நெருப்பின் கண்டறிவே மானுட வாழ்வில் சிறந்த பண்பாடு, பாதுகாப்பு மற்றும் தற்காப்பு நிலைக்கு வித்திட்டது எனலாம். அதே நிலையிலேயே வீடுகளில் நெருப்பிட்டு மிஞ்சும் சாம்பலுக்கும் பல்வேறு பயன்பாடு மற்றும் வழக்காற்று நிலைகள் நிலவுகின்றன. மலை மற்றும் காடுகளில் வாழ்ந்த சித்தர்கள் தம் உடலின் வெப்பநிலையினைத் தக்கவைத்துக் கொள்ளவும், உடம்பிலிருக்கும் நீர்கோர்வையினை வற்றச்செய்யவும், உடல் துர்நாற்றத்தைத் தவிர்க்கவும் உடல் முழுக்க சாம்பல்பூசி வாழ்ந்தது நாம் அறிந்தவொன்றே.
நெற்றியில் திருநீறு அணிவதும்கூட மருத்துவ நிலையில் தலையில் கோர்த்திருக்கும் நீரினை அகற்றுவதற்கான கூறினை உள்ளடக்கியதாக விளங்குகின்றது. நீலகிரியில் வாழ்கின்ற படகர் இன மக்களின் வாழ்வில் காணப்படும் சாம்பல் பற்றிய வழக்காறுகளை ஆய்வதாகவும், படகர் இன மக்களின் மரபுச் சடங்குகளுள் ஒன்றான சாம்பல் வரையும் சடங்கினை விளக்குவதாகவும் இக்கட்டுரை விளங்குகின்றது.
நீலகிரி படகர் இன மக்கள் சாம்பலை இன்று ‘பூதி’ என்று அழைக்கின்றனர். இது ‘விபூதி’ என்ற சொல்லின் முதற்குறையாக இருக்கலாம். ஆனால் சாம்பலினைத் ‘து’ என்ற ஓரெழுத்து ஒருமொழியில் குறிப்பதே படகர்களின் பழைய வழக்காகும். படர்கள் தம் வீடுகளில் பயன்படுத்தும் மூங்கில் முறவகையினை வீட்டின் சுவற்றில் ஆணியறைந்து அதில் தொங்கவிடுகின்றனர். பூச்சி அரிப்பிலிருந்து அம்முறங்களைப் பாதுகாக்க இம்முறையினைக் கையாளுகின்றனர். முறங்கள் பூச்சி அரிப்பினால் பாதிப்புறும்போது அதை ‘து’ ஆகிவிட்டது, அதாவது தூசியாகிவிட்டது, சாம்பல் போல் ஆகிவிட்டது என்று கூறுகின்றனர்.