இச்சிறுகதை உண்மைச்சம்பவத்தின் அடிப்படையில் உருவான சிறுகதை. ஒரு முறை வீடற்ற வீதி மனிதர் ஒருவரை ‘டொராண்டோ’ நகரின் வீதியொன்றில் சந்தித்தேன். அவருடனான எனது அனுபவத்தை மையமாக வைத்து உருவான கதையிது. கதையில் அம்மனிதரின் உண்மைப்பெயரை , உரையாடலின்போது அவர் கூறிய பெயரை, பாவித்துள்ளேன். பின்னரே அறிந்துகொண்டேன் அவ்வீதி மனிதர் உரையாடலின்போது கூறிய தகவல்கள் பொய்யல்ல என்பதை. அம்மனிதரின் முழுப்பெயர்ட் கெவின் கிளார்க் (Kevin Clarke). இவரைப்பற்றிய விக்கிபீடியாத் தகவல்களைப் பின்வரும் இணைப்பில் காணலாம்: https://en.wikipedia.org/wiki/Kevin_Clarke_(politician)
இவருடன் உரையாடியபோது இவர் தான் ‘டொரோண்டோ நகரின் முதல்வர் பதவிக்குப் போட்டியிடப்போவதாகக் கூறியபோது நான் அதனை உளவளர்ச்சி பாதிப்புற்ற வீதி மனிதர் ஒருவரின் கூற்றாகவே எண்ணியிருந்தேன். இருந்தாலும் நடந்த சம்பவத்தை மறக்காமல் பதிவு செய்ய வேண்டுமென எண்ணி அதனை ஒரு சிறுகதையாக எழுதினேன். அவ்விதம் எழுதுகையில் அம்மனிதர் தெரிவித்த பெயரினையே பாவித்தேன். இச்சம்பவம் நடந்து சில மாதங்களுக்குப் பின்னர் பத்திரிகைச் செய்தியொன்றில் பே வீதியும் , அடிலெய்ட் வீதியும் சந்திக்கும் சந்திக்கண்மையில் வீடற்ற மனிதர்களுக்கிடையில் ஏற்பட்ட சண்டை பற்றிக் குறிப்பிடப்பட்டிருந்தது. அதில் ஒருவர் மீது வழக்குப் பதிவான விடயத்துடன் அம்மனிதரே ‘டொராண்டோ மாநகர முதல்வர் பதவிக்குப் போட்டியிட்ட கெவின் கிளார்க் என்னும் விபரமும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அப்பொழுதே அறிந்து கொண்டேன் அம்மனிதரும் நான் சந்தித்த வீதி மனிதரும் ஒருவரென்பதை. அவர் கூறியவை பொய்யல்ல என்பதை. அம்மனிதருடனான உரையாடலின்போது அம்மனிதர் எனக்குக் கூறியவற்றை வைத்தே கதையின் உரையாடலினைப் பின்னியுள்ளேன். விக்கிபீடியாவிலுள்ள இவரைப் பற்றிய குறிப்புகள் இவர் ஒரு காலத்தில் ஸ்கார்பரோ பகுதியில் ஆசிரியராகவிருந்ததைத் தெரிவிக்கின்றன.
‘டொரோண்டோ’ அனுபவங்களை மையமாக வைத்துப் பல சிறுகதைகளை எழுதியுள்ளேன். அவ்வகையில் அவ்வனுபவங்கள் மறக்க முடியாதவை; முக்கியமானவை. –