July is a time for Sri Lankans to reflect on the tragic anti-Tamil violence carried out in July 1983, known…
‘டொக்டர்’ எஸ்.சிவதாஸ் மருத்துவ உலகிலும், இலக்கிய உலகிலும் நன்கு அறியப்பட்டவர். ஆரவாரமின்றி அமைதியாக மனநலத் துறையில் தன்னலற்ற அளப்பரிய பணிசெய்பவர். ஆழமான இரசனையுணர்வு கொண்டவர், கவித்துவமிக்க படைப்பாற்றலும் கைவரப் பெற்றவர். சிறந்த புகைப்பட நிபுணருமாவார். ‘நலமுடன்’ என்ற இவரது நூலின் வெளியீட்டு விழா ஞாயிறு 15.07.2012 மாலை 5 மணிக்கு பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் நடைபெற இருக்கிறது. இந் நிகழ்வின் சிறப்பு அம்சமாக இடம்பெற இருப்பது மனநலம் சம்பந்தமான ஒரு சிறப்புரையாகும். ‘மனநலம் மன் உயிர்க்கு ஆக்கம்’ என்ற தலைப்பில் உளநல மருத்துவத்துறைப் பேராசிரியர் மு.திருநாவுக்கரசு உரையாற்ற இருக்கிறார். SRM பல்கலைக் கழகத்தில் உளநல மருத்துவத்துறைத் தலைவரான இவர் இந்திய உளமருத்துவ சங்கத்தின் அண்மைக் காலத் தலைவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அத்துடன் உலக உளமருத்துவ சங்கத்தின் தென்னாசிய வலயத்தில் பிரதிநிதியாகவும் இருக்கிறார். எமது சூழலில் நிறைந்திருக்கும் மனநலப் பிரச்சனைகள் பற்றிய எமது அறிவை வளர்ப்பதற்கும் அத்தகையவர்களுடன் புரிந்துணர்வுடன் நடப்பதற்குமாக அவசியம் கேட்க வேண்டிய உரையாக இது இருக்கும் என நம்பலாம்.
யாழ்ப்பாணம் உடுப்பிட்டியைப் பிறப்படமாகவும், கொழும்பு பம்பலப்பிட்டி, ‘ரொறான்ரோ’ கனடாவில் வாழ்ந்து வந்தவரும், கட்டடக்கலைஞர், கட்டடப்பொறியியலாளர், பதிப்பாளர் எனப் பல்துறைகளில் தன் பங்களிப்பை நிலைநாட்டியவருமான அண்மையில் மறைந்த ‘தமிழர் மத்தியில்’ நந்தா (நந்தகுமாரன் இராஜேந்திரம்) அவர்களின் அந்திரட்டி நிகழ்வு ஸ்கார்பரோவில் அமைந்துள்ள “The Queen Palace” விருந்து மணடபத்தில் 14.7.2012 சனிக்கிழமை, பிற்பகல் 12.00 மணியிலிருந்து 3.00 மணிவரை நடைபெற்றது. நிகழ்வில் நீண்ட நாட்களின் பின் மொறட்டுவைப் பல்கலைக்கழகக் கட்டடக்கலை, பொறியியற்துறைப் பட்டதாரிகளைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. சிவகுமார், கலாஈஸ்வரன், கனகவரதா, யசோதரன், ஜோதிகுமார் மற்றும் கடற்றொழிற் பொறியியலாளரான வரதீஸ்வரன் எனப் பலரைச் சந்திக்கும் வாய்ப்பு. நந்தகுமார் மொறட்டுவைப் பல்கலைக்கழகப் பட்டதாரியென்பது குறிப்பிடத்தக்கது. ‘தமிழர் மத்தியில்’ வர்த்தகக் கைநூல் மூலம் கனடாத் தமிழர்கள் மத்தியிலும் நன்கு அறியப்பட்டவொருவர் என்பதால் பல்வேறு துறைகளைச் சேர்ந்த குறிப்பாக TVI தொலைக்காட்சியின் அரசியல் ஆய்வாளரான சிவதாசன், ‘தமிழன் வழிகாட்டி’ செந்தி, ‘மோட்கேஜ்’துறையில் பணியாற்றும் சுரேந்திரன், ‘ரியல் எஸ்டேட்’ துறையில் பணிபுரியும் லோறன்ஸ் பிரின்ஸ், ‘Monsoon’ ஆங்கிலப் பத்திரிகை வெளியீட்டாளர் லோகன் வேலாயுதம் எனப் பலரை அங்கு காணக்கூடியதாகவிருந்தது.