தமிழர் தாயகத்தில் வாழும் தமிழ்மக்கள் மீது சிறீலங்கா அரசு தொடுத்திருக்கும் இனவழிப்பை நிறுத்துமாறும் தமிழர் நில அபகரிப்பை எதிர்த்தும் தாயக மக்களின் போராட்டத்துக்கு வலுவூட்டும் வகையிலும் நேற்று செவ்வாய்க் கிழமை 36 எக்லின்டன் மேற்கு வீதியில் அமைந்திருக்கும் சிறீலங்கா துணைத் தூதுவராலயத்தின் முன் நூற்றுக் கணக்கான தமிழ் மக்கள் கைகளில் முழக்க அட்டைகளைப் பிடித்த வண்ணம் கொளுத்தும் வெய்யிலிலும் கூடி நின்று தமது எதிர்ப்பை வெளிக்காட்டினர். பாதுகாப்புக்காக சிறீலங்கா துணைத் தூதுவராலயம் அமைந்திருக்கும் கட்டிடத்தின் முன் பெருமளவிலான ஓன்ரேறியோ காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர். “தயவுசெய்து இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக அவர்கள் பிறந்த நாட்டில் இடம்பெறும் நிலப்பறிப்பையும் பண்பாட்டுப் படுகொலையையும் தடுத்து நிறுத்தங்கள்” (Please Help to Prevent Land Grab and Cultural Genocide of Sri Lankan Thamils in their own Country of Birth) என்று எழுதப்பட்ட பெரிய பதாதைகள் ஆர்ப்பாட்டத்தில் காணப்பட்டன.