மெல்பனில் நடந்த 18 ஆவது தமிழ் எழுத்தாளர் விழா! இரண்டு அரங்கங்களில் நடந்தேறிய நிகழ்வுகள்!

மெல்பனில் நடந்த 18 ஆவது தமிழ் எழுத்தாளர் விழா! இரண்டு அரங்கங்களில் நடந்தேறிய நிகழ்வுகள்!  அவுஸ்திரேலியா விக்ரோரியா மாநிலத்தில் மெல்பனில் கடந்த 4 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் வருடாந்த நிகழ்வான தமிழ் எழுத்தாளர் விழா நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் திரு. சங்கர சுப்பிரமணியன் தலைமையில் மெல்பனில், Keysborough Secondary College மண்டபத்தில் நடந்த  இவ்விழ, மண்டபத்தின் வெளியரங்கில் இடம்பெற்ற கண்காட்சிகளுடன் தொடங்கியது.  பிரதம விருந்தினராக வருகை தந்திருந்த தென்கிழக்காசிய  நாடுகளின் அமைப்புகளின் கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் மருத்துவர் சாபாஷ் சவுத்ரி கண்காட்சிகளை திறந்துவைத்தார். விக்ரோரியா பல்தேசிய கலாசார ஆணையத்தின் முன்னாள் தலைவர் திரு. சிதம்பரம் ஶ்ரீநிவாசன் விழா நிகழ்ச்சிகளை மங்கல விளக்கேற்றி தொடக்கிவைத்தார். விழாவின் தொடக்க நிகழ்ச்சிகளாக கண்காட்சிகள் இடம்பெற்றன. ஓவியர் நஸீரின் ஓவியக்கண்காட்சி, விமல் அரவிந்தனின் இயற்கை எழிலை சித்திரிக்கும் ஒளிப்படக்காட்சி மற்றும் மறைந்த தமிழ் வளர்த்த முன்னோர்கள், தமிழ் அறிஞர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்களின் குறிப்புகளுடன் அவர்களின் ஒளிப்படங்களின் காட்சி மற்றும் அவுஸ்திரேலியாவில் இதுவரையில் கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக வெளியான தமிழ் இதழ்கள் – பத்திரிகைகள் – நூல்களின் கண்காட்சி என்பன இடம்பெற்றன.

வள்ளுவர், கம்பர், இளங்கோ, அவ்வை உட்பட பாரதி, பாரதிதாசன், புதுமைப்பித்தன், ரகுநாதன், அகிலன், ஜெயகாந்தன், சுந்தரராமசாமி, முதல் இலங்கையைச்சேர்ந்த இலங்கையர்கோன், அ.ந. கந்தசாமி, மஹாகவி, கனகசெந்தி நாதன், டானியல், மு. தளையசிங்கம் உட்பட அண்மையில் மறைந்த பல எழுத்தாளர்களின் படங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. கொல்லப்பட்ட , காணாமலாக்கப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் – எழுத்தாளர்களின் படங்களின் வரிசையில் ரஜனி திராணகம, செல்வி, தராக்கி சிவராம், காவலூர் ஜெகநாதன், நெல்லை நடேஸ், நிமலராஜன், அஷ்ரப் ஆகியோர் உட்பட பலருடைய ஒளிப்படங்களும் இடம்பெற்றிருந்தன. அத்துடன் புகலிட நாடுகளில் ( கனடா, அவுஸ்திரேலியா, அய்ரோப்பா) மறைந்த இலக்கிய ஆளுமைகளின் ஒளிப்படங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.  நூறுக்கும் மேற்பட்ட ஒளிப்படங்கள் இடம்பெற்ற இக்கண்காட்சியில் மறைந்தவர்கள் பற்றிய குறிப்புகளும் படங்களின் கீழே பதிவுசெய்யப்பட்டிருந்தது.

Continue Reading →

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!

இவ்வுலகில் வாழும் மானுடர் யாவரும் வர்க்கம், மதம், மொழி, நாடு, தீண்டாமை போன்ற பல்வகைப் பிரிவுகளுக்குள் சிக்கி வாடி,வதங்கிக் கொண்டிருக்கின்றார்கள். இருப்பின் நோக்கமறியாது ஒருவரையொருவர் கொன்று குவிக்கும்…

Continue Reading →

அகணி சுரேஸின் ‘இன்னும் இருக்கிறது இனிய வாழ்வு ‘– நூல் வெளியீட்டு நிகழ்வு.

