி எவ்விதம் ஒரு கடலோரக்கிராமத்தின்மீது தாக்கத்தினை ஏற்படுத்தியது என்பதை விபரிக்கின்றது. அந்த வகையில் இந்நாவல் அக்காலகட்டத்தை ஆவணப்படுத்திய முக்கியதொரு படைப்பாக விளங்குகின்றது. கூடவே அமைப்புகள் எவ்விதம் செயற்பட்டன, அவற்றின் கட்டமைப்புகள் எவ்விதமிருந்தன என்பவற்றையும் வெளிப்படுத்துகின்றது. – பதிவுகள் -]
ஆசிரியரின் என்னுரை!
இந்தக் கதை 1990 களிலிருந்து கனடாவிலிருந்து, வெளியான ‘தாயகம்’பத்திரிகையில் தொடராக வெளியானது. 98இல் வ.ந.கிரிதரனின் முயற்சியில் குமரன் வெளியீடாக ‘வேலிகள்’ என வெளியாகிய தொகுப்பிலும் இடம் பெற்றிருக்கிறது. நூலகத் தளத்திலும் நீங்கள் அந்த புத்தகத்தைப் வாசிக்கலாம்.
இந்தியாவும்,இலங்கையும் இருக்கிற உலகப் படத்தில் இலங்கை மாம்பழம் போல இருக்கிறது. அதன் வட பகுதிக்கு அண்மையாக கடலில் மூன்று,நான்கு தீவுகள் இருப்பதைப் பார்க்கலாம். அதிலே மிகக் குறைந்த கடல் தூரத்தில் பிரிபட்டுள்ள பகுதி தான் அராலிக்கடல். தரைப் பகுதியோட இருக்கிற பகுதி அராலி, அடுத்தப்பக்கம் இருப்பது வேலணைத் தீவு. காரைநகர், பண்ணை வீதிகளைப் போல வீதி அமைக்கக் கூடிய இரண்டு, மூன்று கிலோ மீற்றர் தூரம் தான் இந்தக் கடலும். மகிந்த ராஜபக்சா அரசாங்க காலத்தில் அராலிக் கடலில் வீதி அமைக்கிற யோசனை இருந்திருக்கிறது போல இருக்கிறது. கூகுள் படத்தில் வீதி அமைக்கப் பட்டே விட்டிருப்பதுப் போலவே காட்டுகிறது. ஆனால், உண்மையில் வீதி இன்னமும் அமைக்கப்படவில்லை. .இந்த இடத்தில் தான் .1985 ம் ஆண்டில் இந்தக் கதை நிகழ்கிறது. 50 % …உண்மையும்,50 % …புனைவுமாக கலந்து எழுதப் பட்டிருக்கிறது. இனி வாசியுங்கள்.இந்த போக்குவரத்தில், பயணித்தவர்கள் வாசிக்கிறவர்களில் யாரும் ஒரிருவர் இருக்கலாம்.
சில திருத்தங்களுடன் இந்நாவல் மீண்டும் தொடராகப் ‘பதிவுகள்’இணைய இதழில் வெளியாகின்றது.
அத்தியாயம் இரண்டு!
வாலையம்மன் கோவில் வாசிகசாலை அவசரக்கூட்டம் ஒன்றுக்கு அறிவித்துக் கூட்டியிருந்தது. கமிட்டி உறுப்பினர்கள் முன்னால் அமர்ந்திருந்தனர். முருகேசன், தில்லை, சிவம், பஞ்சன், குமார், பரணி போன்ற இயக்கப்பெடியள்கள் மேல் தாக்குதல் நடத்தியவர்கள் ஒரு பக்கம் பயத்துடன் நின்றிருந்தனர். அவர்கள் சார்பில் வாசிகசாலைக் கமிட்டி இயக்கக் ‘காம்பு’க்குப் போய் மன்னிப்பு கேட்பது என்று தீர்மானித்தார்கள். ஆனால், இரண்டு இயக்கங்களையும் உடனே அணுகப் பயந்தார்கள். ஒன்றிடமிருந்து ஆயுதங்களைப் பறித்திருக்கிறார்கள். ஒன்றைக் காயப்படுத்தியிருக்கிறார்கள். அவமரியாதையின் தாக்கம் எவ்வளவு …இருக்குமோ? தெரியாது .அணுகாவிட்டாலும் நிலைமை சீர்கேடாகிவிடும். எனவே கட்டாயமும் இருந்தது.
அவர்கள் பயந்தது நடந்தே விட்டது. வடிவேலின் இயக்கம் வானில் வந்திறங்கியது. கமிட்டி ஆட்களை, தலைவர் பரமேஸ், உபதலைவர் பிரகாசம், காரியதரிசி சரவணன், உபகாரியதரிசி பாலன், பொருளாளர் குமார், கமிட்டி உறுப்பினர் சுமன், மனோகரன் அகிலன் என்று எட்டுப்பேரையும் ஏற்றிக்கொண்டு போனார்கள். கூட்டத்திலிருக்கிற மற்றவர்களுக்கு …வயிற்றைக் கலக்கியது. தலைவரையே கைது செய்தது அவர்களை ஒன்றும் செய்ய முடியாதவர்கள் ஆக்கிவிட்டது. இனி, மற்றதின் தாக்குதல் எப்படியிருக்கப்போகிறதோ? எனவும் பயந்தார்கள். அவர்கள் மத்தியில் இக்கரையைச் சேர்ந்த அவ்வியக்கத்தைச் சேர்ந்த அன்டன், நகுலன் என இரண்டு பெடியள் இருந்த போதும் அவர்களுக்கு சிறிதும் அக்கரையோடு தொடர்புகள் இருக்கவில்லை. தீவுப்பகுதி இன்னொரு ,எ.ஜி.எ அமைப்பு. இவர்கள்,எ.ஜி.எ யிலே இருக்கிற சிறு ஜி.எஸ் …பிரிவு.
வீட்டில், விளக்கேற்றியபிறகும் துயரத்துடன் கூட்டம் கூட்டமாக கூடி என்ன செய்யலாம் எனக் கதைத்துக் கொண்டிருந்தார்கள். அன்டன், நகுலன், நடேசன் ஆகியோர் கனகன் வீட்டு மணலிலே உட்கார்ந்திருந்தார்கள். முருகேசு, பஞ்சன், தில்லை கோஷ்டி ரோட்டிலேயிருந்த சீமெந்துக்கட்டில் இருந்தது. செல்லன், தியாகப்பு போன்ற பழசுகளின் வட்டம் கோவிலடியில் இருந்தது.
அன்றைக்கு யாருமே நித்திரை கொள்ளமாட்டார்கள் போலத் தோன்றியது. கமிட்டியில் வயசானவர்கள், ஒ.லெவல் வரைபடித்த பெடியள்கள், ஒரிருவர் அரச வேலையில் இருப்பவர்கள் … என ஆகியோர்கள் இருந்தனர். விசயம் அறிந்து நிதானமாக நடக்கிற அதையே அரஸ்ட் பண்ணி விட்டதால் போனவர்களுக்காக யார் கதைப்பது? எனப் புரிய வில்லை. கடைசியில், பழசுகளின் கோஷ்டி அண்டனைத் தேடி வந்தது. “தம்பி, நாளைக்கு காலையில் ஒருக்காய் போய் எப்படி, என்ன மாதிரி நடந்தது என்பதை உங்கடயாட்களிற்கு அறிவிச்சு விடு. வாசகிசாலைக்குழு மன்னிப்புக் கேட்க இருந்ததையும் சொல்லிவிடு” என்றார் தியாகப்பு.