கருத்துக்களைக் கட்டமைப்பது என்பது விவாதங்களில் ஒரு முக்கியமான கருத்தமைவு. விவாத அடிப்படைகளையே திசைமாற்றவது எவ்வாறு என்பதை இதனை முன்வைத்து நாம் விளக்க முடியும். ஜோ.டி.குரூஸ் விஷயத்தில் இடதுசாரிகள் அல்லாது தமிழில் எழுதுகிற எந்த எழுத்தாளனும் தமது சொந்தக் கருத்துக்களை இதுவரை எழுதவில்லை. அரவிந்தன் நீலகண்டன் எழுதுவதற்கு ‘லைக்’ போடுகிறார்கள். அல்லது சித்தார்த் வரதராஜன் இதுபற்றி எழுதியதை ‘ஷேர்’ செய்கிறார்கள். ஓன்று சொந்தக் கருத்துக்கள் இவர்களுக்கு இல்லை. எழுதுவதற்கான தர்க்கம் இல்லை அல்லது வெளிப்படையான மனம் இல்லை. இவர்கள் செய்கிற வேலை மோடிக்கு ஆதரவான மனநிலையைக் கட்டமைப்பது எனும் கள்ளத்தனமான வேலைதான். அரவிந்தன் நீலகண்டன் பற்றி சொல்வதற்கு ஒன்றுமில்லை. அவர் அறிவித்துக் கொண்ட இந்துத்துவவாதி, ஆர்.எஸ்.எஸ்.செயல்பாட்டாளர். அவரை நண்பராகவும் உடன்பயணியாகவும் கொண்டவர்களைப் பார்த்து நம்மால் பரிதாபப்பட மட்டுமே முடியும். சித்தார்த் வரதராஜனை அப்படிச் சொல்லிவிடமுடியாது. குஜராத் படுகொலைகள் பற்றிய முழுமையான நூலொன்றின் தொகுப்பாளர் அவர். இலக்கியமும் திரைப்படமும் அறிந்தவர் அவர். ஷோலேவில் நடித்த ஹேமமாலினி பிஜேபியை ஆதரிப்பதால் நாம் ஷோலேவை நிராகரிக்க முடியுமா என்கிறார் அவர். பால்தாக்கரேவையும் சிவசேனாவையும் பின்னாளில் ஆதரித்த தலித் கவிஞரான நாமதேவ் தசலைப் பதிப்பித்த நவயானா ஜோ.டி.குருஸைப் பதிப்பிக்க மறுப்பது என்ன நியாயம் என்று கேட்கிறார் அவர். சாரம்சமாக, படைப்பாளியின் அரசியலுக்காகப் படைப்பை நிராகரிக்க முடியுமா? என்பது சித்தார்த் வரதராஜனின் கேள்வி.
இடம்: ஸ்காபரோ சிவிக் சென்ரர் | காலம்: ஏப்ரல் 26 2014 | நேரம்: 3 – 6 pm |நிகழ்ச்சி ஒருங்கமைப்பு: Misfits for change…