இன்னும் இருக்கிறது இனிய வாழ்வு – நூல் வெளியீட்டு நிகழ்வு.சென்ற ஞாயிற்றுக் கிழமை (4-11-2018) திரு.அகணி சுரேஸ் அவர்களின் மணிமேகலைப் பிரசுரத்தால் பதிக்கப்பட்டுள்ள, இன்னும் இருக்கிறது இனிய வாழ்வு என்ற  நாவல் நூலின் சிறப்புப் பிரதிகள் வழங்கல் நிகழ்வு ஈஸ்ட்ரவுன் ஒன்றுகூடல் மண்டபத்தில் மாலை மூன்று மணியளவில் அமரர் அலெக்ஸ்சாந்தர் நினைவு அரங்கில் ஆரம்பித்து மிகவும் சிறப்பாக நடைபெற்றது. மங்கள விளக்கேற்றி, தமிழ்தாய் வாழ்த்து, கனடிய தேசிய கீதம், அகவணக்கம் ஆகியவற்றைத் தொடர்ந்து வரவேற்புரை இடம் பெற்றது. சிற்றுண்டி உபசாரத்தோடு ஆரம்பித்த இந்த நிகழ்வு வழமையான நூல் வெளியீடு போன்று இருக்காது சற்று வித்தியாசமானதாக இருந்தது.

இந்நிகழ்வில் நூல் பற்றிய விமர்சன உரைகளோ அல்லது வாழ்த்துரை, அறிமுகவுரை போன்ற நூலாசிரியர் பற்றிய உரைகளோ இருக்கமாட்டாது என்று நூல் ஆசிரியர் விரும்பம் தெரிவித்தாலும் மாறாகச் சிலரின் உரை வாழ்த்துரையாக மாறியிருந்தது. ‘எதிர்காலச்சந்தியினரை எவ்வாறு படைப்பாளர்களாக மாற்றுவதற்கு ஊக்கப்படுத்தலாம்’ என்ற தலைப்பில் அறிஞர்களின் உரைகள் இடம்பெறவேண்டும் என்று ஆசிரியர் விரும்பி இருந்ததால் உரையாற்றியவர்கள் அதுபற்றித் தங்கள் கருத்துக்களை முன்வைத்தனர். அவையோர் மிகவும் ஆர்வத்துடன் உரைகளைக் கேட்டு மகிழ்ந்தனர். சிறுவர், சிறுமிகளின் சிறப்பான திறமைகளும் இந்த நிகழ்வில் வெளிக்காட்டப் பெற்றன. நிகழ்வுகளை தந்த சிறுவர், சிறுமிகளுக்குப் பரிசுகள் கொடுக்கப்பட்டு, அவர்களின் பெற்றோரும் பாராட்டப்பட்டனர்.  அறிஞர்களின் உரைகளுக்கு இடையில் அரைமணித்தியாலங்களுக்கு ஒரு தடவை சிறப்புப் பிரதிகள் வழங்கப்பட்டன. நூல் வெளியீட்டின் போது, அகணி சுரேஸ் அவர்கள் இயற்றிய பாடல் ஒன்றும் அவரது மகனால் இசை அமைக்கப் பெற்று ஒலி வடிவில் இடம் பெற்றது.

நிகழ்வின்போது இடம் பெற்ற எழுத்தாளர் குரு அரவிந்தனின் உரையில் இருந்து ஒரு பகுதியயைத் தருகின்றேன்:

எதிர்காலச்சந்ததியினரை எவ்வாறு படைப்பாளர்களாக மாற்றலாம் என்ற தலைப்பில் உரையாற்றும்படி நூலாசிரியர் கேட்டிருந்தார். பொதுவாக எடுத்துக் கொண்டால் படைப்பாளிகள் என்று குறிப்பிடும் போது படைப்பாளிகள் பல விதப்பட்டாலும் இங்கே ஆக்க இலக்கியத்தை மட்டும் கவனத்தில் எடுத்துக் கொண்டு, அதைப்பற்றிக் குறிப்பிட விரும்புகின்றேன்.  எதிர்கால சந்ததியினரைப் படைப்பாளிகளாக மாற்றுவதற்கு முதலில் இலக்கியத்தில் ஈடுபாடு கொள்வதற்கு ஏற்ற சூழலை அவர்களுக்காக உருவாக்கிக் கொடுக்க வேண்டும். அதற்கு முதற் கட்டமாக வாசிப்புப் பழக்கத்தை அவர்களிடம் ஏற்படுத்த வேண்டும். தாயகத்தில் படித்தவர்கள் அதிகமாக இருந்தாலும் அவர்கள் எல்லோரும் படைப்பாளிகளாக மாறவில்லை. பள்ளிப்படிப்பைத்தவிர வேறு எந்தப் பொழுது போக்குப்படிப்புகளுக்கும் அனேகமான பெற்றோர் பிள்ளைகளை அனுமதிக்கவில்லை. குறிப்பாக கதைப்புத்தகங்கள், வார, மாத இதழ்களைகூட வாசிக்க விடவில்லை. அதனாலே உயர்கல்வி கற்ற பலர் குறிப்பிட்ட துறையில் கல்வி அறிவு பெற்றிருந்தாலும், இலக்கியத்திலோ அல்லது பொது அறிவிலோ சிறந்து விளங்கவில்லை. எங்கள் சமூகத்தில் இன்றும் அங்கும்சரி, இங்கும்சரி அது ஒரு குறைபாடாகவே இருக்கின்றது. ஆனாலும் இதை எல்லாம் கடந்து ஆங்காங்கே பல படைப்பாளிகள் உருவாக்கப் பட்டிருந்தார்கள் என்பதே உண்மை.

