யூலிசஸ்ஸை நினைவுபடுத்தும் நீர்வை பொன்னையன் ! அவர் நம்மோடு வாழ்ந்த ஹோமர் படைத்த யூலிசஸின் குணாம்சமுடையவர் !!

நீர்வை பொன்னையன்- பேராசிரியர் மெளனகுரு -இலியட் ஒடிஸி எனும் கிரேக்க காவியத்தில் ஹோமர் படைத்த பாத்திரம் யூலிசஸ். ஹெலன் எனும் அரச குமாரியை மீட்க பத்து ஆண்டுகள் கிரேக்கத்தில் நடை பெற்ற போர் பிரசித்தமானது. கிரேக்க மக்களின் பண்டைய வீரயுக வாழ்வோடு அது சம்பந்தமாக எழுந்த கதைகள் பின்னிப் பிணைந்தவை. பத்து ஆண்டுகள் போரிலும் பத்து ஆண்டுகள் பிரயாணத்திலும் கழித்தவன் யுலிஸஸ்.  ஓய்வு என்பதே அறியாதவன், சும்மா இருக்கத் தெரியாதவன். புதிய, புதிய அனுபவங்களைத் தேடுபவன். புதிய புதிய திசைகளை நோக்கிச் செல்ல விரும்புவன். தேடல் நோக்கு அவனோடு பிறந்த ஒன்று. கிழப்பருவமெய்திய யூலிசஸ் நாட்டுக்கு மீள்கிறான்.

இளமைப் பருவத்தில் துடிதுடிப்போடு ஓடி ஆடித் திரிவதைப் போல இப்போது இருக்க அவன்முதுமை உடல் இடம் தருவதாயில்லை. எனினும் நாடுவந்து. ஓய்வு பெற்ற அவனால் எல்லோரையும் போல உண்டு, உடுத்து உறங்கி வறிதே இருக்க முடியவில்லை. சுறுசுறுப்பான அவன் மனம் அதற்கு இடம் தரவில்லை. மற்றவர்கள் “சும்மா” வாழ்வது அவனுக்கு வறிதாகத் தெரிகிறது. தெனிசன் பாடிய இலியட் ஒடிசியில் வரும் யூலிசஸ் கூற்றை மொழி பெயர்த்துத் தந்துள்ளார் விபுலானந்த அடிகளார். சும்மா இருப்பதை வெறுத்த யூலிசஸ், “ பெறுபயன் சிறிதே, பெறுபயன் சிறிதே வறிதிங்குறையும் மன்னன் யானே “ எனத் தன்னைத்தானே விமர்சித்துக் கொள்கிறான். விளைவு குன்றிய களர் நிலமும் புகைபடிந்த சாப்பாடும், மூப்பு வந்து சேர்ந்த மனைவியும் வந்து சேர, எதுவும் செய்யாமல் வறிதேயிருப்பது அவனுக்கு வாழ்க்கையில் அலுப்பையே தருகின்றது.

Continue Reading →

சிறுகதை: மேரி

- செ.டானியல் ஜீவா -வானம் இலவம் பஞ்சுக் கூட்டத்தால் நிறைந்து கிடந்தது. சுற்றிலும் ஆள் அரவமற்ற தனிமையின் சூழலை உணர்ந்தேன். மனம் ஒரு நிலையற்றுத் தாவித்தாவி அலைந்தது. ஏனோ என் நினைவுகள் எங்க ஊர் கடற்கரையை நோக்கி நகர்ந்தது. கொடியில் காயப்போட்ட ஆச்சியின் சேலையைப்போல் பரவைக்கடல் பரந்து விரிந்து உறக்கமற்று என்னைப்போல் கிடந்தது.

சிந்தையில் ஏதேதோ நினைவுகள் வந்து மனதை அலைக்களித்தது. கடந்துவிட்ட என் வாழ்க்கையில் வந்துபோன உறவுகளின் நினைவுகள் ஏக்கத்தைச் சுமந்தும், ஒருசில வலிகளைச் சுமந்தும் இதயத்தை வருடிச் சென்றன. அந்த நினைவுகளில் நட்புக்கு முதலிடம் இருந்தது. காதலுக்கும் அதில் இடம் இருந்தது. என் காதல் ஒருதலைக் காதலானதால் மனதுக்குள் புதைந்தே கிடந்தது. தமிழனின் வாழ்வை புரட்டிப்போட்ட ஈழப்போர், என் வாழ்க்கையின் திசையையும் மாற்றியது. நெருக்கடியான நேரத்தில் என் கூடவே இருந்த நண்பன் ‘எமில்’ என் நினைவுக் கண்ணில் வந்து வட்டமிட்டான்.

