[முகநூலில் நண்பர்கள் அவ்வப்போது பதிவு செய்யும் படைப்புகளை, எண்ணங்களை ‘முகநூல் குறிப்புக’ளில் மீள்பிரசுரம் செய்கின்றோம். அந்த வகையில் உமாமகேஸ்வரியின் ‘மரப்பாச்சி’ என்னுமிச் சிறுகதையும் பிரசுரமாகின்றது. இதனை முகநூலில் பதிவு செய்தவர் எழுத்தாளர் சீர்காழி ‘தாஜ்’.- பதிவுகள்]
பரணில் எதையோ தேட ஏறிய அப்பா இறங்கும்போது வேறொரு பொருளைக் கையில் வைத்திருந்தார். கடந்த காலத்தின் தூசு அவர் மீது மங்கலாகப் படிந்திருந்தது. பழைய பொருள்களோடு ஞாபகங்களையும் உருட்டிக் களைத்துக் கனிந்த முகம். அப்பா அனுவைக் கூப்பிட்டார் – எந்த நொடியிலும் விழுந்து சிதறுவதற்கான அச்சுறுத்தல்களோடு அவசர வாழ்வில் விளிம்பில் தள்ளாடும் அபூர்வமானதொரு குழந்தைக் கணத்தைத் தன்னிலிருந்து சேகரித்து அவளில் நட்டுவிட வேண்டும், உடனடியாக. ஒரு மாயாஜாலப் புன்னகையோடு அதை அனுவிடம் நீட்டினார். சிறிய, பழைய மஞ்சள் துணிப்பையில் பத்திரமாகச் சுற்றிய பொட்டலம், பிரிபடாத பொட்டலத்தின் வசீகரமான மர்மத்தை அனு ஒரு நிமிடம் புரட்டிப் பார்த்து ரசித்தாள். உள்ளே என்ன? பனங்கிழங்குக் கட்டு? பென்சில் டப்பா? சுருட்டிய சித்திரக் கதைப் புத்தகம்? எட்டு வயது அனுவிற்கு இந்தப் புதிரின் திகில் தாங்க முடியவில்லை. அப்பாவின் ஆர்வமோ அது இவளுக்குப் பிடித்திருக்க வேண்டுமே என்பதாக இருந்தது. அவசர அவசரமாகப் பிரித்தபோது வெளியே வந்தது கரிய மரத்தாலான சிறிய பெண்ணுருவம். அதனுடைய பழமையே அனுவிற்குப் புதுமையானதாயிற்று. தெய்வ விக்கிரகங்களின் பிழைபடாத அழகோ, இயந்திரங்கள் துப்பிய பிளாஸ்டிக் பொம்மைகளின் மொண்ணைத்தனமோ வழவழப்போ அதற்கில்லை. விரல்களை உறுத்தாத சீரான சொரசொரப்பு. இதமான பிடிமானத்திற்கு ஏதுவான சிற்றுடல்; நீண்டு மடங்கிய கைகள்; ஒரு பீடத்தில் நிறுத்தப்பட்ட கால்கள்; வாழ்தலின் சோகத்தை வளைகோடுகளுக்குள் நிறைத்த கண்கள்; உறைந்த உதடுகள். ‘ஹை, பின்னல்கூட போட்டிருக்கப்பா.’ அனு ஒவ்வொன்றாகத் தடவிப் பார்த்தாள் அதிசயமாக. ‘ஒவ்வொரு அணுவிலும் இதைச் செதுக்கிய தச்சனின் விரல்மொழி, உளியின் ஒலி’ என்று அப்பா முழங்கை, கால்கள் மற்றும் முகத்தில் இருக்கிற சிறுரேகைகளைக் காட்டிச் சொன்னார். பிறகு அவளுடைய திகைப்பைத் திருப்தியோடு பார்த்தபடி, புதிய விளையாட்டுத் தோழியுடனான தனிமையை அனுமதிக்கும் விதமாக அங்கிருந்து நகர்ந்தார்.