ஆய்வுச்சுருக்கம்:
ஷோபாசக்தியின் ‘கொரில்லா’, ‘ம்’ ஆகிய நாவல்கள் ஈழப்போராட்ட அரசியல் வரலாற்றைப் புனைவாக்கிய படைப்புக்களாகும். புகலிடத்தில் இருந்து வெளிவந்தவற்றுள் உள்ளடக்கத்தாலும் உருவத்தாலும் புனைவுமொழியாலும் வித்தியாசங்களைக் கொண்டவை. ‘கொரில்லா’ ஈழப்போராட்டம் தொடங்கிய வரலாற்று ஓட்டத்தை ஒரு பகுதியாகச் சித்திரிக்கிறது. தமிழ்ப் போராளி அமைப்புக்களின் ஆரம்ப காலச் செயற்பாடுகள், அவற்றுக்கிடையிலான முரண்பாடுகள் ஆகியவற்றை நிஜ மாந்தர்களின் கதைகளின் ஊடாகச் சொல்கிறது. ‘ம்’ நாவலும் இந்தப் போராட்ட அரசியலின் தொடர்ச்சியான வீழ்ச்சியினைப் பேசுகிறது. நாவல்கள் இரண்டிலும் அதிகாரமும் துரோகமும் தப்பித்தலும் இயலாமையும் நிறைந்திருப்பதைக் காணலாம். இவற்றில் வெளிப்படும் எள்ளலுக்கூடாக ஈழ அரசியல் பற்றிய விமர்சனமும் முன்வைக்கப்படுகிறது. இரண்டு நாவல்களும் மரபுமுறையான கதை சொல்லும் உத்தியை நிராகரிக்கின்றன. முதலில் ஒரு போராளியாக இருந்து பின்னர் எழுத்தாளரான ஷோபாசக்திக்கு போராட்டச்சூழல் அன்னியமானதல்ல என்பதும் இங்கு குறிப்பிடவேண்டும். இவ்வகையில், ஈழப் போராட்ட வரலாற்றைப் புனைவாக்கிய புகலிட நாவல்கள் என்றவகையில் தமிழ்ச்சூழலில் கவனத்திற்குரியனவாகவும் விரிவான ஆய்விற்குரியனவாகவும் அமைந்துள்ளன.