ஈழத்து முன்னோடிப் படைப்பாளிகளிலொருவரான அறிஞர் அ.ந.கந்தசாமியின் தினகரனில் வெளிவந்த தொடர் நாவல் ‘மனக்கண்’. பின்னர் இலங்கை வானொலியில் சில்லையூர் செல்வராசனால் வானொலி நாடகமாகவும் தயாரிக்கப் பட்டு ஒலிபரப்பப்பட்டது. ‘பதிவுகளில்’ ஏற்கனவே தொடராக வெளிவந்த நாவலிது. ஒரு பதிவுக்காக தற்போது ஒருங்குறி எழுத்தில் மீள்பிரசுரமாக வெளிவருகின்றது. அ.ந.க. எழுதி வெளிவந்த ஒரேயொரு நாவலிது. இன்னுமொரு நாவலான ‘களனி வெள்ளம்’ , எழுத்தாளர் செ.கணேசலிங்கனிடமிருந்தது, 1983 இலங்கை இனக்கலவரத்தில் எரியுண்டு போனதாக அறிகின்றோம். ‘தோட்டத் தொழிலாளர்களை மையமாக வைத்து எழுதப்பட்ட நாவலிதுவென்றும் அறிகின்றோம். – பதிவுகள்
12-ம் அத்தியாயம்: மொட்டைக் கடிதம்
பத்மாவின் தோழி தங்கமணியை நாம் ஏற்கனவே பம்பலப்பிட்டி எஸ்கிமோ ஐஸ்கிறீம் பார்லரிலும், பல்கலைக் கழகத்துக்கு முன்னாலிருக்கும் நிழல் படர்ந்த பஸ் தரிப்பிலும், பல்கலைக் கழக இரசாயன ஆய்வு கூடத்திலும் சந்தித்திருக்கிறோம். இன்று வத்தளையிலுள்ள அவள் வீட்டில் அவளைச் சந்தித்து வருவோமா? தங்கமணி வசித்த வீடு வத்தளை மெயின் வீதியில் பஸ்தரிப்புக்குச் சமீபமாக அமைந்திருந்தது. அவள் அவ்வீட்டில் தன் தாய், தந்தையருடன் வசித்து வந்தாள். அவளது ஒரே தம்பியான சிங்காரவேல் வவுனியாக் கச்சேரியில் இலிகிதனாகக் கடமையாற்றினான். அப்பா கொழும்பில் ஏதோ கம்பெனியில் வேலை. வீட்டில் அம்மாவைத் தவிர, பேச்சுத் துணைக்கு ரெஜினா இருந்தாள். ரெஜினா கொழும்பில் ஒரு வியாபாரத் தலத்தில் சுருக்கெழுத்து – தட்டெழுத்து வேலை செய்பவள். தங்கமணி வீட்டில் பணம் செலுத்தி “போர்டராக” இருந்தாள். ரெஜினாவுக்கும் தங்கமணிக்கும் நல்ல சிநேகிதம். பொழுது போகாத நேரங்களில் பேசிக் கொண்டிருப்பதற்கும் விடுமுறைத் தினங்களில் சினிமாவுக்குப் போய் வருவதற்கும் ஒருவருக்கொருவர் துணையாக இருந்தார்கள்.
