பரந்து விரிந்த நீண்ட பிரபஞ்சவெளியில் ஒரு சூரிய குடும்பம் பறந்து திரிந்து உலா வந்த வண்ணமுள்ளது. ஆங்கே சூரியன், நிலாக்கள், விண்மீன்கள், ஒன்பது கோள்கள் ஆகிய புதன், சுக்கிரன், பூமி, செவ்வாய், வியாழன், சனி, விண்மம் (யுறேனஸ்- Uranus), சேண்மம் (நெப்டியூன் – Neptune), சேணாகம் (புளுடோ – Pluto) ஆகியவை அந்தரத்தில் ஒவ்வொன்றின் ஈர்ப்புச் சக்தியால் மிதந்த வண்ணமும், சுழன்ற வண்ணமும் உள்ளன. சூரியன் நானூற்றி அறுபது கோடி (460,00,00,000) ஆண்டுகளுக்குமுன் தோன்றினான் என்றும், பூமியானது நானூற்றி ஐம்பத்துநாலு கோடி (454,00,00,000) ஆண்டுகளுக்குமுன் தோன்றினாள் என்றும், பூமி நிலாவானது நானூற்றி ஐம்பத்து மூன்று கோடி (453,00,00,000) ஆண்டளவில் தோன்றினாள் என்பதும் அறிவியலாரின் கூற்றாகும். சுமார் முன்னூற்றி எழுபது கோடி (370,00,00,000) ஆண்டளவில் பூமித்தாயில் நுண்ம உயிரினங்கள் தோன்ற ஆரம்பித்தன.
பூமித்தாய்
கதிரவன் மண்டலத்தின் பிறப்புத்தான் பூமிக் கோளாகும். உருண்டை வடிவான பூமி நெருப்புக் கோளமான சூரியனிலிருந்து தெறித்து விழுந்த அனற்பிழம்பாக விண்ணிற் பல காலமாகச் சுழன்று கொண்டிருந்தது. நீண்ட காலத்தின்பின் மேற்பரப்புக் குளிர்ச்சியடைந்தது. ஆனால் பூமியின் மையப் பகுதி இன்றும் அனலாக எரிந்து கொண்டிருக்கிறது. பூமி குளிர, மேகங்களும் குளிர்ந்து, பெருமழை பெய்து, நீர் பெருங் குழிகளிற் தேங்கிக் கடல்கள் தோன்றின.