கனடாவின் முதலாவது தமிழ் நாவல்” மண்ணின் குரல் பற்றிச் சில வார்த்தைகள்…

கனடாவின் முதலாவது தமிழ் நாவல்" மண்ணின் குரல் பற்றிச் சில வார்த்தைகள். - வ.ந.கிரிதரன் -கனடாவிலிருந்து வெளிவந்த முதலாவது தமிழ் நாவல் நானறிந்தவரையில் நான் எழுதிய சிறு நாவலான ‘மண்ணின் குரல்’ நாவலே. இதனைப் பற்றி ஒரு பதிவுக்காகக் குறிப்பிட விரும்புகின்றேன். இந்த நாவல் பத்து அத்தியாயங்களை உள்ளடக்கிய சிறு நாவல். நாற்பது பக்கங்களைக் கொண்டது. இந்நாவலின் முதல் ஆறோ அல்லது  ஏழோ அத்தியாயங்கள் மான்ரியாலிலிருந்து 1984, 1985 காலப்பகுதியில் வெளியான ‘புரட்சிப்பாதை’ என்னும் கையெழுத்துச்சஞ்சிகையில் வெளியாகின. ‘புரட்சிப்பாதை’ என்னும் கையெழுத்துப் பத்திரிகை அக்காலத்தில் மான்ரியாலில் இயங்கிய தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் கனடாக் கிளையினரின் கையெழுத்துச் சஞ்சிகையாக வெளியானது, அக்காலகட்டத்தில் கனடாவில் பல்வேறு ஈழ விடுதலைச் சார்ப்பு அமைப்புகளும் இயங்கி வந்தன. இந்தச் சஞ்சிகையை அக்காலகட்டத்தில் ஜெயந்தி, ரஞ்சன், சுந்தரி ஆகிய இளைஞர்களுடன் சேர்ந்து மேலும் சில இளைஞர்கள் நடாத்தி வந்தனர். இந்தக் கையெழுத்துப் பிரதியில் கவிதைகள் சில, கட்டுரைகள் சில மற்றும் ‘மண்ணின் குரல்’ என்னுமிந்தச் சிறு நாவல் ஆகியவற்றையும் எழுதியிருந்தேன். அக்காலகட்டத்தில் வெளியான எனது படைப்புகள் அனைத்தும் ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தினை வலியுறுத்துபவையாகவே அமைந்திருந்தன. அதற்காகவே எழுதப்பட்டவை அவை. ‘மண்ணின் குரல்’ சிறுநாவல் முடிக்கப்பட்டு , ‘புரட்சிப்பாதை’ கையெழுத்துச் சஞ்சிகையில் வெளியான கவிதைகள், கட்டுரைகள் சிலவற்றை உள்ளடக்கி ‘மண்ணின் குரல்’ தொகுப்பு கனடாவில் 4.1.1987 அன்று வெளியானது. கனடாவில் றிப்ளக்ஸ் அச்சகத்தினரால் அச்சடிக்கப்பட்டு, மங்கை பதிப்பகத்தினால் வெளியிடப்பட்டது.  எனது நாவல்களான ‘மண்ணின் குரல்’, ‘வன்னி மண்’, ‘அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்’ , மற்றும் ‘கணங்களும் குணங்களும்’ ஆகியவை ஒரு தொகுப்பாக ‘மண்ணின் குரல்’ என்னும் பெயரில் தமிழகத்தில் 1998இல் ‘குமரன் பப்ளீஷர்ஸ்’ நிறுவனத்தால் வெளியிப்பட்டது.  இரண்டு ‘மண்ணின் குரல்’ என்னும் தொகுப்புகள் என் படைப்புகளைத் தாங்கி வெளிவந்துள்ளன. இரண்டு தொகுப்பிலும் உள்ள பொதுவான ஒரே படைப்பு ‘மண்ணின் குரல்’ நாவல்தான்.

Continue Reading →