– குறிப்பு: ஆப்ரிக்க-அமெரிக்க எழுத்தாளர்களின் அடிமைக் கதைகூற்றுகள் (Slave Narratives) அமெரிக்காவின் சரித்திரத்தில் அடிமைகள் அனுபவித்த பல கொடுமைகளை அடிமைகளாக இருந்தவர்கள் வாயிலாகவே விளக்கும் ஒரு வகை இலக்கியம். தற்போது அடிமைத்தனம் என்பது முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டாலும், தற்போதைய ஆப்ரிக்க -அமெரிக்க எழுத்தாளர்கள் மனதிலும் அவர்களின் முன்னோர்கள் மனதிலும் உடலிலும் பட்ட காயங்களின் வடுக்கள் மிச்சம் இருக்கத்தான் செய்கிறது.
இந்தச் சிறுகதையும் அடிமைத்தனத்தின் ஒரு கொடூர முகத்தை விளக்கும் விதமாக இருந்தாலும், இதன் ஆசிரியர் மார்க் ட்வைன் கறுப்பினத்தவர் அல்லர். அவர் ஒரு அமெரிக்கர் . எனினும், இக்கதையில் அவர் ஒரு பாத்திரமாகவே மாறி (மிஸ்டோ சி) தன் வீட்டின் கறுப்பின மூதாட்டிப் பணிப்பெண்ணின் கதையைக் கேட்டு தான் அதை வார்த்தைக்கு வார்த்தை விவரிப்பதாக தலைப்பிலேயே குறிப்பிடுகிறார். மேலும், கதை முழுதும் ஆசிரியர் மார்க் ட்வைன் ஆப்ரிக்க -அமெரிக்கர்கள் (கறுப்பினத்தவர்) பயன்படுத்தும் பேச்சு வழக்கு வகையை சிறப்பாக பயன்படுத்தி உள்ளது இந்தக் கதையின் தனித்தன்மை
இந்த சிறுகதை பல கல்லூரிகளில் பாடபுத்தத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த கதையை வகுப்பில் எடுக்கும்போது மட்டும் கண்டிப்பாக என் கண்களில் தூசு விழுந்து விடும். கண்ணீர் சொரியும். ஒரு ஆசிரியராக, ஒரு மனுஷியாக என்னை மிகவும் பாதித்த கதை. மொழிபெயர்த்தல் மூலம் அனைவரும் அறிந்து கொள்ளவேண்டும் என்பது எனது விருப்பம். –
அது ஒரு கோடைகால அந்திவேளை. நாங்கள் அனைவரும் மலையின் உச்சியில் அமைந்திருக்கும் எங்களின் பண்ணைவீட்டின் முகப்பு வாயிலில் அமர்ந்திருந்தோம். நாங்கள் அத்தை என அன்புடன் அழைக்கும் எங்களின் பணிப்பெண்ணான ரேச்சல் கறுப்பினத்தவர் மற்றும் பணிப்பெண் என்ற காரணத்தினால் நாங்கள் அமர்ந்திருந்த முகப்புப்படிகளில் ஒருபடி கீழ் இறங்கி மிகவும் பவ்யமாக அமர்ந்திருந்தார். மிகவும் வலிமையான உடலும் , எடுப்பான தோற்றமும் கொண்டவர் அவர். அறுபது வயதாகி இருப்பினும் அவரது கண்களில் உள்ள ஒளி சிறிதும் குன்றாமலும், மன உறுதி குறையாதவராகவும் என்றுமே காணப்படுவார். மனநிறைவோடு கூடிய உற்சாகம் ததும்பி வழியும் மனுஷியான அவருக்கு சிரிப்பு என்பது ஒரு பறவை கீதம் இசைப்பதைப்போன்றே மிகவும் இலகுவான விஷயம்.
எப்போதும் போலவே அன்றைய நாளின் முடிவில் எங்களின் வார்த்தைத் தாக்குதலுக்கு ஆளாகி அன்றும் அமர்ந்திருந்தார். அதாவது எங்களின் கொஞ்சம் கூட கருணை காட்டாத விளையாட்டுத்தனமான கேலிக்கும் கிண்டலுக்கும் இலக்காகினாலும், அதை மிகவும் இலகுவாக எடுத்துக்கொண்டு ரசித்தவாறே இருந்தார். சுவாசத்திற்க்கான காற்றைக் கூட தொடர்ந்து வெளியிட இயலாத அளவுக்கு, உரத்த சிரிப்பொலியை தொடர்ந்து அலை அலையாய் எழுப்பிய அவர், அந்த இன்ப அதிர்வலை கொடுத்த அசைவின் காரணாமாக தனது முகத்தை இரு கரங்களிலும் தாங்கியவாறே அமர்ந்திருந்தார். அவ்வாறான ஒரு தருணத்தில் என் மனதில் திடீரென உதித்தது அந்த எண்ணம். நான் கூறினேன்:
“ரேச்சல் அத்தை! அறுபது வருட கால உங்கள் வாழ்வில் எவ்வித துயரையும் நீங்கள் எதிர்கொள்ளவே இல்லையா?”
அக்கணமே சிரிப்பலையின் அதிர்வை சடாரென நிறுத்தினார். ஏனோ சிறிது தயங்கினார். அங்கே மெல்லியதாய் ஒரு மௌனம் தேவையற்று நிலவியது. தன் தோள்பட்டையின் மேலாக தனது முகத்தைத் திருப்பி, என் பக்கம் நோக்கி குரலில் சிறிதளவு சிரிப்பு கூடதென்படாமல் கூறினார்: