முன்னுரை
சங்க இலக்கியம் தமிழரின் பண்பாட்டுப் பெட்டகமாகத் திகழ்கிறது. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே கல்விகற்று உள்ளத்து உணர்வுகளைக் கவிதைகளாகப் படைத்தளித்த முப்பதிற்கும் மேற்பட்ட பெண்பாற் புலவர்களால் அழகு செய்யப்பட்ட உயரிய இலக்கியமாகச் சங்க இலக்கியம் திகழ்கிறது. அதற்குப் பின் வந்த இலக்கியங்களில் அதிகம் இடம் பெறாத பெண்களின் தன்னுணர்வுக் கவிதைகளையும், தனித்துவம் மிக்கப் பெண்மொழிகளையும், எவ்வித ஒளிவு மறைவுமின்றி தன்னை இயல்பாக வெளிப்படுத்துதலையும் கொண்டதாக அமைகிறது. சுதந்திரமான பெண்ணிய வரலாற்றின் தொடக்கமாகவும் அமைகிறது. மொழியைக் கூரிய ஆயுதமாகப் பயன்படுத்தி ஆணின் அடக்குமுறைகளுக்கு எதிரான கலகக்குரலை வன்மையாகவே, பதிவு செய்த இலக்கியமாகச் சங்க இலக்கியம் திகழ்கிறது. “வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகின்” உயரிய ஆளுமை உடைய பெண்பாற் புலவர்களின் கருத்தியல், புதிய போக்கிற்கு நம்மை இட்டுச் செல்கிறது. சமையலறைகளையும் கட்டிலறைகளையும் தாண்டி, பெண்மைக்கென்று பரந்துபட்ட வெளி இருந்ததையும் அதில் அப்பெண்கள் வெகுசுதந்திரமாக உலவியதையும், காதலுடன் ஊடியதையும் காதலனுடன் சண்டையிட்டதையும், உலகியல் நிகழ்வுகளை அறிந்ததையும், போர்ச் செய்திகளை உற்று நோக்கியதையும் சங்க இலக்கியப் பாடல்கள் மூலம் அறிய முடிகிறது.