முன்னுரை
நூற்றாண்டுகள் வாழும் வரங்கேட்ட மகாகவி பாரதி, இம்மண்ணில் வாழ்ந்தது 39 ஆண்டுகளே! புதுக்கவிதையின் பிதாமகனாக, 24 வயதில் அரசியல் பார்வைகொண்ட பத்திரிகையாளராக, சமுதாய மாற்றம் கண்ட சமூக சீர்த்திருத்தப் போராளியாக மகாகவி பாரதி திகழ்ந்தார். பிராமண சமுதாய மரபுக்கு உட்பட்டு ஏழுவயதில் (1889) உபநயனம் மேற்கொண்டு, 14½ வயதில் அச்சமுதாய மரபுக்கு உட்பட்டு 7 வயதுச் செல்லம்மாவைப் பால்ய திருமணம் செய்து கொண்ட பாரதியின் வாழ்வில் 1898ஆம் ஆண்டு பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் ஆண்டாக அமைந்தது. அவ்வாண்டின் ஜீன் மாதத்தில் பாரதியின் தந்தை சின்னசாமி ஐயர் இறப்பைத் தழுவ, பாரதி காசிக்குக் கிளம்புகிறான். அத்தை குப்பம்மாளுடன் காசியில் வசித்த பாரதி, அலகாபாத் சர்வகலா சாலையில் பிரவேசத்தேர்வில் தேர்வாகி, காசி இந்து கலாசாலையில் சமஸ்கிருதம், இந்தி மொழிகள் பயின்றார். 1898 – 1902 வரை நான்கு ஆண்டுகள் காசியில் வசித்த பாரதி, மரபு மாற்றவாதியாக உருமாறினான். கம்பீரமான தலைப்பாகை அணிந்தான். திறந்த மார்பும் பூணூலோடும் இருப்பதற்குப்பதில் பஞ்சகச்சமும், கோட்டும் அணிந்தான், மழித்த மீசையோடிருக்க வேண்டிய முகத்தில் கம்பீரமான மீசை வைத்தான். 1882 – 1901 வரை முதல் 20 ஆண்டுகள் பாரதி மரபு சார்ந்து வாழ்ந்ததாகவும், 1902 – 1921 வரை 19 ஆண்டுகள் அனைத்து மரபுகளையும் மாற்றி புதிய மரபு அமைத்ததாகவும் பாரதியைப் பகுத்துப் பார்க்கலாம். இக்கட்டுரை பாரதி கட்டிக்காத்த மரபையும் மரபு மாற்றத்தையும் விளக்க முயல்கிறது.