Continue Reading →

முற்றுப் பெறாத உரையாடல்கள் – 8 : கவிதை எனும் பெருவெளியில் – சொல்லில் இருந்து மௌனத்திற்கு! விம்பம் நடாத்திய சமகாலக்கவிதைகள் நிகழ்வு தொடர்பாக–

முற்றுப் பெறாத உரையாடல்கள் – 8  : கவிதை எனும் பெருவெளியில் – சொல்லில் இருந்து மௌனத்திற்கு! விம்பம் நடாத்திய சமகாலக்கவிதைகள் நிகழ்வு தொடர்பாக--  - வாசன்  -இதுவரை நான்கு முழுநாள் நாவல் கருத்தரங்கினை நடாத்தி முடித்த விம்பம் கலை இலக்கிய திரைப்பட கலாச்சார அமைப்பானது கடந்த சனிக்கிழைமை (03.11.2018) அன்று முழுநாள் சமகால கவிதை அரங்கொன்றினை ஈஸ்ட்ஹாம் Trinity Centre London இல் வெற்றிகரமாக நடாத்தி முடித்திருந்தது. இலங்கை,இந்தியா, புகலிட நாடுகள் என்று உலகெங்கும் பரந்து கிடக்கும் சுமார் 20 கவிஞர்களின் படைப்புக்களை ஒரே அரங்கில் அறிமுகப்படுத்தவும், விமர்சனம் செய்யும் முகமாகவும் நடத்தப்பட்ட இந்நிகழ்வில் அருந்ததி ரட்ணராஜ், T.சௌந்தர் ஆகியோரது ஓவியக்கண்காட்சியும் இடம் பெற்றிருந்தது. 

மேற்குறித்த இரு ஓவியர்களினதும் ஓவியங்களினால் அலங்கரிக்கப்பட்டிருந்த ஒரு அற்புதமான அரங்க சூழலில் இந்நிகழ்வானது காலை 11 மணியளவில் ஆரம்பமாகியது. மூன்று அமர்வுகளாக நடந்தேறிய இந்நிகழ்வில் இங்கு உரையாற்றுபவர்கள் ஒவ்வொருவருக்கும் 15 நிமிடங்கள் மட்டுமே பேசக் கொடுக்கப்பட்டது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

முதலாவது அமர்வினை மீனாள் நித்தியானந்தன் வழிநடத்தினார். முதலாவது உரையினை கவிஞர் சுகிர்தராணியின் ‘இப்படிக்கு ஏவாள்’ கவிதைத்தொகுதி குறித்து தோழர் வேலு அவர்கள் நிகழ்த்தினார். அவர் தனதுரையில் உடல் தொடர்பான வலிகளை வதைகளை ஆனந்தத்தை விபரிக்கும் சுகிர்தராணி சமூகப்பிரச்சினைகள் தொடர்பாக எப்போதும் தனது ஆழ்ந்த கருத்துக்களை வைப்பதாக கூறி அவரது கவிதைகள் மட்டுமல்லாமல் அது வெளிப்படுத்துகின்ற மொத்த சாராம்சத்தினை அவரது கருத்தியல் குறித்தும் பேசினார். 

நெற்கொழுதசனின் ‘வெளிச்சம் என் மரணகாலம்’ தொகுதி குறித்து குல சபாநாதனும் கலா ஸ்ரீரஞ்சனும் உரையாற்றினார்கள். குலசபாநாதன் இவரது கவிதைகள் தவறவிட்ட தருணங்களின் தவிப்புக்கள் என்றும் கலா ஸ்ரீரஞ்சன் துவாரங்கள் வழியாக சீறிப்பாயும் ஒளிக்கீற்றுக்கள் போல இக்கவிதைகள் ஒவ்வொருவர் எண்ணங்களிலும் வெவ்வேறு பரிமாணங்களாக பரிணமிக்கும் என்றும் குறிப்பிட்டனர்.

Continue Reading →

வாசிப்பும் யோசிப்பும் 312: “சொல்லும் செய்திகள்” -வி.என்.மதிஅழகனின் செய்தியறைக் கனவினை நனவாக்கும் படிக்கட்டு!

