“ பெண்ணியம் என்பது ஆண்கள் எந்தளவுக்கு சமூக அமைப்பிலும், பொருளாதாரத்திலும், அரசியலிலும் ஈடுபட்டு உரிமை கொண்டாடுகிறார்களோ, அந்தளவுக்குப் பெண்களுக்கும் மேற்கூறிய துறைகளில் அனைத்து உரிமைகளும் வழங்கப்பட வேண்டும் “ என்று கூறுகின்றது பெண்களின் உரிமைக்காகப் போராடும் ஒரு புதிய இயக்கம். அத்தோடு பெண்களின் தனிப்பட்ட குடும்ப வாழ்க்கையிலும் சமுதாய, அரசியல், பொருளாதார சூழ்நிலையிலும் அவர்கள் ஆண்களுக்குச் சமமானவர்கள் என்னும் உயர்நெறியை நிலைநாட்டுவதைக் கருவாகக் கொள்கிறது என விளக்குகிறது” (பிரேமா, இரா., பெண்ணியம் – அணுகுமுறைகள் : 13).
புலம்பெயர் சூழலில் பெண்களின் எண்ணிக்கை கணிசமானளவு காணப்படுகிறது. ஆரம்பத்தில் புலம்பெயர்ந்த ஆண்களின் சகோதரிகளாகவும், மணப் பெண்களாகவும் பெண்கள் புலம்பெயர்ந்து சென்றனர்.
பின்னர் கல்வி, வேலைவாய்ப்பு என வேறு தேவைகளுக்காகப் புலம்பெயர்ந்தனர். இலங்கையை விட புலம்பெயர் சூழலில் பெண்கள் தொடர்பான பண்பாட்டுக் கூறுகளை தமிழர் சமூகம் கட்டிறுக்கமாக வைத்திருக்கிறது. பெண்களது நடைமுறைகள், திருமணம் ஆகியவை தொடர்பாக அதிகாரம் மிக்க போக்குடன் நடந்து கொள்ள முனைகிறது.
தனிமைத் துயர், மொழி, அந்நியத் தன்மை, நிறவாதம் ஆகிய பிரச்சினைகளுக்கும் பெண்கள் ஆளாகின்றனர். இத்தகைய சூழலில் பெண்களே, பெண்களது பிரச்சினைகள் குறித்து சிந்திக்கவும், செயலாற்றவும் துணிந்தனர். இதனால் வெவ்வேறு நாடுகளில் பெண்கள் அமைப்புக்கள் உருவாகியதோடு, பெண்கள் சந்திப்புக்கள் இடம்பெற்றதோடு, பெண்களது பிரச்சினைகளை வெளிப்படுத்தி விழிப்புணர்வூட்டும் வெளியீடுகளும் வெளிவந்தன. (நூல்கள், சஞ்சிகைகள், சிறுகதைகள், நாவல்கள், கவிதைகள்). இத்தகைய வெளியீடுகளில் இராஜேஸ்வரி பாலசுப்பிர மணியத்தின் நாவல்களும் குறிப்பிடத் தக்கன.
இராஜேஸ்வரி, கணவர்களின் கொடுமைகளால் பெண்கள் தஞ்சம் புகும் ஸ்தாபனம் ஒன்றில் சிறிது காலம் வேலை செய்தவர். பெண்களுக்கான துயர்களும், கொடுமைகளும் இன, மத, மொழி, வர்க்கங்களைத் தாண்டியவை என்பதை உணர்ந்தவர். பெண்களின் முன்னேற்றத்துக்கு உதவி செய்யும் நோக்கில் ‘கிரேட் லண்டன் கவுன்சிலில் (GLC) வேலை செய்தார்.