1. வணக்கம்! உங்கள் குடும்பப்பின்னணி குறித்துச் சொல்லுங்கள்
ஜெயந்தி சங்கர்: என் பெற்றோரின் பூர்வீகம் மதுரை. நான் பிறந்ததும் மதுரை. இருப்பினும், பள்ளிவிடுமுறைநாட்களுக்குப் போவது தவிர மதுரையுடன் எனக்கு எந்தத் தொடர்பும் குறிப்பிடும் அளவிற்கு இருந்ததில்லை. அம்மா சாதாரண இல்லத்தரசி. இசை அறிந்தவர். புத்தகம் வாசிக்கும் பழக்கம் கொண்ட அப்பா மத்திய அரசாங்கத்தில் ஒரு பொறியாளராக இருந்தார். வாசிப்பு, தொழில்நுட்பம், புகைப்படம், ஓவியம், தோட்டக்கலை போன்ற பல துறைகளில் ஈடுபாடு கொண்டவர். 2-3 ஆண்டுகளுக்கு ஒரு முறை அப்பாவுக்கு மாற்றலாகிக் கொண்டே இருக்கும். ஆகவே, கோவை முதல் ஷில்லாங் வரை பல ஊர்களிலும், மாநிலங்களிலும் வளர்ந்தேன். ஆகவே, பல மொழிகளும் பல்வேறுபட்ட கலாசாரங்களும் எனக்கு சிறு வயது முதலே அறிமுகம். குடும்பத்தில் நானே மூத்தவள். ஒரு தங்கை, லண்டனில் ஆங்கில ஆசிரியையான இருக்கிறாள். இரண்டு தம்பிகள். இருவரும் பொறியாளர்கள். கணவர் ஒரு பொறியாளர். இரண்டு மகன்கள். பெரியவன் ஒரு பொறியாளர். சிறியவன் சட்டம் இரண்டாம் வருடம் படிக்கிறான்.