வாசிப்பும் யோசிப்பும் 311: வி.என்.மதிஅழகனின் செய்தியறைக் கனவொன்றை நனவாக்கும் படிக்கட்டாகச் 'சொல்லும் செய்திகள்'வி.என்.மதியழகன்புலம்பெயர்ந்த தமிழர்கள் நடத்தும் வானொலி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைக் கேட்கும்போதெல்லாம்,  பார்க்கும்போதெல்லாம் ஒரு காலத்தில் இலங்கை வானொலியில் எம்மை மறந்திருந்த காலம் நினைவுக்கு வருவதுண்டு. எவ்வளவு ஆர்வமாக அன்று வானொலி நிகழ்ச்சிகளைக் கேட்டு இரசித்தோம். எம்மை மறந்து இன்பத்தில் திளைத்தோம். இன்றம் கூட சற்சொருபவதி நாதன், இராஜேஸ்வரி சண்முகம், கமலினி செல்வராசன், சில்லையூர் செல்வராசன், அப்துல் ஹமீட், ராஜகுரு சேனாதிபதி கனகரத்தினம் வி.என்.மதியழகன், கே.எஸ்.ராஜா, விவியம் நமசிவாயம், கே.எஸ்.பாலச்சந்திரன், சுப்புலட்சுமி காசிநாதர், கமலா தம்பிராஜா என்று பலரின் பெயர்கள் பசுமையாக நினைவிலுள்ளன. அதற்குக் காரணம் அவர்கள் திறமையான கலைஞர்கள். ஒரு நிறுவனத்தில் முறையான நிர்வாகத்தில் கீழ், திறமையாகத் தம் ஆற்றலை வெளிப்படுத்த வேண்டிய சூழலில் பணி புரிந்துகொண்டிருந்தார்கள். தவறுகள் விட்டால் அவை அவர்களது பணியினைப் பாதிக்கும். இதனால் அவர்கள் கேட்பவர்களை மனத்திலிருத்தி நிகழ்ச்சிகளைத் தயாரித்தார்கள். செய்திகளை வாசித்தார்கள். தம் திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் நிகச்சிகளை நடாத்தினார்கள். ஆனால் புலம்பெயர்ந்து தமிழர்கள் வாழும் நாடுகளில் பல வானொலிகள், தொலைகாட்சிகளுள்ளன. ஆனால் இவற்றில் ஒலி(ளி) பரப்பாகும் நிகழ்ச்சிகளை நடத்தியவர்களின், பங்குபற்றியவர்களின் பெயர்களை நாம் அன்று எம்மை மகிழ்வித்தவர்களைப்போல் நினைவில் வைத்திருக்கின்றோமா?. வைத்திருப்போமா?

இதற்கு முக்கிய காரணங்களில் சில:  இங்குள்ள வானொலிகளும், தொலைக்காட்சிகளும் தனிப்பட்டவர்களின் வியாபாரங்களாக இருக்கின்றன; முறையான பயிற்சியற்ற பலர் செய்திகளை வாசிக்கின்றார்கள்; நிகழ்ச்சிகளை நடாத்துகின்றார்கள்; உச்சரிப்பில் தவறிழைக்கின்றார்கள்; போதிய தமிழறிவு, ஆய்வறிவு அற்றவர்களாக இருக்கின்றார்கள். இது போன்ற  காரணங்களினால் இவர்களால் என்றும் அழியாத கோலங்களாக நிலைத்து நிற்கும் நிகழ்ச்சிகளை வழங்க முடிவதில்லை.

இங்கு வானொலிக்கலைஞர்களாக, தொலைக்காட்சிக் கலைஞர்களில் எவ்வளவுபேர் முறையாக அத்துறைகளில் கல்வி கற்று, பயிற்சியெடுத்து பணியாற்ற வருகின்றார்கள்? இவர்களைப்போன்றவர்கள் இத்துறைகள் பற்றி , இத்துறைகளில் சிறந்து விளங்கியவர்களால் எழுதப்படும் நூல்களையாவது, விவரணக் காணொளிகளையாவது வாசித்து, பார்த்து விட்டுப் பணி புரிய வரவேண்டும். அதனால் அவர்கள் தயாரிக்கும், ஒலி(ளி) பரப்பும் நிகழ்ச்சிகளும் சிறக்க வாய்ப்புண்டு. இவ்விதமாக இத்துறைகளில் பயனளிக்கும் வகையில் எழுதப்பட்ட நூலொன்று அண்மையில் வெளியாகியுள்ளது. இதனை எழுதியவர் இத்துறையில் நீண்ட காலம் பணியாற்றிய  ஒருவர். இந்நூல்  இந்நூல் குறிப்பாகச் செய்தித்துறையினை மையமாக எழுதப்பட்டிருந்தாலும், இவ்விதமான துறைகளில் பணிபுரியும் வகையிலான நூலாகும், வாசிப்பவர்களுக்கும் இத்துறை பற்றிய அறிவினை அதிகரிக்கும் வகையில் எழுதப்பட்டுள்ள நூலாகும், இதனை எழுதியவர் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் , ரூபவாஹினி தொலைக்காட்சி ஆகியவற்றில் பணி புரிந்த வி.என். மதியழகன். இந்நூலின் பெயர் ‘சொல்லும் செய்திகள்’. இதனை அழகாகத் தயாரித்து வெளியிட்டுள்ளது ‘காந்தளகம்’ பதிப்பகம்.