நாம் தங்கமணியைச் சந்திருப்பதற்கு சென்ற தினம் மகா சிவராத்திரி விரத நாள். விடுமுறையும் கூட. ரெஜினாவும் வீட்டிலிருந்தாள். தங்கமணி வீட்டு விறாந்தையில் ஒரு நாற்காலியில் தனது கிமோனாவில் ஒய்யாரமாக உட்கார்ந்திருந்தாள். ரெஜினாவோ விறாந்தைக்கு முன்னால் முற்றத்தில் தன் கிளைகளை ஒரு தட்டுப் போல் அலைப்பரப்பி வளர்ந்திருந்த ‘ஜாம்’ மரத்தில் ‘ஜாம்’ பழங்களைத் துள்ளித் துள்ளிப் பிடுங்கிக் கொண்டிருந்தாள். நன்றாய்க் கனிந்து வாய்க்கு ருசியான பதத்தில் பழுத்திருந்த கனிகள் கிடைத்த போது அவற்றைத் தன் வாயில் இட்டுக் கொண்டும், சாப்பிட பதமாகக் கிடைத்தவற்றை “இந்தா தங்கம், உனக்கு பிடி!” என்று தன் அன்புத் தோழிக்கு அவற்றை வீசிக் கொண்டும் நர்த்தனமாடினாள் அவள். ரெஜினா தங்கமணியைப் போல் கால்கள் வரை நீண்ட கிமோனாவை அணியாமல் கவுனே அணிந்திருந்தாள். அவள் ஒரு புள்ளி மான் போல் துள்ளித் துள்ளிக் கனி பறித்த காட்சி வீதியில் போய்க் கொண்டிருந்த இளைஞர்களின் கண்களுக்குப் பெரு விருந்தாயிருந்தது. அவளது உருண்டு சிவந்த கால்களின் எழில் அவ்வாறு வீதி இளைஞர்களின் கவனத்தைக் கவர்ந்தது, தங்கமணிக்குச் சிறிதும் பிடிக்கவில்லை. ஆனால் அதை வெளிக்குக் காட்டாமல் வேறு காரணத்துக்காக அவளை அழைப்பது போல் “ரெஜி! இங்கே வா. நான் உன்னிடம் ஒரு முக்கியமான விஷயம் பேச வேண்டும்!” என்று கூறினாள்.
“இரு தங்கம். இன்னும் கொஞ்சம் பழங்கள் பிடுங்கி விட்டு வருகிறேன். இன்றைக்கு முழு நாளும் விடுமுறைதானே? பேசிக் கொண்டேயிருக்கலாம்”
“அது சரி, நீ பழத்தைப் பிடுங்கத் துள்ளும் பொழுது உன்னுடைய சட்டை குடை மாதிரி காற்றிலே விரியுது”
“அப்படியா? அப்படியானால் வெகு அழகாயிருக்குமே?”
“அழகாயிருக்குது. ஆனால் ரோட்டிலே போறவர்கள் பார்க்கிறார்கள்!”
“பார்க்கட்டுமே, எங்களுக்கென்ன நட்டம்”
தங்கமணிக்கு ரெஜினாவின் துடுக்குப் பேச்சுப் பிடிக்காவிட்டாலும் “வாடி ரெஜி, காய்களைப் பிடுங்கி வீணாக்காமல் பழுக்க விடு. சரியாக நாளை விட்டு அடுத்த நாள் பதமாய்ப் பழுத்திருக்கும்.” என்றாள்.
“காயா?” என்றாள் ரெஜினா ஆச்சரியத்துடன். எண்ணி மொத்தம் முப்பது கனிந்த ‘ஜாம்’ கனிகளை அவள் இது வரை நன்றாகச் சுவைத்துச் சப்பிட்டிருந்ததே அவளது ஆச்சரியத்துக்குக் காரணம்.
“ஓகோ, அப்படி என்றால் நீ பழங்களா சாப்பிடுகிறாய்! அப்போது பழத்தை எல்லாம் நீ சாப்பிட்டு விட்டுக் காய்களை எனக்கு எறிகிறாய், அப்படித் தானே?”
ரெஜினா தன்னை மீறி வந்த சிரிப்பை முகத்தைத் திருப்பி உதட்டைப் பிதுக்கி அடக்கிக் கொண்டு, “சீ! தங்கம், அப்படிச் செய்வேனா? இந்தா உனக்கொரு நல்ல பழம்” என்று கையுள் மறைத்து வைத்திருந்த செக்கச் செவேலென்று கனிந்த மூன்று பழங்களில் ஒன்றைத் தங்கத்தை நோக்கி வீசினாள்.
Continue Reading →