[ இன்ஸான் முஸ்லிம் வாரப்பத்திரிகையில் வெளியான சிறுகதைகளைப்பற்றிய ஆவணச்சிறப்புள்ள இப்பதிவினை எழுத்தாளர் ஜவாத் மரைக்கார் அவர்கள் தனது முகநூலில் பதிவு செய்துள்ளார். அதனை நான் இங்கு பதிவு செய்கின்றேன். – வ.ந.கி -]
21.6.1967 தொடக்கம் 4.7.1969 வரை இலங்கையில் வெளிவந்த வாரப் பத்திரிகை ‘ இன்ஸான் ‘ .அப்போதைய ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்துக்கு எதிராக , முஸ்லிம்களுக்கு விழிப்புணர்வூட்டும் நோக்கில் இப்பத்திரிகை வெளியானது.
இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் ( ரஷ்ய சார்பு ) நிதியுதவியில் இப்பத்திரிகை வெளியிடப்பட்டதாயினும் தன்னையொரு கம்யூனிஸ்ட் பத்திரிகையாக அது இனங்காட்டிக்கொள்ளவில்லை. இதன் ஆசிரியர் அபூதாலிப் அப்துல் லதீஃப் . துணை ஆசிரியர் பண்ணாமத்துக்கவிராயர் பாரூக். எனினும் , அவர்களின் பெயர்கள் பத்திரிகையில் வெளிப்படுத்தப்படவில்லை. அப்பத்திரிகையில் எழுதியவர்களுக்கோ அதன் வாசகர்களுக்கோ தெரியாத இரகசியங்களாகவே இவை இருந்ததெனலாம். ‘ கௌரவ ஆசிரியர் : எஸ்.எச்.ஏ. வதூத் ‘ என நண்பர் ஒருவரின் பெயர் பின்னாள்களில் பொறிக்கப்பட்டது. இலங்கை முஸ்லிம்களின் பேச்சு வழக்குச் சொற்கள் அதிகமாகப் பயன்படுத்தப்பட்ட இப்பத்திரிகை முஸ்லிம்கள் மத்தியில் அன்று பிரபலம் பெற்றிருந்தது.
இன்ஸான் ஓர் அரசியல் பத்திரிகையாக இருந்தபோதிலும் ( மொழி பெயர்ப்பு உட்பட ) சிறுகதை , கவிதை , கட்டுரைகள் என கலை – இலக்கிய ஆக்கங்களுக்கும் முக்கியத்துவமளித்தது. பின்னாளில் புகழ் பெற்ற பல எழுத்தாளர்கள் , ‘ தாம் இன்ஸான் பண்ணையில் வளர்ந்தவர்கள் ‘ என்று பெருமிதப்பட்டுக்கொள்ளும் அளவுக்கு அவர்களின் பயில்களமாக இன்ஸான் அமைந்தது.