என் நண்பன் எமிலுக்கும், மேரிக்கும் இடையில் காதல் தொடங்கிய காலகட்டம். முதலில் காதலைச் சொன்னது மேரிதான். ஆனால் எமில் அதை உடனும் ஏற்றுக்கொள்ளவில்லை. அவன் மறுப்புக்குக் காரணம் இருந்தது. சின்ன வயதிலிருந்தே தன்னை எடுத்துவளர்த்த வீட்டிற்கு மருமகனாகப் போவது அவனுக்கு உறுத்தலாக இருந்தது. ஆனால், மேரி தொடர்ச்சியாக மேற்கொண்ட முயற்சியால் அவனைத் தன் வழிக்கே கொண்டு வந்துவிட்டாள். அவளுடைய விடாப்பிடியான அன்பு அவனை ஆட்கொண்டது. எமில் காதலை ஏற்றுக்கொண்டதிலிருந்தே மேரிக்கு அவன்மேலிருந்த பிரியம் முன்னைவிட பலமடங்காகியது.

மேரியின் அப்பா சூசையப்பர் நல்ல உயரமானவர். சிவலையாக இருப்பார். அவருடைய முகம் மேலிருந்து கீழாக ஒடுங்கி ஏசுவின் முகம் போல் இருக்கும் .மேரியின் அம்மாவைக் காதலித்தே திருமணம் செய்தவர். சாதுவானவர், கபடமற்றவர் என்று ஊரில் பலர் அவரைப் பற்றிப் பேசிக் கொள்வார்கள். அவர் கதைக்கும் பொழுது அவருடைய பேச்சைக் கேட்டுக் கொண்டே இருக்கத் தோன்றும். மனைவி, பிள்ளைகள் மீது தீராத அன்பு கொண்டவர். யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் கடையொன்றில் வேலை செய்கிறார். அவரது மீசையைப் பார்த்து “அப்பா உங்கட மீசை பாரதியின் மீசை போல இருக்கிறது” என்று கிண்டல் செய்வாள் மேரி.

Continue Reading →

துயர் பகிர்வோம்: எழுத்தாளர் நீர்வை பொன்னையன்

காலம் விரைந்து கொண்டே இருக்கிறது என்பதை எமக்குத் தெரிந்தவர்கள் எங்களை விட்டுப் பிரியும் போது மீண்டும் நினைவூட்டுகின்றது. கொரோனா வைரஸ்ஸின் பாதிப்பால் உலகமே உறைந்து போயிருக்கும் இச்சந்தர்ப்பத்தில்,…

Continue Reading →

அஞ்சலி: மூத்த எழுத்தாளர் நீர்வைபொன்னையன் நேற்று கொழும்பில் மறைவு! முற்போக்குச்சிந்தனைகளிலிருந்து தடம் புரளாதவர்!

நீர்வை பொன்னையன்இலங்கையின் மூத்த எழுத்தாளர் நீர்வைபொன்னையன் நேற்று  ( மார்ச் 27 ஆம் திகதி)  வியாழக்கிழமை மாலை கொழும்பில் தமதில்லத்தில் மறைந்தார். உலகெங்கும் கொரோனோ வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில், இலங்கையிலும் ஊரடங்கு உத்தரவு  நடைமுறையிலிருக்கும் இக்காலப்பகுதியில் நீர்வை பொன்னையன் அவர்களின் மறைவும் எதிர்பாராமல் நிகழ்ந்துள்ளது. நாளை மறுதினம் 29 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்னாரது இறுதி நிகழ்வுகள் நடைபெறவிருப்பதாக அறியப்படுகிறது.

இம்மாதம் 24 ஆம் திகதிதான் நீர்வைபொன்னையன் தமது 90 வயதையும் பூர்த்திசெய்திருந்தார்.  இறுதியாக அவர் எழுதி முடித்திருந்த நூலொன்றும்  அச்சாகி வெளிவரவிருந்தது. கொரோனோ வைரஸ் அச்சுறுத்தலின் பதட்டமான சூழ்நிலையினால் தமது புதிய நூலையும் பார்க்கமுடியாமல் நிரந்தரமாக கண்களை மூடிக்கொண்டார். இனி எம்மிடம் எஞ்சியிருக்கப்போவது நீர்வை பற்றிய நினைவுகள் மாத்திரமே.  அவர் பற்றி முன்னர் நான் பதிவுகளில் எழுதிய குறிப்புகளை கீழே பார்க்கவும்.


