உலக இலக்கியம் (சிறுகதை): ஒரு உண்மைக் கதை (வார்த்தைக்கு வார்த்தை நான் கேட்டவாறே)

- மார்க் ட்வைன் -முனைவர் ஆர்.தாரணிகுறிப்பு: ஆப்ரிக்க-அமெரிக்க எழுத்தாளர்களின் அடிமைக் கதைகூற்றுகள் (Slave Narratives) அமெரிக்காவின் சரித்திரத்தில் அடிமைகள் அனுபவித்த பல கொடுமைகளை அடிமைகளாக இருந்தவர்கள் வாயிலாகவே விளக்கும் ஒரு வகை இலக்கியம். தற்போது அடிமைத்தனம் என்பது முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டாலும், தற்போதைய ஆப்ரிக்க -அமெரிக்க எழுத்தாளர்கள் மனதிலும் அவர்களின் முன்னோர்கள் மனதிலும் உடலிலும் பட்ட காயங்களின் வடுக்கள் மிச்சம் இருக்கத்தான் செய்கிறது.

இந்தச் சிறுகதையும் அடிமைத்தனத்தின் ஒரு கொடூர முகத்தை விளக்கும் விதமாக இருந்தாலும், இதன் ஆசிரியர் மார்க் ட்வைன் கறுப்பினத்தவர் அல்லர். அவர் ஒரு அமெரிக்கர் . எனினும், இக்கதையில் அவர் ஒரு பாத்திரமாகவே மாறி (மிஸ்டோ சி) தன் வீட்டின் கறுப்பின மூதாட்டிப் பணிப்பெண்ணின் கதையைக் கேட்டு தான் அதை வார்த்தைக்கு வார்த்தை விவரிப்பதாக தலைப்பிலேயே குறிப்பிடுகிறார். மேலும், கதை முழுதும் ஆசிரியர் மார்க் ட்வைன் ஆப்ரிக்க -அமெரிக்கர்கள் (கறுப்பினத்தவர்) பயன்படுத்தும் பேச்சு வழக்கு வகையை சிறப்பாக பயன்படுத்தி உள்ளது இந்தக் கதையின் தனித்தன்மை

இந்த சிறுகதை பல கல்லூரிகளில் பாடபுத்தத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த கதையை வகுப்பில் எடுக்கும்போது மட்டும் கண்டிப்பாக என் கண்களில் தூசு விழுந்து விடும். கண்ணீர் சொரியும். ஒரு ஆசிரியராக, ஒரு மனுஷியாக என்னை மிகவும் பாதித்த கதை. மொழிபெயர்த்தல் மூலம் அனைவரும் அறிந்து கொள்ளவேண்டும் என்பது எனது விருப்பம். –


அது ஒரு கோடைகால அந்திவேளை. நாங்கள் அனைவரும் மலையின் உச்சியில் அமைந்திருக்கும் எங்களின் பண்ணைவீட்டின் முகப்பு வாயிலில் அமர்ந்திருந்தோம். நாங்கள் அத்தை என அன்புடன் அழைக்கும் எங்களின் பணிப்பெண்ணான ரேச்சல் கறுப்பினத்தவர் மற்றும் பணிப்பெண் என்ற காரணத்தினால் நாங்கள் அமர்ந்திருந்த முகப்புப்படிகளில் ஒருபடி கீழ் இறங்கி மிகவும் பவ்யமாக அமர்ந்திருந்தார். மிகவும் வலிமையான உடலும் , எடுப்பான தோற்றமும் கொண்டவர் அவர். அறுபது வயதாகி இருப்பினும் அவரது கண்களில் உள்ள ஒளி சிறிதும் குன்றாமலும், மன உறுதி குறையாதவராகவும் என்றுமே காணப்படுவார். மனநிறைவோடு கூடிய உற்சாகம் ததும்பி வழியும் மனுஷியான அவருக்கு சிரிப்பு என்பது ஒரு பறவை கீதம் இசைப்பதைப்போன்றே மிகவும் இலகுவான விஷயம்.

