கலாச்சாரத்தை மையப்படுத்தல் என்ற அடிப்படையினைப் பெரியார் தனது சிந்தனை முதன்மையாகக் கொண்டிருக்கிறார். இந்தியாவில் நடைபெற வேண்டிய எழுச்சி கலாச்சாரக் கேள்விகளைக் கொண்ட எழுச்சிதான் என்பதனைத் தனது செயல்பாடுகளில் வகைப்படுத்தியிருக்கிறார். “ஒரு தாராளவாதியாக, தேசத்துரோகியாக, மொழிப்பற்றை விட்டவராக, சிலை உடைப்பாளராக, எதிர்க் கலாச்சார வாதியாக, எல்லா விதமான பற்றுகளுக்கும் எதிரியாக, சுய உறுதியாகத்தையே விடுதலை என்று உணர்ந்தவராய், மொழிந்தவராய்ப் பெரியாரை அணுகுதல் என்பது பெரியாரின் மறைக்கப்பட்ட பரிமாணங்களையும் மவுனமாக்கப்பட்ட சிந்தனைகளையும் மட்டுமின்றி இந்த நோக்கில் நிகழ்காலச் சூழலையும் விளங்கிக்கொள்ளப் பயன்படும்” (அ. மார்க்ஸ், பெரியாரின் கண்டுகொள்ளப்படாத சிந்தனைகள் மீதான ஒரு கவன ஈர்ப்பு, 2018, ப. 152) பண்பாட்டு அடிப்படையிலான நிகழ்காலச் சூழலின் மீது விமர்சனம் செய்த பெரியாரின் சிந்தனை மரபினைக் கடவுள் மறுப்பாளர் என்ற பொதுப் பின்னணியில் வைத்து குறுக்கிவிடுகின்றனர். பண்பாட்டு அடிப்படையிலான முன்னெடுப்புகள்தான் பெரியாரியச் சிந்தனையின் மையப்புள்ளி என்பதனைக் கிராம்சியின் அணுகுமுறைகளிலிருந்து உணர்ந்து கொள்ளமுடியும்.
கிராம்சி காந்தியின் போராட்ட வடிவங்களைப் பிற்பற்றியதோடு அதனைக்குறித்து நேர்மறையான எண்ணங்களையும் கொண்டிருக்கிறார். இத்தாலியின் அடக்குமுறைகளுக்கெதிராகப் பண்பாட்டு வடிவங்களை ஒருங்கிணைக்க வேண்டிய தேவையினைக் குறித்துப் பேசிய கிராம்சி பண்பாட்டுச் சமூகங்களில் அரசியல் முன்னெடுப்புகளைவிட பண்பாட்டு முன்னெடுப்பு வடிவிலான நடைமுறை செயல்பாட்டு விமர்சனங்கள் முக்கியமானது என வலியுறுத்துகிறார். இந்த வகையான சமூக நிலைப்பாடுகளைக் குறித்து மார்க்ஸின் கருத்துக்களும் நோக்கத்தக்கது. இந்தியச் சமூகம் நிலைப்படுத்தப்பட்ட வடிவிலானது. எத்தகைய அரசியல் மாற்றங்கள் வந்தாலும் பண்பாட்டு அடிப்படையிலான மாற்றங்கள் ஏற்படுவதில்லை. “ஆசியக் குழுமச் சமூகத்தில் முன்னுரிமை அரசனின் ஆளுகை உரிமையாகவோ, தெய்வமாகவோ குறிக்கப்படலாம். இவ்வகைச் சமுதாயங்களில், எந்தவொரு தனிநபரும் தனது குலம் அல்லது சமுதாயத்தின் தொப்புள் கொடியிலிருந்து தன்னைத் துண்டித்துக்கொள்வதில்லை” (ந. முத்துமோகன், மார்க்சியம் வர்க்கமும் அடையாளமும், 2013, ப. 19) இந்தியச் சமூகத்தின் பிணைப்பு மணமுறையுடன் தொடர்ந்து கட்டமைக்கப்பட்டு வரும் குழுவின் பிளவுகளில் தங்கியிருக்கிறது. இந்த வகையான சமூகங்களில் ஆதிக்கம் செலுத்துவது அரசியல் மட்டுமல்ல. தெய்வமும் பண்பாட்டு வழக்கங்களும் என்பதனையும் சிந்திக்க வேண்டியுள்ளது.