(105) – நினைவுகளின் சுவட்டில்

- வெங்கட் சாமிநாதன் -கொஞ்ச நாட்கள் கழிந்தன. எந்த இடத்திலிருந்தாவது ஏதும் ஆர்டர் வருமா என்று காத்திருப்பு. இன்னும் wanted column-ல் ஏதும் எனக்கு ஏற்ற விளம்பரங்கள் வருமா என்ற காத்திருப்பு. ஒரு மாதம் இரண்டு மாதங்கள் கழிந்திருக்கும். முதலில் வந்தது Northern Railway-யிலிருந்து. எனக்கு வேலை கிடைத்துவிட்டது. சந்தோஷமாக இருந்தது. முதல் தடவையாக நானே முயன்று பெற்ற வேலை அல்லவா? இங்கு யாரும் ராஜாவோ, செல்ல ஸ்வாமியோ சொல்லி ஒரு முரளீதர் மல்ஹோத்ரா கருணை மனம் கொண்டு, ”boys service-ல் எடுத்துக்கொள்,” என்று தனிச் சலுகை காட்டிப் பெறவில்லையே. எத்தனையோ பேருடன் போட்டி போட்டல்லவா கிடைத்திருக்கிறது. அந்த சமயத்தில் அந்த சந்தோஷம் தகுதியில் பெற்றதாகத்தான் தோன்றியது. எல்லோரிடமும் சொல்லிச் சந்தோஷப்பட்டேன். அவர்களுக்கும் சந்தோஷம் தான். ஆனால், ”இன்னம் பொறு. மூன்று இடங் களுக்குப் போய் வந்திருக்கிறாயே, அவை என்ன ஆகிறது என்று பார்க்கலாம்,” என்று மிருணாலும், என் செக்‌ஷன் அதிகாரி தேஷ் ராஜ் பூரியும் சொல்லவே, அது சரியாகத்தான் பட்டது. இரண்டாவது நான் வேலைக்குச் சேர பிக்கானீர் போகவேண்டும். பாலைவனம். வெயில் வறுத்து எடுக்கும். இங்கேயே ஆறு வருடங்கள் அஸ்பெஸ்டாஸ் ஷீட் போட்ட கூரையில் காய்ந்து வரண்டாயிற்று. பிக்கானீர் போவதா என்ற தயக்கம் ஒரு மூலையில் எட்டிப் பார்த்தது. இங்காவது ஆறு வருடங்களோடு போயிற்று. பிக்கானீர் போனால் ஆயுள் முழுக்க அல்லவா கஷ்டப் படவேண்டும். இந்த நினைப்பு மற்ற இடங்களிலிருந்து என்ன வருகிறது என்று பார்க்கலாம் என்று ஆலோசனை சொன்னதால் வந்ததா இல்லை, பிக்கானீர் பாலைவன தகிப்பின் காரணமாக மற்றவர்கள் சொன்ன ஆலோசனைப்படி காத்திருக்கத் தீர்மானித்தேனா தெரியவில்லை. இரண்டுமே இருக்கலாம்.

Continue Reading →