சாஹித்ய அகாடமியில் கிடைத்த ஒரு நட்பு – பேராசிரியர் மோஹன்லால் (1)

‘Literature is what a man does in his lonelinessDr. S. Radhakrishnan

‘இலக்கியம் ஒரு மனிதன் தன் தனிமையில் கொள்ளும் ஈடுபாடு’1956-லோ என்னவோ அகாதமிகளைத் தொடக்கி வைத்துப் பேசிய டாக்டர். எஸ் ராதாகிருஷ்ணன்

- வெங்கட் சாமிநாதன் -எனக்கும் சாஹித்ய அல்லது எந்த அகாடமிகளுக்குமே (நிறுவனமாகி பூதாகரித்து முன் நிற்கும் இலக்கியத்துக்கும்) என்ன சம்பந்தம்?. ஒரு சம்பந்தமும் இல்லையென்று தான் நான் தில்லியில் காலடி எடுத்து வைத்த நாளிலிருந்து (1956 டிஸம்பர் 29 ) தோன்றியது. சாஹித்ய அகாடமி இருப்பது ஒரு அழகான கட்டிடத்தில். அந்த கட்டிடத்தை நிர்மாணித்தவர்  ரஹ்மான் என்னும் ஒரு கட்டிட கலைஞர்.. இந்திராணி ரஹ்மான் என்னும் அன்று புகழ்பெற்றிருந்த நடனமணியின் கணவர். வாசலில் ரஷ்ய எழுத்தாளர் புஷ்கினின் சிலை வரவேற்கும், மிக அழகான கம்பீரமான தோற்றம் கொண்டது அந்த சிலை. எழுத்தாளன் என்றாலே ஒரு பஞ்சபரதேசி உருவம் நம் கண்முன் நிற்குமே. அப்படி அல்ல.   ஏழு வீதிகள் பிரியும் ஒரு போக்குவரத்து வட்டத் தீவினைப் பார்த்து நிற்கும். கட்டிடத்தின் பெயர் ரவீந்திர பவன். உள்ளே நுழைந்ததும் தலைகுனிந்து இருக்கும் தாகூரின் மார்பளவுச் சிலை ஒன்றைப் பார்க்கலாம். வேத காலத்து ரிஷிபோல. அக்காலத்தில் கவிகளும் ரிஷிகளாகத் தான் இருந்தார்கள். வால்மீகி, வியாசர், அதனால் தானோ என்னவோ வள்ளுவருக்கும் ஒரு ரிஷித் தோற்றம் கொடுத்து இருக்கிறோம். எல்லாம் அழகானவைதான். மூன்று காரியா லயங்களை அது உள்ளடக்கியது. லலித்கலை, சாஹித்யம் பின் சங்கீதமும்  நாடகமும். எல்லாம் ஒன்றேயான தரிசனத்தின் மூன்று தோற்றங்கள் என்ற சிந்தனையை உள்ளடக்கியது போல். ஆனால், உள்ளே நடமாடியவர்களுக்கு அது பற்றிய பிரக்ஞை இருந்ததாகத் தெரியவில்லை. ஒருவர் மற்றவரோடு சந்தித்துப் பேசி நான் பார்த்ததில்லை. காண்டீனைத் தவிர என்று சொல்ல வேண்டும்.

Continue Reading →

முனைவர் சு.துரைக்குமரனை வாழ்த்துகிறோம்! ‘தமிழ் இணைய இதழ்கள்’ பற்றிய ஆய்வில் முனைவர் பட்டம் பெற்றார்!