இந்நூல் மிகவும் சுவையாக, எளிமையாக, வாசிப்பவர்களுக்கு இத்துறை பற்றிய புரிதலைத் தரும் வகையில் எழுதப்பட்டுள்ளது. செய்தித்தயாரிப்பில் இவ்வளவு விடயங்கள் இருக்கின்றனவா என்று வாசிப்போரைப்பிரமிக்க வைத்து விடுகின்றது.

இந்நூல் பதினைந்து அத்தியாயங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவற்றில் செய்தித்துறையின் வெற்றிக்கு, சிறப்புக்கு முக்கியமானவையாகக் கூறப்பட்ட விடயங்களில் முக்கியமானவையாகப் பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்:

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 311: எழுத்தாளர் அ.முத்துலிங்கத்தின் அடுத்த சிறுகதை ‘ஏர்னட்ஸ்ட் ஹெமிங்வே எழுதாத நாவலின் எழுதாத முதல் வரி’

எழுத்தாளர் அ.முத்துலிங்கம் அவர்கள் தமிழகத்தின் வெகுசன இதழ்களில் குறிப்பாக ஆனந்த விகடனில் நன்கு பிரபலமான எழுத்தாளர். வெகுசன இதழ்களில் புனைகதைகள் எழுதும் எழுத்தாளர்கள் அவ்விதழ்களின் வாசகர்களின் விருப்பு, வெறுப்புகளை அறிந்து அவர்களைக் கவரும் வகையில் எழுதுவதை விரும்புவார்கள். அ.மு.வின் புனைகதைகளை வாசிக்கும்போது இதனை அவதானிக்கலாம். தனது கற்பனையைத் தொய்வில்லாமல், கதைக்கு மேல் கதையாக நகர்த்திச்செல்வதில் வல்லவர் அவர்.


புனைகதைகளை வாசகர்களின் சுவைகளின் அடிப்படையில் எழுதுவதனாலோ என்னவோ சில வேளைகளில் அபுனைவுகளைப்பற்றி விபரிக்கையிலும் அவற்றிலும் வாசிக்கும் அல்லது கேட்டுக்கொண்டிருக்கும் வாசகர்களைக் கவரும் வகையில் புனைவுகளைக் கலந்து விடுகின்றாரோ என்று என்றொரு சந்தேகம் எனக்குண்டு. அச்சந்தேகத்தை ஊர்ஜிதம் செய்வதுபோல் நேற்று நடைபெற்ற வானொலி, தொலைக்காட்சிக் கலைஞர் வி.என்.மதியழகனின் ‘சொல்லும் செய்திகள்’ நூல் வெளியீட்டில் அவர் எழுத்தாளர் ஏர்னஸ்ட் ஹெமிங்வே பற்றிக் குறிப்பிட்ட சம்பவம் அமைந்திருந்தது. அவர் தனது உரையில் எழுத்தாளர் ஏர்னஸ்ட் ஹெமிங்வே ஒரு நாள் தனது கதையொன்றினை ஆரம்பிக்கத் தகுந்த சொற்கள் கிடைக்காது போனதனால் தன்னைத்தானே சுட்டுத் தற்கொலை செய்து கொண்டார் என்று குறிப்பிட்டார். நானறிந்தவரையில் ஹெமிங்வே தனது இறுதிக்காலத்தில் மன அழுத்தம் போன்ற பல்வேறு உளவியல்ரீதியிலான மற்றும் உடல்ரீதியிலான நோய்களுக்குள்ளாகியவர். அதன் காரணமாகவே அடிக்கடி மருத்துவ நிலையங்களில் சிகிச்சை பெற்று வந்தவர். சில சமயங்களில் அவற்றில் தங்கியும் சிகிச்சை பெற்று வந்தவர். அவ்விதம் ஒருமுறை தம் உளவியல் சிக்கல்களுக்காகச் சிகிச்சை பெற்றுத் திரும்பி வந்தவர் தன்னைத்தானே சுட்டுத் தற்கொலை செய்துகொண்டார். ஆனால் பிரபல எழுத்தாளர்களின் நாவல்களின் முதல் வரிகளைப்பற்றிக் குறிப்பிடத்தொடங்கிய அ.மு அவர்கள் ஏர்னஸ்ட் ஹெம்ங்வேயின் முடிவையும் சுவையானதொரு புனைவாக்கி விட்டார். ஒருவேளை அவரின் அடுத்த சிறுகதையின் தலைப்பு ‘ஏர்னட்ஸ்ட் ஹெமிங்வே எழுதாத நாவலின் எழுதாத முதல் வரிகள்’ என்பதாக இருக்குமோ?