எப்போதும் போலவே அன்றைய நாளின் முடிவில் எங்களின் வார்த்தைத் தாக்குதலுக்கு ஆளாகி அன்றும் அமர்ந்திருந்தார். அதாவது எங்களின் கொஞ்சம் கூட கருணை காட்டாத விளையாட்டுத்தனமான கேலிக்கும் கிண்டலுக்கும் இலக்காகினாலும், அதை மிகவும் இலகுவாக எடுத்துக்கொண்டு ரசித்தவாறே இருந்தார். சுவாசத்திற்க்கான காற்றைக் கூட தொடர்ந்து வெளியிட இயலாத அளவுக்கு, உரத்த சிரிப்பொலியை தொடர்ந்து அலை அலையாய் எழுப்பிய அவர், அந்த இன்ப அதிர்வலை கொடுத்த அசைவின் காரணாமாக தனது முகத்தை இரு கரங்களிலும் தாங்கியவாறே அமர்ந்திருந்தார். அவ்வாறான ஒரு தருணத்தில் என் மனதில் திடீரென உதித்தது அந்த எண்ணம். நான் கூறினேன்:

“ரேச்சல் அத்தை! அறுபது வருட கால உங்கள் வாழ்வில் எவ்வித துயரையும் நீங்கள் எதிர்கொள்ளவே இல்லையா?”

அக்கணமே சிரிப்பலையின் அதிர்வை சடாரென நிறுத்தினார். ஏனோ சிறிது தயங்கினார். அங்கே மெல்லியதாய் ஒரு மௌனம் தேவையற்று நிலவியது. தன் தோள்பட்டையின் மேலாக தனது முகத்தைத் திருப்பி, என் பக்கம் நோக்கி குரலில் சிறிதளவு சிரிப்பு கூடதென்படாமல் கூறினார்:

Continue Reading →

வாசிப்பும் யோசிப்பும் 361: சஞ்சிகை அறிமுகம்: தேனருவி

தேனருவி சஞ்சிகைஅருண்மொழி தேவன் (அருண்மொழி) இவர் ஓர் எழுத்தாளர்; நாடக நடிகர். சஞ்சிகையொன்றினை 1962- 1964 காலகட்டத்தில் நடத்தியிருக்கின்றார். இவ்விதழின் உதவி ஆசிரியராகவிருந்தவர் பா.மகேந்திரன். இவரே பின்னர் தமிழ்த்திரையுலகில் புகழ் பெற்ற இயக்குநரும் , ஒளிப்பதிவாளருமான பாலு மகேந்திரா என்று , இப்பதிவுக்கான முகநூல் எதிர்வினையொன்றில் பிரபல கலை,இலக்கிய விமர்சகர் கே.எஸ்.சிவகுமாரன் சுட்டிக்காட்டியிருந்தார். அவருக்கு என் நன்றி.

