In our Translated World என்னும் கவிதைத்தொகுதி அண்மையில் வெளிவந்த இரு-மொழிக் கவிதைத்தொகுதி. ‘டொராண்டோ’ பல்கலைக்கழகப் பேராசிரியர் செல்வா கனகநாயகத்தைத் தொகுப்பாசிரியராகக்கொண்டு வெளிவந்துள்ள இரு-மொழிக் கவிதைத்தொகுதி. ‘தமிழ் இலக்கியத்தோட்டம்(கனடா); ‘டிரில்லியம் அறக்கட்டளையி’ன்’ நிதியுதவியுடன் வெளியிட்டுள்ள தொகுப்பு. இவ்விதமானதொரு தொகுதிக்கு நிதியுதவி வழங்கிய ‘டிரில்லியம் அறக்கட்டளையும், இவ்விதமானதொரு தொகுதியினை வெளியிட முனைந்த தமிழ் இலக்கியத் தோட்டமும், வெளியிட்ட பதிப்பகமான TSARஉம் பாராட்டுக்குரியவை. இந்த நூலினை எனக்கொரு பிரதியினை அனுப்பிய எழுத்தாளர் அ.முத்துலிங்கத்துக்கும் எனது நன்றி. இத்தொகுப்பினை நான் வாசித்தபொழுது இதனை நான் அணுகியது பின்வருமாறு: இத்தொகுப்பின் தொகுப்பாசிரியரின் தொகுப்பு பற்றிய நோக்கம், இத்தொகுப்புக்கான படைப்புகளைத் தேர்ந்தெடுத்தவர்கள், மொழிபெயர்ப்பு மற்றும் படைப்புகள். தொகுப்பாளரின் நோக்கத்துக்கமைய படைப்புகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனவா என்று இவ்விதமான அணுகுமுறையின் மூலம் தர்க்கரீதியாகச் சிந்தித்து முடிவெடுத்தேன். அது பற்றிய எனது கருத்துகளின் பதிவுகளே இக்கட்டுரை.