யதார்த்த வாழ்வியலை சித்திரித்து நிற்கும் முதுசம்
முதுசம் என்ற சிறுகதைத் தொகுதியை பிரபல விமர்சகரும் எழுத்தாளருமான திரு. த. சிவசுப்பிரமணியம் (தம்பு சிவா) அவர்கள் அண்மையில் வெளியிட்டிருக்கிறார். சேமமடு பதிப்பகத்தின் வெளியீடாக வெளியிடப்பட்டிருக்கும் இத்தொகுதி 154 பக்கங்களைக் கொண்டு அமைந்திருக்கிறது. 19 சிறுகதைகளை உள்ளடக்கியதாக வெளிவந்திருக்கும் இத்தொகுதி மானிடத்தின் மேம்பாட்டுக்காய் உழைத்த உன்னதமானவர்களுக்கு சமர்ப்பணம் செய்யப்பட்டுள்ளது. திரு. தம்பு சிவா அவர்கள் கற்பகம் எனும் கலை இலக்கிய சஞ்சிகை மூலம் ஈழத்து இலக்கிய உலகத்துக்கு அறிமுகமானவர். சிறுகதை, கட்டுரை, பத்தி எழுத்து, விமர்சனம் போன்ற துறைகளில் தனது எழுத்தாளுமையை வெளிப்படுத்தி வருகின்றார். திருகோணமலை பிரதேச சாகித்திய விருது, கிழக்கு மாகாண முதலமைச்சர் விருது, நாமக்கல் கு. சின்னப்ப பாரதி அறக்கட்டளை இலக்கிய pவிருது, லண்டன் இணுவில் ஒன்றியத்தின் தமிழ்த்தென்றல் விருது உட்பட பல விருதுகளையும், பட்டங்களையும் பெற்றவர். இவர் ஏற்கனவே சொந்தங்கள், முற்போக்கு இலக்கியச் செம்மல்கள் என்ற இரு தொகுதிகளை வெளியிட்டிருக்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.