நேற்று ஹரோ சிவிக் மண்டபத்தில் (12/10/13) அவைக் காற்றுக் கலைக் கழகத்தினரின் ‘கண்ணாடி வார்ப்புக்கள்’ நாடக நூல் அறிமுகவிழா சிறப்பாக நடைபெற்றது. சில நூல் அறிமுக விழாக்களுக்கு செல்வதில் நாட்டம் கொள்வதில்லை.அங்கு விழா ஒரு பக்கம் நடக்க சபையோர் இரைச்சலுடன் கதைத்துக் கொண்டிருப்பர்.சிலர் நூலை விமர்சிக்காது ஏதோவெல்லாம் பேசிக்கொள்ள எழுத்தாளர் பாவமாய் உட்கார்ந்திருப்பார்.சில இடங்களில் நூலை விற்றுவிடுவதிலுள்ள ஆரவம்/அவசரம் மற்றவற்றில் கோட்டை விட்டிருப்பர். மாறாக, நூலுக்குள் நின்றபடியே நாடகம்,நடிப்பு,அரங்கியல் சார்ந்த விமர்சனக்களை நேர்த்தியாக திருமதி மாதவி.சிவலீலனும்,திரு.சாம் பிரதீபனும் செய்தனர். தமிழன்,மனம்பேசுது,ஈழகேசரி,புதினம் பத்திரிகைகளின் ஆசிரியர் திரு.ஈ.கே.ராஜகோபால் அவர்களின் வாழ்த்துரை நல்ல செய்திகளைச் சொன்னது.
அரங்கியல் சார்ந்த அனுபவமும்,பட்டப்படிப்பும் கொண்டவர் சாம் பிரதீபன். திருமறைக்கலா மன்றம் மூலமும்,பின்னர் தீபம் தொலைக்காட்சி ‘பிடிக்கல..பிடிக்கல மூலமும் நாடகங்களை ரசிகர்களுக்கென தந்து அசத்தியவர்.அவரின் நீதியின் இருக்கைகள் நாடக நூல் அவரின் நாடக அனுபவதிற்கு சான்றானது. எனவே அவரின் விமர்சனம் நம் போன்றோரின் தேடலுக்குத் தீனி போட்டன எனலாம். நாடகம், கவிதை, அரங்கியல் சார் நூல்களின் மூலம் அறிமுகமான/பரிச்சயமான அமரர். காரை.சுந்தரம்பிள்ளை அவர்களின் மகளான திருமதி.மாதவி சிவலீலனின் விமர்சனம் நூலைப் பல தடவை படித்து உள்வாங்கியது தெரிகிறது.அவரின் தந்தையின் நாடக அனுபவம் இவரின் இலக்கிய முயற்சிகளுக்கு பெரிதும் உதவுக்கின்றன.புலிக்குப் பிறந்தது பூனையாகாது.