நோர்வேத் தமிழ் நாவல்: நாளை – 1

– நோர்வேயில் வசிக்கும் இ. தியாகலிங்கம் புகலிடத் தமிழ் எழுத்தாளர். காரையூரான், காரைநகரான் ஆகிய புனைபெயர்களில் எழுதி வருகிறார். நாளை, பரதேசி, திரிபு, எங்கே, ஒரு துளி நிழல், பராரிக்கூத்துக்கள் ஆகிய நாவல்களும், வரம் என்னும் குறுநாவற் தொகுதியும், துருவத் துளிகள் என்னும் கவிதைத் தொகுதியும் இதுவரை நூலுருப்பெற்றுள்ளன.  இவரது ‘நாளை’ நாவல் பதிவுகளில் தொடராகப் பிரசுரமாக அனுமதியளித்துள்ள நூலாசிரியருக்கு நன்றி.. – பதிவுகள் –

அத்தியாயம் ஒன்று!

- இ. தியாகலிங்கம் -அந்த இரைச்சல் தாங்க முடியாததாக இருந்தது. கழுவும் இயந்திரத்தின் இத்தகைய ஒலங்களைச் சகித்தல் அவள் வேலையின் ஒரு அம்சமே. இன்றைக்கு நித்தியாயினிக்குத் தாங்க முடியாததாக இருந்தது. ஒரே தலைவலி. மற்றவர்கள் காதில்லாதவர்கள் போன்ற பாவனையில் வேலையில் ஈடுபட்டிருந்தது அவளுக்கு எரிச்சல் ஓட்டியது.  ‘என்ன மனிதர்கள்? பணத்திற்காக எதுவுமா? வேலை ஸ்தல உரிமைகள் மீறப்படுகின்றன. ஏதாவது முணு முணுப்பு? இலங்கையில் அடங்கிக் கிடந்தார்கள். இங்கு? புதிய பூமியும் புதின வானமும் நாடி வந்த இடத்தில்? சுதந்திரம் என்பது எங்களுக்கு எட்டாத கனவுகளா?’–இவ்வாறெல்லாம் அவளுடைய மனசு தறிகெட்டோடியது.  ‘செவி உடல் உறுப்பு. உடலா நோகடிக்கப்படுகிறது? இல்லை. காதிலும் ஆழமானது. மனசு நோகடிக்கப்படுகின்றது. மனசு சம்பந்தப்பட்ட உணர்வுகள் காயமடைகின்றன. நோகடிப்பதும் காயப்படுத்துவதும் வன்முறை சார்ந்தது என்று இவர் தர்க்கிப்பார். இவர் கற்பனை செய்யும் உலகம் வேறு. யதார்த்த உலகம் வேறு அநுபவங்களைக் கொண்டிருக்கிறது. பணத்தின் விஸ்வ ரூபம்! பணத்தின் முன்னால் மண்டியிடும் மனிதன் இயந்திரமாகி விட்டான். ஆன்மாவின் விலையா பணம்?’ இவருடைய சிந்தனைச் செல்வாக்குகள் தன்னைப் பீடிப்பதை உணருகின்றாள். அவற்றில் இருந்து அந்நியப்படவும் அவளால் முடியவில்லை.

Continue Reading →