எனது நாவலான தமிழகத்தில் ஓவியா பதிப்பக வெளியீடாக வெளியான ‘குடிவரவாளன்’ நாவல் பற்றி பற்றி முனைவர் ஆர்.தாரணி ‘An Immigrant’: A poignant autobiographical sketch of V.N. Giritharan’ (‘சுயசரிதைத்தன்மையிலான, உணர்வைத்தூண்டும் விவரணை’) என்னும் தலைப்பில் ஆய்வுக்கட்டுரையொன்றினை எழுதியுள்ளார். இவர் ஏற்கனவே எனது படைப்புகள் பற்றிய ஆய்வுக்கட்டுரைகளைக் கருத்தரங்குகளில் சமர்ப்பித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர் என் படைப்புகளை அறிந்துகொண்டது இணையத்தின் மூலமாகவே என்பது இணையத்தின் ஆக்கபூர்வமான நன்மையொன்றினை வெளிப்படுத்துகின்றது. அக் கட்டுரையின் முக்கியமான என்னால் தமிழாக்கம் செய்யப்பட்ட பகுதிகளை இங்கு பகிர்ந்துகொள்கின்றேன். நாவலினை நன்கு உள் வாங்கித் தன் கருத்துகளைப் பகிர்ந்துள்ளார். அவருக்கு என் நன்றி.
இந்நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பான ‘An Immigrant’ (லதா ராமகிருஷ்ணன் மொழிபெயர்த்தது) நாவலைத் தனது புகலிட இலக்கியங்கள் பற்றிய பிரிவுக்காக மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் தேர்வு செய்திருந்த விடயத்தினை இணையம் வாயிலாக அறிந்துள்ளேன். குடிவரவாளன் நாவல் ஆங்கிலத்தில் ‘An Immigrant’ என்னும் தலைப்பில் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
An Immigrant’: A poignant autobiographical sketch of V.N. Giritharan’ (‘சுயசரிதைத்தன்மையிலான, உணர்வைத்தூண்டும் விவரணை’) – முனைவர் ஆர்.தாரணி ; தமிழில்: வ.ந.கிரிதரன்-
‘குடிவரவாளன்’ கனடிய எழுத்தாளர் வ.ந.கிரிதரனுக்குப் புனைகதையைப் பொறுத்தவரையில் மிகப்பெரிய பாய்ச்சல். இந்நூலானது அந்நிய நாடொன்றில் எல்லா வகையான முயற்சிகளும் தோல்வியுற்ற நிலையில் , இருப்புக்கான இன்னல்களை எதிர்கொள்ளும் ஒரு மனிதனைப்பற்றிக்கூறுவதால் மிகவும் கவனத்துடனும் கருத்தூன்றியும் வாசிக்க வேண்டிய ஒன்று, இக்கதையானது ஒவ்வொருவரினதும் இதயத்தையும் எழுச்சியூட்டுவதாக அமைந்துள்ளது. இக்கதையின் நாயகனான இளங்கோ என்னும் மனிதனின் தப்பிப்பிழைக்கும் போராட்டத்தை அதிகமாக இப்படைப்பு வலியுறுத்தியபோதிலும், தற்போதும் அனைத்துலகத்தையும் சீற்றமடையைச்செய்துகொண்டிருக்கும், மிகவும் கொடிய ,ஈவிரக்கமற்ற ஶ்ரீலங்காவின் இனப்படுகொலையினைத்தாங்கிநிற்கும் பலமான வாக்குமூலமாகவும் விளங்குகின்றது. கதாசிரியர் வ.ந.கிரிதரன் தன் சொந்த அனுபவங்கள் மூலம் எவ்விதம் தமிழ் மக்கள் சிங்களக்காடையர்களின் கொடுமைகளால் பாதிக்கப்பட்டார்கள் என்பதை இந்நூலில் வெளிப்படுத்தியிருக்கின்றார். இலங்கையில் நடைபெற்ற 1983 ஜூலைக் இனக்கலவரத்தில் தம் உயிர்களை, உடமைகளை, நாட்டை மற்றும் மானுட அடையாளத்தைக்கூட இழந்த மக்களுக்கான தனித்துவம் மிக்க அஞ்சலியாகவும் இந்நூல் இருக்கின்றது. நாவலின் ஆரம்ப அத்தியாயங்கள் சிலவற்றில் , கதாசிரியர் , கலவரத்தினுள் அகப்பட்ட இளங்கோ என்னும் இளைஞனின் நிலையினை உயிரோட்டத்துடன் விபரிக்கின்றார். தன் சொந்த மண்ணில் இனத்துவேசிகளால் சிக்கவைக்கப்பட்டுள்ளதாக உணரும் இளங்கோ அந்தப்பூதங்களிலிருந்து தன்னால் முடிந்த அளவுக்குத்தப்புவதற்கு முயற்சி செய்கின்றான். இப்படைப்பானது கலவரத்தைப்பற்றிய , இளங்கோ என்னும் மனிதனின் பார்வையில் , நெஞ்சினை வருத்தும் வகையிலான ஆசிரியரின் விபரிப்பாகும்.
Continue Reading →