அக்காலகட்டத்தில் வெளியான மேற்படி சஞ்சிகையின் நான்கு இதழ்களையே நூலகம் எண்ணிம நூலகத்தில் காண முடிந்தது. அவற்றைப் புரட்டிப்பார்த்தேன். எனக்கு மிகவும் வியப்பாகவிருந்தது. காரணம்? இலங்கைத்தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்த இலக்கியத்தின் பல்துறைகளையும் நேர்ந்த படைப்புகள் (கதை, கட்டுரை, கவிதை போன்றவற்றை அவ்விதழ்களில் என்னால் காண  முடிந்தது. ஆனால் இதுவரையில் நானறிந்த வரையில் இதழாசிரியரைப்பற்றியோ அல்லது சஞ்சிகை பற்றியோ எங்கும் வாசித்ததாக நினைவிலில்லை.. கலாநிதி சி. மௌனகுரு, கலாநிதி சித்திரலேகா மெளனகுரு & கலை,இலக்கிய விமர்சகரும், கவிஞனுமான எம். ஏ. நுஃமான் ஆகியோர் இணைந்து எழுதிய ‘இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத்தமிழ் இலக்கியம்’ என்னும் நூலிலும் தேடிப்பார்த்தேன். தேனருவி பற்றியோ அதன் ஆசிரியர் அருண்மொழி தேவன் (அருண்மொழி)  பற்றியோ தகவல்கள் எவற்றையும் அறிந்து கொள்ள முடியவில்லை. ஒருவேளை இவர்களுக்கெல்லாம் தேனருவி பற்றியோ அதன் படைப்புகள் பற்றியோ தெரிந்திருக்காமல் இருக்கக்கூடுமோ என்றெண்ணியவாறு ‘தேனருவி’ சஞ்சிகையையின் சேமிக்கப்பட்டிருந்த இதழ்களைப் புரட்டியபோதுதான் அதன் இலக்கியப் பங்களிப்பினைப் புரிந்துகொண்டேன். அப்பொழுது எனக்கு எழுந்த முக்கியமான கேள்வி இதுதான்: “எதற்காக? எதற்காக ‘தேனருவி’ சஞ்சிகையும், அதன் ஆசிரியரும் கலை, இலக்கிய  விமர்சகர்களாள் இருட்டடுப்பு செய்யப்பட்டார்கள்? இத்தனைக்கும் இளஞரான  நுஃமானின் ‘எச்சில் எனினும்…’ என்னும் காதற் சிறுகதை கூடத் ‘தேனருவி’ இதழொன்றில் வெளியாகியுள்ளது.  

அருண்மொழிதேவன் அவர்கள் ‘தேனருவி’ சஞ்சிகையை மிகவும் சிரமங்களுக்கு மத்தியில் வெளியிட்டுள்ளார். பலருக்குக் களமமைத்துக்கொடுத்துள்ளார். * தேனருவி சஞ்சிகையின் ஆசிரியரான அருண்மொழி  தேவன் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரென்று கலை, இலக்கிய விமர்சகரான கே.எஸ்.சிவகுமாரன் இப்பதிவுக்கான தனது முகநூல்எதிர்வினையொன்றில் சுட்டிக்காட்டியுள்ளார்.  அவருக்கு நன்றி. உண்மையில் அருண்மொழி தேவன் (அருண்மொழி) இலங்கைத்தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்த படைப்புகள் பலவற்றை வெளியிட்டு ஆக்கபூர்வமான பங்களிப்பினைச் செய்துள்ளார். ‘வானொலி நாடகக்  குழு’ நாடக அமைப்பினருடன் இணைந்து தமிழ் நாடகத்துறைக்கும் பங்களிப்பு செய்துள்ளார். அவை பாராட்டப்பட வேண்டியவை. ஆய்வுகளில் ஆவணப்படுத்தப்பட வேண்டியவை.

இவ்விதமான இருட்டடிப்புகளுக்கு முக்கிய காரணங்களிலொன்று. கலை, இலக்கிய விமர்சகர்கள் பாரபட்சமாகச் செயற்படுவது. இவர்கள் எழுதுவதன் அடிப்படையிலேயே ஏனையோரும் ஆய்வுகள் செய்வதால் இவர்களால் தவற விடப்படும் எழுத்தாளர்கள், சஞ்சிகைகள், படைப்புகள் பல தொடர்ந்தும் இவை பற்றி ஆய்வு செய்யும் ஏனையவர்களாலும்  தவறவிடப்படுகின்றன. ஆனால் இன்று இணையத்தின் வருகையும், எண்ணிம நூலகங்களின் உருவாக்கமும் இவ்விதம் தவற விடப்பட்டவர்களையெல்லாம் இனங்காண்பதற்கு மிகவும் உதவியாகவிருக்கின்றன. ‘நூலகம்’ என்னும் எண்ணிம நூலகத்தில் இவ்விதழ்கள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளதால்தானே என்னால் இவற்றைப்பற்றி அறிய முடிந்தது.

Continue Reading →