முனைவர் சு.துரைக்குமரனை வாழ்த்துகிறோம்! 'தமிழ் இணைய இதழ்கள்' பற்றிய ஆய்வில் முனைவர் பட்டம் பெற்றார்!தமிழகத்திலிருந்து திரு.சு.துரைக்குமரன் அவர்கள் கடிதமெழுதியிருந்தார். அதில் ‘தமிழ் இணைய இதழ்கள்’ பற்றி ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றுள்ள செய்தியினை எம்முடன் பகிர்ந்துகொண்டுள்ளார். அவர் நல்லதொரு கவிஞர் கூட. பதிவுகள், திண்ணை போன்ற இணைய இதழ்கள் மற்றும் அச்சு ஊடக இதழ்களிலும் அவரது கவிதைகள் வெளிவந்துள்ளன. தமிழகத்தில் பல்கலைக்கழகங்களில் இணைய இதழ்கள், இணைய இதழ்களில் வெளிவந்த படைப்புகள் போன்றவற்றை மையமாக வைத்து மாணவர்கள் தங்கள் ஆய்வுகளை ஆற்றுவது கணித்தமிழுக்குக் கிடைத்த வெற்றியென்றே கூறவேண்டும். இச்சமயத்தில் இணையத்தில் வந்த எனது சிறுகதைகளை மையமாக வைத்து ஒருவர் M.Phil  பட்டப் படிப்புக்கான ஆய்வுக் கட்டுரையினைச் சமர்ப்பித்திருந்த விடயத்தை நினைவு கூருகின்றேன். இது வரவேற்கத்தக்க முயற்சி. திறனாய்வாளர்கள், ஆய்வாளர்களென்று அறியப்பட்ட பலர் தங்களுக்குக் கிடைக்கும் நூலுருப் பெற்ற ஒரு சில படைப்புகளை மையமாக வைத்தே ஆய்வுகள் செய்வார்கள். இவ்வகையான ஆய்வுகளோ , திறனாய்வுகளோ பூரணமானதல்ல. நூலுருப் பெறாத எத்தனையோ நூற்றுக்கணக்கில் படைப்புகள் பத்திரிகைகள், சஞ்சிகைகள், இணைய இதழ்களில் சிதறிக்கிடக்கும்போது, தேடுவதற்குச் சோம்பல்பட்டு, கிடைக்கும் ஒரு சில நூல்களை மையமாக வைத்து, பூரணமான ஆய்வு, அல்லது திறனாய்வு என்னும் பாங்கில் அவர்கள் படைக்கும் ஆய்வுகளுக்கு மத்தியில் தமிழகப் பல்கலைக்கழகங்களில் இது போன்ற ஆய்வுகளை முன்னெடுக்கும் மாணவர்களும், அவர்களை ஊக்குவிக்கும் பேராசிரியர்களும் பாராட்டுதற்குரியவர்கள்.

Continue Reading →

தமிழ் மகனுக்கு கோவை இலக்கியப் பரிசு

தமிழ் மகனுக்கு கோவை இலக்கியப் பரிசுகோவை கஸ்தூரி சீனிவாசன் அறக்கட்டளையின் ரங்கம்மாள் விருது இவ்வாண்டு தமிழ்மகனுக்கு அவரின் “ வெட்டுப்புலி “ நாவலுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.25,000 ரூபாய் பரிசுத்தொகை கொண்டது அப்பரிசு  ( உயிர்மை வெளியீடு. பதிப்பாளருக்கும் பரிசு உண்டு ) இரு ஆண்டுகளுக்கு ஒரு நாவலாசிரியருக்கு இப்பரிசு வழங்கப்படுகிறது. பிரபஞ்சன், சிவசங்கரி, சுப்ரபாரதிமணீயன், நாஞ்சில்நாடன், சி.ஆர். ரவீந்திரன் , வே சபாநாயகம், மோகனன், நீலபத்மநாபன் போன்றோருக்கு இவ்விருது இதுவரை வழங்கப்பட்டிருக்கிறது. கோவை கஸ்தூரி சீனிவாசன் அறக்கட்டளைக்கு இது வெள்ளிவிழா  ஆண்டு.நிரந்தரமான ஓவியக்கூடம், நூட்பாலைக்கண்காட்சி, ஆண்டுதோறும் பதினைந்து கூட்டுக்  கண்காட்சிகள், ஓவியப்பட்டறைகள், ஓவிய பயிற்சி முகாம்களை இது நடத்துகிறது.   இதன் வெள்ளி விழா கொண்டாட்டம் டிசம்பரில் தொடங்கியது.அவ்விழாவில் தலைமை விருந்தினராக்க் கலந்து கொண்ட கிருஸ்ணராஜ் வாணவராயர் “வித்தியாசமாக இருப்பவர்களே வெற்றி பெறுகிறார்கள். எழுத்தாளர்களும் கலைஞர்களும் வித்தியாசமானவர்கள்.  நான் வித்தியாசமாக இருப்பதை பார்த்து சிரிக்கிறீர்கள். நாம் எல்லோரும் ஒரே மாதிரி இருப்பதைப் பார்த்துச் சிரிக்கிறேன். என்றார் விவேகானந்தர். ஆன்மீகமும் அறிவுவியலும், பகுத்தறிவும் கலந்த சிந்தனை மிக முக்கியம்.  நாளைய உலகில் நல்ல பண்பு கொண்ட மனிதர்கள்தான் அதிகம் இருக்கமாட்டார்கள்.அவர்களை உருவாகுவதில் கலைக்கும், எழுத்துக்கும் பங்கு உண்டு” என்றார்.

