அறிமுகம்
ஆதவன் கதிரேசபிள்ளை இலங்கையில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். தற்போது புலம்பெயர்ந்து டென்மார்க்கில் வாழ்ந்து வருகிறார். மகாஜனாக் கல்லூரியில் கல்வி கற்றவர். 1980 இல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மெய்யியல் துறையில் சிறிது காலம் விரிவுரையாளராகப் பணிபுரிந்தவர். கவிதை, நாடகம், நாவல், குறும்படம் ஆகியவற்றில் ஈடுபாடு மிக்கவர். ‘தெருவெளி’ என்ற நாடக ஆற்றுகையை யாழில் அறிமுகப்படுத்தியவர்களில் ஒருவராக அறியப்படுகிறார். 80 களின் பின்னரான ஈழத்து அரசியல் நிலையை எடுத்துக் காட்டும் கவிதைகள் அடங்கிய ‘உள்வெளி’ என்ற கவிதைத்தொகுப்பு 1985 இல் தமிழ் நாட்டில் இருந்து வெளிவந்துள்ளது. ஆதவன் புலம்பெயர்ந்த பின்னர் அங்கிருந்து வெளிவந்த ஆரம்பகால இதழ்களில் ஒன்றாகிய ‘சுவடுகள்’ சஞ்சிகையில் ‘மண்மனம்’ என்ற தொடர்கதையை எழுதியுள்ளார். புகலிடத்தில் ‘சிறுவர் அரங்கு’ தொடர்பான செயற்பாடுகளை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகிறார் என்பது அவர் ‘தமிழ்3’ என்ற வானொலிக்கு வழங்கிய செவ்வியினூடாக அறியமுடிகிறது. இவை தவிர இலங்கையில் போராளிகளுக்கும் அரசுக்கும் இடையிலான சமாதான ஒப்பந்தம் நிலவிய காலத்தில் இவர் இயக்கிய ’ஒரு இராஜகுமாரியின் கனவு’ என்ற சிறுவர் தொடர்பான குறும்படமும் வெளிவந்துள்ளது.