தமிழச்சி தங்கபாண்டியனின் முதல் கவிதைத் தொகுப்பு வெளிவந்த போது எனக்கு அவரை அவரை அறிமுகப்படுத்தியது கணையாழியில் அப்போது இருந்த யுகபாரதி. அதற்கு முன்னர் அவரை ஒரு இலக்கிய விழாவில் நிகழ்ச்சிகள் அறிவிப்பாளராகப் பார்த்தது நினைவுக்கு வந்தது. அவ்விழாவில் அவரது பிரசன்னம் அவருக்குத் தரப்பட்ட பொறுப்பிற்குள் அடங்கியதாக இருக்கவில்லை. எந்த கட்டத்துக்குள்ளும் அடங்காத ஆளுமை அவரது. காரணம் அவரது இயல்பான எப்போதும் காணத்தரும் சிரித்த முகம், தடையில்லாது சரளமாகப் பிரவாஹிக்கும் வாசாலகம், துடி;ப்பான செயல் திறன் எல்லாம் ஒருவரிடத்தில் காணும் முதல் அனுபவம். பேச்சுத் திறன் என்பது, அனேகமாக மேடை ஏறும் எல்லாத் தமிழரிடமும் காணும் ஒன்றுதான் என்றாலும் இங்கு தமிழச்சியிடம் கொஞ்சம் அதிகமாக, நயத்துடனுன் அழகுடனும் வாய்த்துள்ளது என்று எண்ணி மறந்து விட்டது இப்போது திரும்ப நினைவில் தலை தூக்கியது. இந்த குணங்களில் பெரும்பாலானவை நகரத்து, அதிலும் சென்னையின் விளைச்சல் அல்லவா? இது எப்படி ஒரு மல்லாங்கிணற்றுப் பயிரில் காண்கிறது என்று ஒரு கேள்வி, தமிழச்சியின் எஞ்சோட்டுப் பெண் தொகுப்பின் ஒவ்வொரு கவிதையைப் படிக்கும் போதும் எழுந்து நெற்றி சுருங்கியது. அதே சமயம் அது சந்தோஷமாகவும் வியப்பாகவும் இருந்தது. பட்டம் பெற்ற ;பெண், கல்லூரியில் ஆங்கிலம் போதிக்கும் பெண், உலகம் சுற்றும் பெண் தான் சிறு பிராயத்தில் வாழ்ந்து அனுபவித்த தோழிகளையும், அப்பத்தாவையும், வரப்புச் சண்டையில் கால் வெட்டுப்பட்ட சித்தப்பாவையும், மெதுவடையை புடவைத் தலைப்பில் முடிந்து வைத்துக்கொடுத்த முனியனூர்க் கிழவியையும், எள்ளுருண்டை கடித்துப் பகிர்ந்து கொண்ட எஞ்சோட்டுத் தோழியையுமா கவிதை எழுதுவார்கள்? எழுத எத்தனை இல்லை? பெண்ணீயம், முற்போக்கு, கண்ணகி, ஆணாதிக்கம், போஸ்ட் மாடர்னிஸம், ஸ்ட்ரக்சுரலிஸ்ம், தமிழ் எனது மூச்சு, படிமம் கல்தோன்றி…….இத்யாதி எத்தனையொ கொட்டிக்கிடக்கும் போது? கோவில் பட்டிக் காரர்கள் கூட மாந்த்ரீக யதார்த்தம், பேப்பரில் கை வைத்தால் தானே ப்ளாஞ்செட் மாதிரி எழுதிக்கொள்ளுமாமே. ஆனால், எஞ்சோட்டுப் பெண் தொகுப்பில் உள்ள கவிதைகள் அத்தனையும் தமிழச்சியின் இதயத்திலும் நினைவுகளிலும் இன்னமும் நிறைந்திருப்பது மல்லாங்கிணற்று கிராமத்தின் தன் இளம் பிராய அனுபவங்களும், அங்கு தன்னிடம் இயல்பான பாசம் காட்டிய மனிதர்களும் தான். அந்த வாழ்க்கை தான். நகரப் பூச்சு அற்ற சக மனித பாசம் தான். இளம் பிராய அனுபவங்களும், வாழ்க்கையும் மல்லாங்கிணற்று கோடை வெயிலின் பொசுக்கலையும் மீறி இனிமையானவைதான்
‘மேலும் அறியாத ஒன்று’ இத்தலைப்பிலுள்ள கவிதை கருணாகரனின் ‘ஒரு பயணியின் போர்க்காலக்குறிப்புகள்’ தொகுப்பிலுள்ள கவிதைகளிலொன்று. இக்கவிதையினை வாசிக்கும்போது ஏற்பட்ட என் எண்ணங்களைப் பகிர்ந்துகொள்வதுதான் இப்பதிவின் நோக்கம். அதற்கு முன:
பால்யகாலத்தில் என் வாழ்வு வவுனியா நகரிலுள்ள குருமண்காடு என்னும் காடு மண்டிக்கிடந்ததொரு சூழலில் கழிந்தது. பல்லினப் பறவைகளும், மிருகங்களும் மலிந்த கானகச்சூழல். எங்கள் வீட்டிலிருந்த கொவ்வை மரத்தில் எப்பொழுதும் கிளிகள் படையெடுத்த வண்ணமிருக்கும். மாம்பழத்திகளும், மைனாக்களும், குக்குறுபான்களுமெனப் பறவைகளின் இராச்சியத்தில் மூழ்கியிருந்த கானகச்சூழல். ஆனால் அக்காலகட்டத்தில் நான் இயற்கையை இரசித்த அளவுக்கு, அங்கு வாழ்ந்த புள்ளினங்களின், மிருகங்களின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றியெல்லாம் சிந்தித்ததில்லை. ஆனால் இன்று நான் உலகின் தொழில்நுட்ப வளர்ச்சி பெற்ற மாநகரொன்றில் வசிக்கின்றேன். ஆரம்பத்தில் இயற்கையுடன் வாழ்ந்த சூழலைத் தவற விட்டு விட்டேனோ என்று மனம் சஞ்சலப்பட்டதுண்டு. ஆனால் மாநகரினைக் கூர்ந்து அவதானிக்கத் தொடங்கியதும் எனக்குப் பிரமிப்பே ஏற்பட்டது. குழி முயல்கள், சிறு நரிகள், கயோட்டி என்னும் ஒருவகை நாயின மிருகங்கள், கடற் பறவைகள், புறாக்கள், பல்வேறு வகையான வாத்தினங்கள், பல்வேறு வகையான சிட்டுக்குருவிகள், ‘ரொபின்’ பறவைகள், பருந்தினங்கள், அணில்கள், ரக்கூன்கள், மான்கள்..இவ்விதம் பல்வேறு வகையான பறவைகளை, மிருகங்களை அவதானிக்க முடிந்தது.