Continue Reading →

ஆய்வு: திருவள்ளுவரின் கடலியல் நுண்ணுர்வு

- முனைவர். ப.சு. மூவேந்தன், உதவிப்பேராசிரியர், தமிழியல்துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலைநகர்-608002, தமிழ்நாடு இந்தியா. -ஆய்வு நோக்கம் (Objectives)
சங்கப் புலவர்கள், அக்காலத்தில் மக்கள் வாழ்வியலில் நன்கறிந்திருந்த பொருட்களைக் கொண்டு, அரியாதவற்றை அறிவித்தற்கு, அறிந்தபொருள்களை ஆண்டுள்ளனர். சங்கத் தமிழர்கள் கடலியல் அறிவினை மிகச் சிறப்பாகப் பெற்றிருந்தனர். இதனால் கடலும், கடல்சார்ந்த வாழ்வியலும் அவர்களிடையே இரண்டறக் கலந்திருந்தது. அவ்வகையில் திருவள்ளுவரின் கடலியல் அறிவுநுட்பம் குறித்தும், அதனைப் பாடலின் கருத்தினை விளக்குவதற்குப் பொருத்தமுறப் பயன்படுத்தியுள்ள பாங்கினைக் குறித்தும் விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கம் ஆகும்.

கருதுகோள் (Hypothesis)
திருவள்ளுவர் நிலம், மண், நீர், மலை, கடல் முதலானவற்றின் இயற்கையியல் அறிவு கைவரப்பெற்றவர். அவரது இயற்கையியல் அறிவின்நுட்பம் திருக்குறளின் காட்சிப்பொருள் விளக்கத்திற்கு மட்டுமல்லாது, அறக்கருத்துரைக்கும் துணைபுரிந்துள்ளது பெருந்துணை புரிந்துள்ளது என்பதே இக்கட்டுரையின் கருதுகோள் ஆகும்.

கருவிச்சொற்கள் (keywords)
கடல், பிறவிப்பெருங்கடல், நெடுங்கடல், காமக்கடல். நாமநீர்…

முன்னுரை
சங்க இலக்கியங்கள் இன்றும் நிலைத்து நிற்பதற்குக் காரணம் அவை இயற்கை சார்ந்த வாழ்வியல் மரபுகளைக் கொண்டுள்ளமையே. சங்க கால வாழ்வியலில் இயற்கை மனித வாழ்க்கையின் எல்லாத் தளங்களிலும் நீக்கமற நிறைந்திருந்தது. இயற்கையைத் தவிர்த்த வாழ்க்கையை அவர்களால் எஞ்ஞான்றும் மேற்கொள்ள இயலவில்லை. இதன்பொருட்டே புலவர்கள் இயற்கைக்கு மிக முக்கியமான இடத்தைத் தந்து பாடல்களைப் படைத்தளித்தனர். இயற்கையியல் அறிவும், இயற்கையில் தோய்ந்த உள்ளமும் சங்கப் புலவர்கள் பெற்றிருக்க வேண்டிய அறிவுப்புலமாக இருந்துள்ளது. இவ்வாறு இயற்கையை மிகநுணுக்கமாகப் பதிவு செய்த புலவர்களை இன்றும் போற்றி நிற்கும் மரபினைக் காணலாம். சங்கச் சமூகத்தில் நிலவிய இயற்கையியல் அறிவும், இயற்கையியலின்வழி வெளிப்படுத்தப்பட்ட பாடுபொருள் தளமும் அற இலக்கியங்களின் படைப்பாக்கத்திற்கு அடிப்படை அலகாக அமையவில்லை. தூய்மையான அறிவுரைத் தரும் போக்கில் அமைந்த அறநூல்களில் இயற்கையியல் அறிவு புலவர்களுக்கு இரண்டாம் நிலையினதாகவே இருந்துள்ளது. இதனை மடைமாற்றம் செய்யும் நோக்கில் அறிவுரை புகட்டுவதற்கும் இயற்கையை ஒரு கூறாகப் படைத்துக் காட்டியவர் திருவள்ளுவர் என்பது அவரது நூலின்வழி புலனாகக் காணலாம். அறநூல்களில் தலையானதாகத் திகழும் திருக்குறளில் இயற்கைப் பொருட்களில் ஒன்றான கடல் பற்றியும் அதனைப் பொருள்விளக்கத்திற்குக் கையாண்ட திருவள்ளுவரின் அறிவுநுட்பம் குறித்தும் இக்கட்டுரையில் விளக்கப்படுகின்றது.

