மார்கெஸ்: மகாகவி, மாமுனிவர், ஒப்பற்ற ரசவாதி
புனைகதை ஒன்றில் ‘நம்பத்தக்க’ வடிவில் கதை சொல்லி வருபவரிடையே அல்லது இடையிடையே மிகையான அல்லது அறிவுக்குப் பொருந்தாத நிகழ்வுகளைச் சேர்த்து வழங்குதல், புத்திலக்கிய மரபு ஒன்றை உருவாக்கியுள்ளது. இருபதாம் நூற்றாண்டின் ஐம்பதுகளில் ஜெர்மானியப் புதினங்களில் இப்போக்கு காணப்பட்டது. ஆனால் இன்று மத்திய அல்லது லத்தீன் அமெரிக்க இலக்கியத்தின் பொற்காலத்தைச் சேர்ந்த புகழ்பூத்த நாவலாசிரியர்கள், குறிப்பாக, ஆஸ்துரியாஸ் (Miguel Angel Asturias), கார்பென்டியர் (Alejo Carpentier), மார்கெஸ் (Gabriel Garcia Marquez) ஆகியோரின் படைப்புகளில்தான் இந்த அடையாளங்கள் சிறப்பாக, பாங்குடன் காணப்படுகின்றன. மார்கெஸின் ஒரு நூறாண்டுத் தனிமை (Cien anos de soledad)யில் மாயப் புறவாய்மை (Magic அல்லது Magical realism) சிறப்பிடம் பெறுகிறது. சான்றாக, இந்தப் புதினத்தில் ஒரு பாத்திரம், தோய்த்தெடுத்த துணியை வரிசையில் உலர்த்தும்போது வானுலகம் நோக்கிப் புறப்படும்! இந்த ‘மாயப் புற வாய்மை’ எனும் சொல் அல்லது தொடர், வேறுபட்ட பண்பாடுகளைப் புலப்படுத்தும் படைப்புகளைத் தொட்டு விரிகிறது. அதாவது, ‘எதார்த்தம்’ (புறவாய்மை) எனும் கூட்டை உடைத்து வெளியே வந்து பழங்கதை (Fable), மக்கள் மரபுக்கதை (Folktale) இல்பொருட் கற்பனை (Myth) ஆகியவற்றின் உயிராற்றல்களிலிருந்து ஆக்கம் பெற்று அதே பொழுதில் நிகழ்காலச் சமூகத்துக்கு இயைந்ததொரு கூற்றை உள்ளார்ந்த கருவாக இறுத்துதல் ஆகும்.