எமது இலக்கிய சகோதரன் மல்லிகை சி. குமார் மறைவுக்கு எமது ஆழ்ந்த அனுதாபம்

எமது இலக்கிய சகோதரன் மல்லிகை சி. குமார் மறைவுக்கு எமது ஆழ்ந்த அனுதாபம்

ஜனவரி. 28, 2020
எமது இலக்கிய சகோதரன் மல்லிகை சி. குமார் அவர்களின் மறைவுச்செய்தி அறிந்து ஆழ்ந்த துயரமடைந்தோம். கடந்த 2018 ஆம் ஆண்டில்தான் அவர் தனது மனைவியையும் இழந்திருக்கிறார் என்பது தெரிகிறது. மலைநாட்டு எழுத்தாளர் மன்றம் 1972 காலப்பகுதியில் அட்டனில் நடத்திய மாநாட்டில்தான் அவரை முதல் முதலில் சந்தித்தேன். அக்காலப்பகுதியில் இலக்கியப்பிரவேசம் செய்தவர்களில் அவரும் ஒருவர். குறிப்பிடத்தகுந்த மலையக படைப்பாளி. கொடகே விருதும் கிடைக்கவிருந்த தருணத்தில் – அவரது மற்றும் ஒரு நூல் வெளியாகவிருக்கும் வேளையில் அதனையெல்லாம் பார்க்காமல் விடைபெற்றுள்ளார்.

Continue Reading →

என் எழுத்துலக அனுபவங்கள் பற்றிய நனவிடை தோய்தல்!

எழுத்தாளர் த.இந்திரலிங்கம்எழுத்தாளர் த.இந்திரலிங்கம் பற்றி..

இலங்கைத்தமிழ் இலக்கியத்தில் எழுத்தாளர் த.இந்திரலிங்கத்துக்கு முக்கிய பங்குண்டு. இவரது நகைச்சுவைப்புனைகதைகள் முக்கியமானவை. அவை தவிர அறிவியற் கட்டுரைகளும், சிறுகதைகளும் முக்கியமானவை. உண்மையில் எனக்கு இவரை எனது பால்யபருவத்திலிருந்து தெரியும். ஆனால் இவர்தான் எனது அபிமான எழுத்தாளர்களில் ஒருவரான த.இந்திரலிங்கம் என்பது அண்மையில்தான் தெரிய வந்தது. இவரது படைப்புகள் இதுவரையில் நூலுருபெறாத காரணத்தால் பலருக்கு இவரது பிரமிக்கத்தக்க பங்களிப்பு தெரிவதில்லையென்று நினைக்கின்றேன். இவரது படைப்புகள் சிறுகதைகள், கட்டுரைகள், நகைச்சுவைப்புனைகதைகள் , அறிவியற் கட்டுரைகள் யாவும் தொகுக்கப்பட வேண்டும். குறைந்தது மின்னூல்களாகவாவது தொகுக்கப்பட்டு ஆவணப்படுத்தப்பட வேண்டும். சிந்தாமணியில் எழுபதுகளில் தொடராக வெளியான இவரின் ‘தம்பரின் செவ்வாய்ப்பயணம்’  சாவியின் ‘வாசிங்டனில் திருமணம்’ நாவலையொத்த படைப்பு. வெளியான காலகட்டத்தில் விழுந்து விழுந்து சிரித்து வாசித்த அனுபவமுண்டு. அண்மையில் இவரிடமொரு நேர்காணலைச் செய்யும் ஆர்வத்தால் கேள்விகள் சிலவற்றை அனுப்பியிருந்தேன். அவற்றை உள்வாங்கிச் சுருக்கமாகத் தன் எழுத்துலக அனுபவங்களை இக்கட்டுரை வாயிலாகப் பகிர்கின்றார் த.இந்திரலிங்கம் அவர்கள். இக்கட்டுரை எழுத்தாளர் த.இந்திரலிங்கத்தைப்பற்றிய சுருக்கமான அறிமுகத்தை நமக்குத் தருகின்றது. அவ்வகையில் முக்கியமானதோர் ஆவணம். – வ.ந.கிரிதரன் –


எனது முதலாவது கட்டுரை ‘ஈழநாடு’ மாணவர் பக்கத்தில் 1965ஆம் ஆண்டு பிரசுரமானது. என்னுடைய பால்ய நண்பரும் , சமகால மணவருமான புருஷோத்தமனுடைய ‘ரோஜாவின் ராஜா நேரு’  என்ற கட்டுரை மாணவர் பக்கத்தில் பிரசுரமான காரணமே நான் எனது கட்டுரைரையை ‘ஈழநாட்டு’க்கு அனுப்புவதற்குக் காரணமாக அமைந்தது.  புருஷோத்தமன் பிறகு வேறொரு கட்டுரையும் எழுதவில்லை.  அவர் அந்தக் கட்டுரையை எழுதிய காரணமே என்னை எழுத்துலகுக்கு இழுத்து விடுவதற்காகத்தானோ என்று இப்போது நினைக்கிறேன்,

‘ஈழநாடு’ வாரமலரும் பின்னர் எனது கட்டுரைகளைப் பிரசுரிக்க ஆரம்பித்தது.  வறட்டுக் கட்டுரைகளை எழுதுவதில் எனக்கு அதிக நாட்டம் இல்லை. என்பதை நான் ஆரம்பத்திலேயே உணர்ந்தேன். 1966ம் ஆண்டு ‘வீரகேசரி’ வார வெளியீடு எனது கட்டுரையை வெளியிட்டு எனக்குச்  சன்மானப் பணமாக பத்து ரூபாவும் அனுப்பியிருந்தது. அதன் பின்னர்  இலக்கியக் கட்டுரைகளையும் ‘வீரகேசரி’யில்  எழுதினேன். பின்னர் தினகரனும் எனது கட்டுரைகளையும் , ‘சொர்க்கத்தின் கதவுகள்’ என்ற சிறுகதையையும் பிரசுரித்தது. ‘தினகரன்’ தீபாவளி, பொங்கல், புதுவருடம் போன்ற தினங்களில் விசேட அனுபந்தம் பிரசுரிப்பதுண்டு. அதுவும் வர்ணத்தில் வரும். அந்த விசேட இதழ்களில் எனது நகைச்சுவை கலந்த நடைச்சித்திரங்கள் பிரசுரமாகின.

Continue Reading →