முன்னுரை
– அண்மையில் பாரதிதாசன்பல்கலைக்கழக உறுப்பு கலைமற்றும் அறிவியல் கல்லூரியில் (தமிழ்நாடு) நடைபெற்ற “தமிழ்க்கணினி இணையப் பயன்பாடுகள்” பன்னாட்டுக்கருத்தரங்கிற்குச் சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரைகள் ‘பதிவுகள்’ இணைய இதழில் தொடர்ச்சியாகப் பிரசுரிக்கப்படும். இவற்றைத் தொடர்ச்சியாகப் ‘பதிவுகள்’ இணைய இதழுக்கு அனுப்பி வைப்பதாக முனைவர் துரை மணிகண்டன் அவர்கள் தெரிவித்துள்ளார்கள். – ஆசிரியர், பதிவுகள் –
காலத்தால் சாலப்பழைமையுடைய நம் செம்மொழியாம் அருமைத் தமிழ்மொழி பல்லாயிரம் ஆண்டுகளாகத் தொடர்ந்து வளர்ந்து சீரிளமைத் திறத்தோடு விளங்குகின்றது. அறிவியல் நுட்பங்களைத் தன்னகத்தே உள்வாங்கி மாறிவரும் உலக சூழலுக்கேற்ப தகவல் தொடர்பு மின்னணுச் சாதனங்கள் மற்றும் கணினி இணைய வலைத்தளங்கள் ஊடாக தேவைக்கேற்ப பரிணாம வளர்ச்சி பெறும் தன்மையானது ஒரு மொழியின் நிலைத்த தன்மைக்கு இன்றியமையாததாகும். அந்த வகையில் இந்த பாரினுள் கிட்டத்தட்ட 80 மில்லியன் மக்களால் பேசப்பட்டு வரும் தலைசிறந்த கலை இலக்கிய அறிவுப் பெட்டகமாகத் திகழும் எமது தமிழ் மொழியை இன்றைய கணினி யுகத்திலே கணினிச் சுதேசிகள் Digital Natives என்றழைக்கப்படும் எமது எதிர்காலத் தலைமுறையினருக்கு இட்டுச் செல்வது நாம் நமது மொழிக்குச் செய்யும் பாரிய தொண்டாகும். இதை மையப்படுத்தி இந்த ஆய்வுக் கட்டுரையிலே தமிழ்மொழியின் வளர்ச்சிக்கும், சீரிய வாழக்கைக்கு அடித்தளமிடும் வாழ்க்கை நெறிகளுக்கும் பழமொழிகள் வழங்கும் பங்களிப்பு யாது என்பது ஆராயப்படுவதோடு மட்டுமல்லாமல் அவற்றை மின் கற்றலுக்காக E-Learning, கணினி மயப்படுத்தி அடுத்த சந்ததியினர் பயன் பெறவும், ஒரு கணினி மென்பொருள் உருவாக்கப்படுகிறது. இந்த உருவாக்கமானது கணினி வழி ஊடாக தமிழ் மொழிக் கற்றலில் ஒர் அங்கமாகத் திகழ்வது மட்டுமல்லாமல் பல ஆண்டுகளுக்கு எமது மொழியின் தங்கு தடையற்ற பாவனைக்கும் ஒரு பாலமாக விளங்கும் என்பதில் ஐயமில்லை.