சங்க வாழ்வில் கடலியல் அறிவு
சங்கத் தமிழர்கள் நீரியல் அறிவுச் சிந்தனையை மிகச்சிறப்பாகப் பெற்றிருந்துள்ளனர். மனித வாழ்வியலுக்கு மிக முக்கியத் தேவையான ஒன்றாக நீர் அமைந்திருப்பதனை அறிந்த்தன்வழி, அதனைத் திறம்பட மேலாண்மை செய்வதற்கும், தேவைப்படும் காலங்களில் அந்நீரைத் தேக்கி வைத்துப் பயன்படுத்துவதற்குமான அறிவினைக் கைவரப் பெற்றிருந்தனர். இதேபோன்று சங்க மக்கள் வாழ்வில் கடலியல் வாழ்வு மிக முக்கியமான இடத்தினைப் பெற்றிருந்துள்ளது. நாம் வாழும் உலகம் கடலால் சூழப்பட்டது. கடலும் கடல் சார்ந்த வாழ்வும் நெய்தல் நிலமாகக் கருதப்பட்டு, கடலியல் செல்வங்களைக் கொண்டு வாழும் வாழ்க்கை முறை சங்கத் தமிழர்களிடத்தில் பெருவழக்காக இருந்துள்ளது. இதன்பொருட்டே பூமிப்பரப்பில் பெருமளவினதாக அமைந்திருக்கும் கடலைப் பற்றி சங்கப் புலவர்கள் மிகச்சிறப்பாக அறிந்து வைத்திருந்ததோடு, அதன் தன்மைகளையும், சிறப்புகளையும், பெருமைகளையும் உணர்ந்திருந்து, பாடற்புனைவில் கடலுக்கும், கடல்சார் வாழ்வியலுக்கும் மிகச்சிறப்பான இடத்தினைத் தந்துள்ளனர்.

Continue Reading →

சிவபுரம் இராஜராஜேஸ்வரம்

 தென்கிழக்கு நோக்கில் கோவில். சோழ அரச குடும்பத்தார் தனிப்பட கவனம் செலுத்தி வந்த கோவில் கூவம் ஆற்று ஓட்டத்தை அண்மித்து அமைந்த ஊரடகம் சிவபுரம் மகாதேவர் கோவில் ஆகும். இக்கோவில் இராசராசப் பெருவேந்தனால் அவன் பெயர் இட்டு கட்டப்பட்டதால் இராஜராஜேஸ்வரம் என கல்வெட்டுகளில் குறிக்கப்பட்டு உள்ளது. இந்த சிவபுரம் இராஜராஜேஸ்வரம் கடம்பத்தூர் – பேரம்பாக்கம் – தக்கோலம் செல்லும் வழியில் பேரம்பாக்கத்தில் இருந்து 4 கி.மீ. தொலைவில் இடம் கொண்டுள்ளது. நெடுஞ்சாலையில் இருந்து நடக்கும் தொலைவில் தான் இக்கோவில் உள்ளது. கூவம் ஆறு பிரிகின்ற கேசாவரம் அணை இங்கிருந்து வடகிழக்கே 4 கி.மீ. தொலைவில் உள்ளது. இந்த தலத்திற்கு அண்மையில் தான் நரசிங்கபுரம், திருஇலம்பையங் கோட்டுர், திருவிற்கோலம் ஆகிய தேவாரப் பாடல் பெற்ற தலங்களும் உள்ளன. இந்த சிவபுரம் இராஜராஜேஸ்வரமுடைய மகாதேவர் கோவிலுக்கு தெற்கே 4 கி.மீ. தொலைவில் உள்ள திருவிற்கோலமான கூவம் ஏரியில் இருந்து கால்வாய் அமைத்து தண்ணீர் கொண்டு வந்த செய்தி இக்கோவில் கல்வெட்டில் பதிவாகி உள்ளது. இக்கோவிலின் புறச்சுவர் முழுவதும் மேல் சுவர்முதல் அடிச்சுவர் வரை கல்வெட்டுகளாகவே நிரம்பி உள்ளன. கல்வெட்டு, தொல்லியல் ஆர்வம் உள்ளவருக்கு இக்கோவில் நல்லதொரு பயிற்சிக் களம் எனலாம்.

இக்கோவில் தமிழ்நாடு மாநில தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. அதற்கான அறிவிக்கைப் பலகையும் இங்கே காணமுடிகிறது. இக்கோவிலைச் சுற்றி மண்மேடு எழுப்பி அதில் தோட்டம் அமைத்து பேணி வந்ததற்கான குறியீடுகள் தென்படுகின்றன. ஆனால் இப்போது தோட்டம் மட்டும் பேணப்படுவிதில்லை என்பது ஆங்காங்கு ஒழுங்கற்று வளர்ந்துள்ள செடிகளால் அடையாளப்படுகின்றது.