திரும்பிப்பார்க்கின்றேன். அறுபது ஆண்டுகாலமாக அயர்ச்சியின்றி எழுதிவரும் இலங்கையின் மூத்த முற்போக்கு படைப்பாளி நீர்வை பொன்னையன்.

இலங்கையில்  தமிழ்  கலை,  இலக்கிய  பரப்பில்  மாவை,   வல்வை, கரவை,    சில்லையூர்,  காவலூர்,  திக்குவல்லை,  நீர்கொழும்பூர், நூரளை,    நாவல்  நகர்,  உடப்பூர்,  மாத்தளை   முதலான  பல  ஊர்கள் பிரசித்தமாவதற்கு   அங்கு  பிறந்த  பல  கலைஞர்களும் படைப்பாளிகளும்   காரணமாக  இருந்துள்ளனர். ஊரின்  பெயரையே   தம்முடன்  இணைத்துக்கொண்டு இலக்கியப்பயணத்தில்   தொடரும்  பலருள்  நீர்வை   பொன்னையனும்   ஒருவர்.   இலங்கையில்  மூத்த இலக்கியப்படைப்பாளியான   அவர்  சமீபத்தில் அவுஸ்திரேலியாவுக்கு   வருகை  தந்து  சிட்னியில்  தமது  புதல்வியின்   குடும்பத்தினர்களுடன்  தங்கியிருப்பதாக  தகவல் கிடைத்து   அவருடன்  தொடர்புகொண்டேன். வடபுலத்தில்    நீர்வேலியில்  1930   ஆம்  ஆண்டு  பிறந்த  நீர்வை பொன்னையன்,    தமது    ஆரம்பக்கல்வியை    நீர்வேலி    அத்தியார் இந்துக்கல்லூரியில்    ஆரம்பித்து   பின்னர்    மட்டக்களப்பு  – கல்லடி சிவானந்தா   கல்லூரியிலும்  தொடர்ந்து  பயிற்றப்பட்ட  ஆங்கில ஆசிரியராக   கிழக்கிலங்கையில்  சம்மாந்துறை   முஸ்லிம் பாடசாலையில்    பணியாற்றிவிட்டு    இந்தியாவில்   கல்கத்தா பல்கலைக்கழகத்தில்   பயின்று  பட்டதாரியாக  தாயகம்  திரும்பினார்.

Continue Reading →

அஞ்சலி: எழுத்தாளர் நீர்வை பொன்னையன்

நீர்வை பொன்னையன்எழுத்தாளர் நீர்வை பொன்னையனின் மறைவு பற்றி முகநூற் பதிவுகள் மூலம் அறிந்துகொண்டேன். எழுத்தாளர் நீர்வை பொன்னையன் என்றால் முதலில் நினைவுக்கு வருவது அவரது ‘மேடும் பள்ளமும்’ சிறுகதைத்தொகுதிதான். தனது இருபத்தேழாவது வயதிலிருந்து எழுத்துத்துறைக்கு வந்தவர் எழுத்தாளர் நீர்வை பொன்னையன். அவர் தான் எழுதிய முதலாவது சிறுகதை வெளிவந்த ஆண்டு  1957 என்று அண்மையில் ஆதவன் தொலைக்காட்சியில் நடைபெற்ற நேர்காணலொன்றில் கூறியிருக்கின்றார். அது வெளியானது ஈழநாடு வாரமலரில் என்றும் கூறியிருக்கின்றார். அதனைப்பாராட்டி அப்போது ஈழநாடு ஆசிரியராகவிருந்த இரா. அரியரத்தினம் தனக்குக் கடிதமொன்றினை எழுதியதாகவும் அந்நேர்காணலில் அவர் கூறியிருக்கின்றார். அதே சமயம் 1961ஆம் ஆண்டு வெளியான தனது முதலாவது கதைத்தொகுதியான ‘மேடும் பள்ளமும்’ தொகுதிக்கான முன்னுரையில் அவர் தான் முதலாவதாக எழுதிய சிறுகதை ‘புயல்’ என்று குறிப்பிட்டிருக்கின்றார். மேலும் அத்தொகுதியி;லுள்ள சிறுகதைகளை வெளியிட்டதற்காக தேசாபிமானி, தினகரன், வீரகேசரி, கலைமதி, தாமரை, தமிழன், கலைச்செல்வி ஆகியவற்றில் வெளிவந்தவை என்றும் குறிப்பிட்டு நன்றி தெரிவித்திருக்கின்றார். அங்கு அவர் ஈழநாடு பற்றியெதுவும் குறிப்பிடவில்லை. இக்குழப்பம் எனக்கு அண்மையில் அவர் நேர்காணலைக் கேட்டதிலிருந்து ஏற்பட்டதொன்று. ஏனென்றால் அவரது ‘மேடும் பள்ளமும்’ சிறுகதைத்தொகுதியைப் பல வருடங்களுக்கு முன்னர் வாசித்ததிலிருந்து அவரது முதற்கதை ‘புயல்’ என்றே எண்ணியிருந்தேன். ஒரு வேளை அவர் அத்தொகுதி வெளியானபோது ஈழநாடு பற்றிக் குறிப்பிட மறந்திருக்கலாம். முதற்கதை ‘புயல்’ என்று தவறுதலாகவும் குறிப்பிட்டிருக்கலாம். 1957 ஆம் ஆண்டுக்குரிய ஈழநாடு வாரமஞ்சரிப் பிரதிகளைப் பார்த்து முடிவு செய்ய வேண்டிய விடயமிது.