Continue Reading →

நாஞ்சில் நாடனுக்கு இயல் விருது 2012

நாஞ்சில் நாடனுக்கு இயல் விருது 2012Tamil Literary Garden – 14 டிசம்பர் 2012 – கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் வழங்கும் 2012-ம் ஆண்டுக்கான இயல் விருது, மூத்த தலைமுறை எழுத்தாளர்களில் ஒருவரும், நாஞ்சில் நாட்டு வட்டார மொழியைத் தமிழ் இலக்கிய வாசகர்களிடையே பிரபலப்படுத்தியவருமான நாஞ்சில் நாடனுக்கு வழங்கப்படுகிறது. இந்த வாழ்நாள் சாதனையாளர் விருது, கேடயமும் 2500 கனடிய டாலர்கள் மதிப்பும் கொண்டது. சுந்தர ராமசாமி, கே.கணேஷ், வெங்கட் சாமிநாதன், பத்மநாப ஐயர், ஜோர்ஜ் எல் ஹார்ட், தாசீசியஸ், லட்சுமி ஹோம்ஸ்ரோம், அம்பை, ஐராவதம் மகாதேவன், கோவை ஞானி, எஸ்.பொன்னுத்துரை, எஸ்.ராமகிருஷ்ணன் ஆகியோரைத் தொடர்ந்து, இவ்வருடம் நாஞ்சில் நாடன் அவர்களுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது. ஜி.சுப்பிரமணியம் என்ற இயற்பெயர் கொண்ட நாஞ்சில் நாடன், பம்பாய் தமிழ் சங்கம் வெளியிட்டு வந்த ‘ஏடு’ இதழில் தன் இலக்கியப்பணியைத் தொடங்கினார். 1975-ம் ஆண்டு வெளிவந்த ‘விரதம்’ சிறுகதையில் தொடங்கி, முப்பத்தைந்து ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதிவருகிறார். இருபத்தைந்து வயதிலேயே வேலை நிமித்தமாக சொந்த ஊரை விட்டுச் சென்றிருந்தாலும் இவரது படைப்புகளில் நாஞ்சில் நாட்டு மக்களும், மொழியுமே பிரதானமாக வெளிப்படுகின்றன. இவர் சங்க இலக்கியங்களிலும் கம்பராமாயணத்திலும் நல்ல பயிற்சியும் ஈடுபாடும் கொண்டவர். இதுவரை 6 நாவல்கள், 9 சிறுகதைத் தொகுப்புகள், 6 கட்டுரைத் தொகுப்புகள், 2 கவிதைத் தொகுப்புகள் என வெளியிட்டுள்ளார்.

Continue Reading →