Continue Reading →

திருவிற்கோலம் திரியபுராந்தக ஈசன்

திருவிற்கோலம் திரியபுராந்தக ஈசன்மனிதரை மனிதர் விலக்கி வைக்கும் தீண்டாமை இழிவு தமிழ் வேந்தர் ஆட்சியில் 14 ஆம் நூற்றாண்டு வரை தமிழக கோவில்களில், தமிழகத்தில் வழக்கில் இல்லை என்று காட்ட ஒரு கல்வெட்டைத் தன்னகத்தே வைத்து வா என்று விளக்குகின்றது கூவமான திருவிற்கோலம்.

திருவிற்கோலம் தேவாரப் பாடல் பெற்ற காலத்தில் திருவிற்கோலம் என்ற பெயரில் தான் இருந்தது. பின்னாளில் அங்கே கூவம் ஏரி கட்டப்பட்டதும் திருவிற்கோலம் என்ற பெயர் அருகிய வழக்காகி கூவம் என்ற பெயர் நிலைபெற்றுவிட்டது. திருவிற்கோலம் பேரம்பாக்கம் பூந்தன்மல்லி வழியில் பேரம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து 5 கி.மீ தொலைவில் உள்ளது. இங்கிருந்து திருஇலம்பையன்கோட்டூர், சிவபுரம், நரசிங்கபுரம் ஆகிய கூவ ஆற்று சைவ, வைணவ தளங்கள்  3 – 4 கி.மீ. இடைவெளியில் உள்ளன. இக்கோவில் நல்ல முறையில் பேணப்படுகின்றது. இக்கோவிலில் சற்றொப்ப முப்பது கல்வெட்டுகள் படியெடுக்கப்பட்டு SII XXVI / தென்னிந்திய கல்வெட்டுகள் 26 இல் அச்சாகி வெளிவந்துள்ளன.

கல்வெட்டு எண் 364 கிழக்கு சுவர்

1.   ஸ்வஸ்தி ஸ்ரீ திரிபுவனச் சக்கரவர்த்திகள் ஸ்ரீ ரா
2.   ஜாதிராஜ தேவற்க்கு யாண்டு ஏழாவது(1169-1170)
3.   ஜயங்கொண்ட சோழமண்டலத்து மணவி
4.   ற் கோட்டத்து கூவமான தியாகசமுத்திர நல்லூ
5.   ர் ஆளுடையார் திருவிற்கோலமுடையாற்கு இவ்வூர்
6.   தும்பூரன் திருவரங்கமுடையார் அகமுடையான்
7.   சங்கம்பை வைத்த திருநுந்தா விளக்கு க ஒன்றுக்கும் இக்கோ
8.   யிலில் சிவப்ராமணவாரணர் கௌஸிகன் செந்நெற்பெற்றானும், கௌத
9.   மன் உடையபிள்ளையும், கௌதமன் திருவலமுடையா
10. (னும்), காஸ்யபன் தேவப்பிள்ளையும், – – –  -கணபதி ப
11. ட்டனும் இவ்வாண்டு அப்பசி மாஸத்து இவ்வனையோமும் கை
12. க்கொண்ட அன்றாடு நற்பழங்காசு 15. இக்காசு பதினைந்து
13. ம் (பொலியூட்டாக) கைக்கொண்டு இத்திருநந்தா விளக்கு ஒன்
14. றும் சந்திராதித்தவரை செலுத்தக் கடவோமானோம் இவ்
15. வனைவோம். இப்படிக்கு கௌஸிகன் செந்நெல்
16. (ந)ற் பெற்றாந் எழுத்து இப்படிக்கு இவை கௌதமன்

Continue Reading →

தித்திக்கும் தீபாவளி திருப்பம் பல தந்திடட்டும் !

தித்திக்கும்  தீபாவளி திருப்பம்  பல  தந்திடட்டும்  ! - மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா ... மெல்பேண் ... அவுஸ்திரேலியா  -

தீபாவளித் தினத்தில்  தித்திப்பு  உண்ணவேண்டும் 
கோபமெனும்  குணமகற்றி  கொண்டாடி  மகிழவேண்டும்
பாவமென நினைக்கின்ற செயலனைத்தும் துரத்தவேண்டும்
பக்குவமாய் ஒன்றுகூடி பாங்காக மகிழவேண்டும்

உள்ளமதில் உண்மைதனை  ஊற்றெடுக்கச்  செய்யவேண்டும்
கள்ளமுடை  எண்ணமதை களைந்தெறியச் செய்யவேண்டும்
நல்லவர்கள் ஆசிபெற்று நம்வாழ்வு சிறக்கவேண்டும்
நமக்குவாய்க்கும் தீபாவளி நல்வெளிச்சம் காட்டிடட்டும்

Continue Reading →