இருந்தாலும் ‘மேடும் பள்ளமும்’ அவரது முதற்கதையோ இல்லையோ அவரது ஆரம்பக் கதைகளிலொன்று. 1930ஆம் ஆண்டு பிறந்த அவர் தனது இளமைப்பருவத்திலேயே சிறுகதைகள் எழுதத்தொடங்கி விட்டார். எனக்கு நீர்வை பொன்னையன் என்றால் முதலில் நினைவுக்கு வருவது அவரது முதற் சிறுகதைத்தொகுதியான ‘மேடும் பள்ளமும்’தான். அதிலுள்ள ‘மேடும் பள்ளமும்’ சிறுகதைதான். அவரது ஆரம்ப சிறுகதையே அவரை நினைவு படுத்தும் சிறுகதையாக அமையும் வகையில் சிறப்பாக எழுதியிருப்பது அவரது எழுத்தாற்றலுக்குச் சான்று. ‘மேடும் பள்ளமும்’ சிறுகதையின் கரு இதுதான்:  அக்கிராமத்தின் உயர்குடி நில உடமையாளன் ஒருவனிடமிருந்து நிலத்தை குத்தகைக்கு எடுத்து நெல் விளைவித்துக் கொண்டிருந்தான் ஒரு தொழிலாளி. அவன் சமூகத்தின் அடிமட்டத்தைச் சேர்ந்த தாழ் குடிகளில் ஒருவன். பயிருக்குப் பயன்படாது என்ற நிலைலியிருந்த மேட்டு நிலத்தை எடுத்து நெல் விளைவித்தான் அவன். கடந்த இரு வருடங்களாக அவனுக்கு நட்டத்தை ஏற்படுத்திய அந்த மேட்டு நில வயல் அவ்வருடம் அவனுக்கு நல்ல விளைச்சலைக் கொடுத்தது. வழக்கமாக விளைச்சலைக் கொடுக்கும் அந்நில உடமையாளனின் பள்ள நில வயல் அம்முறை பெய்த பெரு மழை ஏற்படுத்திய அழிவினால் பாதிப்புற்றிருந்தது. இதனால் மனம் புழுங்கிய அந்நில உடமையாளன் அத்தொழிலாளியை உடனடியாகவே குத்தகைப்பணப் பாக்கியைக் கட்டும்படி வற்புறுத்தினான். அவ்விதம் கட்டாவிட்டால் அவனது விளைச்சலைத் தானே சாகுபடி செய்யப்போவதாகப் பயமுறுத்தி இறுதியில் அவ்விதமே செய்கின்றான். அத்தொழிலாளியையும் அடித்துப் பள்ள வயலின் மூலையில் போட்டு விடுகின்றான். இதனால் வெகுண்டெழுந்த தொழிலாளர்கள் ஒன்று அந்நில உடமையாளனுக்குக்கெதிராகத் திரண்டு எழுகின்றார்கள். அம்மேட்டு நிலத்தை நோக்கி, தாழ் நிலத்து வயலில் அடிபட்டுக் காயமடைந்து கிடந்த அந்தத்தொழிலாளியையும் சுமந்தபடி மேட்டு நிலத்தை நோக்கிச் செல்கின்றார்கள். இதுதான் கதை. இச்சிறுகதையினை நீர்வை பொன்னையன் அவர்கள் சிறப்பாகவே எழுதியிருக்கின்றார். இதுவொரு குறியீட்டுக் கதை. வர்க்கமற்ற சமுதாயத்துக்கான போராட்டத்துக்குத் தொழிலாளிகள் திரண்டெழுவதை விபரிக்கும் குறியீட்டுக்  கதை.

Continue Reading →