“தேடி சோறு தினம் தின்று
பல சின்னஞ் சிறுகதைகள் பேசி
மனம் வாடித் துன்பமிக உழன்று
பிறர் வாடப் பலசெயல்கள் செய்து
நரை கூடிக் கிழப்பருவம் எய்தி
கொடும் கூற்றுக் கிரையெனப்பின் மாயும்
பல வேடிக்கை மனிதரைப் போல
நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ”
இந்த பாரதியின் வரிகள் எத்தனை கம்பீரமானவை. வாழ்வின் அத்தனை நம்பிக்கையையும் ஊட்டும் அருங்கவிதை.
2020 ஆம் வருடத்தை இப்படி ஒரு புத்தகத்துடன் துவங்குவது மனதிற்கு ஒரு தெம்பையும் நம்பிக்கையும் ஊட்டியது என்று சொல்லலாம். அந்தப் புத்தகம் ஈழத்து புலம்பெயர் மூத்த எழுத்தாளர் முருகபூபதி அவர்களின் படைப்பான “இலங்கையில் பாரதி” என்பதாகும்.
சமூகத்தின் பொதுவுடமைக்காக எழுதிய மகாகவி பாரதி, நாட்டு சுதந்திரத்திற்காகவும், நலிவுற்றோர் சுதந்திரத்திற்காகவும் பாடிய பாடல்களும் கவிதைகளும் ஏ. வி. மெய்யப்ப செட்டியாரின் ( ஏவிஎம்) கையில் காப்புரிமை எனும் பெயரில் சிறைப்பட்டுக் கிடந்தது. இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர்தான் அவற்றுக்கு சுதந்திரம் கிடைத்தது என்று சொன்னால் அது மிகையல்ல!
மகாகவி பாரதியை ஈழத்து மக்கள் எப்படி எல்லாம் வாசித்து நேசித்து வாழ்ந்து வந்தனர், வருகின்றனர் என்பதையும் அந்தத் தேசியக் கவியின் நூற்றாண்டுவிழா கொண்டாட்டத்தை ஈழப் பத்திரிகைகளும், எழுத்தாளர்கள் மற்றும் இலக்கியவாதிகளும் எப்படி எல்லாம் பெருவிழாவாக கொண்டாடினார்கள் என்பதையும் நல்முத்துக்கள் கோர்த்து எடுத்தார் போல் மிக அழகாக முருகபூபதி பதிவு செய்துள்ளார்.