வாசகனை கட்டிப்போடும் `சர்வதேச தமிழ்ச் சிறுகதைகள்’ ஓர் அறிமுகம்

வாசகனை கட்டிப்போடும் `சர்வதேச தமிழ்ச் சிறுகதைகள்’  ஓர் அறிமுகம்எழுத்தாளர் கே.எஸ்.சுதாகர்`சர்வதேச தமிழ்ச் சிறுகதைகள்’ – கனடா தமிழ் எழுத்தாளர் இணையம் தனது 25 வருட நிறைவை முன்னிட்டு, 2019 ஆம் ஆண்டு நடத்திய சர்வதேச சிறுகதைப்போட்டியில் தேர்வான சிறுகதைகளின் தொகுப்பு. இனிய நந்தவனம் பதிப்பகத்தினால் இவ்வருடம்(2020) இத்தொகுப்பு வெளிவந்திருக்கின்றது.

கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் தற்போதைய தலைவர் குரு அரவிந்தன் இந்தக் கதைகளைத் தொகுத்திருக்கின்றார். இவர் ஏற்கனவே மகாஜனக்கல்லூரி 100வது ஆண்டு விழாவை முன்னிட்டு, அகில இலங்கை மாணவர்களுக்கான சிறுகதைப்போட்டியொன்றை வெற்றிமணி இதழ் மூலம் நடத்தியிருந்தார். கனடாவில் சிறுகதைப் போட்டி மூலம் தமிழ் பெண்கள் எழுதிய `நீங்காத நினைவுகள்’ என்ற  முதல் சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டவர். இணையத்தின் செயலாளர் ஆர். என். லோகேந்திரலிங்கம் உதயன் பத்திரிகை மூலம் பல சிறுகதைப் போட்டிகள் வைத்து ஊக்குவிக்கின்றார். இவர்களது அனுபவங்கள் தான் இந்தத் தொகுப்பு வெளிவருவதைச் சாத்தியமாக்கியிருக்கின்றன.

மொத்தம் 16 சிறுகதைகளை உள்ளடக்கிய தொகுப்பின் முதல் பரிசு பெற்ற கதை ‘தாள் திறவாய்’. கதாசிரியர் எஸ்.நந்தகுமார் (நந்து சுந்து), சென்னை. நல்லதொரு சிறுகதைக்குரிய பல அம்சங்கள் கொண்டது இக் கதை. வாசகரை உள்ளே இழுத்துப் பிடித்து நகரவிடாமல் செய்கின்ற நடை. ரஞ்சனி நீதி நேர்மை நியாயம் கொண்டவள். மற்றவர்களிடமும் அவற்றை எதிர்பார்ப்பவள். தனது கணவன் பிள்ளையுடன் மதுரைக்குப் புறப்படுவதற்காக பஸ் ஸ்ராண்டில் நிற்கின்றாள். கணவன் கிருபாகரன் பயந்த சுபாவம் கொண்டவன். அவர்களது இரண்டுமாதக் குழந்தைக்குப் பசி வந்துவிட்டது. தாய்ப்பால் குடுக்க வேண்டும். புட்டிப்பாலும் எப்போதாவது குடுப்பாள். மறைவான இடம் தேடி அலையும்போது `தாய்மார்கள் பாலூட்டும் அறை’ தென்படுகின்றது. ஆனால் அது பூட்டிக்கிடக்கின்றது. அதைத் திறந்துவிடும்படி பொறுப்பானவர்களிடம் கேட்கின்றாள் ரஞ்சனி. அவர்களிடம் திறப்பு இல்லை. தட்டிக் கழிக்கின்றார்கள். குழந்தை வீரிட்டு அழுகின்றது. கணவனிடம் குழந்தைக்கு புட்டிப்பாலைக் குடுக்கும்படி சொல்லிவிட்டு அவர்களுடன் போராடுகின்றாள். அப்போது மதுரைக்குப் புறப்படும் பஸ் புறப்படவே கணவன் அவளை வந்து ஏறும்படி சொல்கின்றான். ரஞ்சனி பஸ்சிற்கு முன்பாகக் குந்தியிருந்து போராட்டம் நடத்துகின்றாள். விறுவிறுப்பாக நகரும் கதை அவளது பிரச்சினைக்குத் தீர்வு காண்பதுடன், எல்லாத் தாய்மார்களுக்குமான முடிவு ஒன்றைக் காண்பதுடன் நிறைவுக்கு வருகின்றது. சமுதாயத்துக்கு நல்லதொரு கருத்தைச் சொல்லிச் செல்லும் சிறப்பான கதை இது. ஆனால் கதையின் இறுதிப்பகுதியில் கிருபாகரன் என்ற கணவன் பாத்திரத்தை மறந்துவிடுகின்றார் கதாசிரியர். அல்லது வேண்டுமென்றே தவிர்த்து விடுகின்றார்.

இலங்கையில் நாட்டுப் பிரச்சினைகள் உக்கிரமடைந்திருந்த காலம். மலருக்கும்(வயது 18) ரஞ்சித்திற்கும் (22) திருமணம் நடக்கின்றது. மூன்று வருடங்களாக அவர்களுக்குக் குழந்தைப் பாய்க்கியம் இல்லை. பின்னர் அவள் கருவுற்றபோது, கடவுளுக்கு நன்றி சொல்வதற்காக கோயிலுக்குப் போகின்றான் ரஞ்சித். போனவன் போனதுதான். அப்புறம் வரவேயில்லை. இப்போது மலரின் மகளுக்கு 13 வயது ஆகின்றது. மலர் வேலைக்குப் போய் மகளை நல்ல நிலையில் வைத்துப் பார்க்கின்றாள். ஆனால் ஊர் மக்கள் அவளைப் பற்றி வேறுவிதமாகக் கதைக்கின்றார்கள். இதைப் பொறுக்கமுடியாத அவளின் நண்பி ராணி, மகளின் நன்மை கருதி மலரை மறுமணம் செய்யும்படி வற்புறுத்துகின்றாள். அதற்கு மலர் தரும் விளக்கம் தான் கதையின் உச்சம். காணாமல் போனவர்கள் பற்றிய தொடரும் கதைகளில் இதுவும் ஒன்று. டலின் இராசசிங்கம் இந்தக் கதையை எழுதியிருக்கின்றார். நல்ல தெளிவான நடை. ஆவலைத் தூண்டும் கதை.

Continue Reading →