-தமிழ்மொழி வளர்வதற்கான ஊற்றுக் கண்ணாகச்சிற்றிதழ்கள் இக்கால கட்டத்தில் விளங்குகின்றன. தமிழில் வெளிவரும் சிற்றிதழ்கள், மேலைஇலக்கியங்களுக்கு ஒருபடி மேலே சென்று, உலக இலக்கியத் தரத்தைத் தமிழுக்குத் தந்து கொண்டிருக்கின்றன எனலாம். கவிதை, சிறுகதை, குறுங்கதைகள், திறனாய்வுகள், துணுக்குகள் எனப் பல்வகைப்பட்ட இலக்கியங்களைத் தரத்தோடு வெளிவரச்செய்ய முயல்பவைகளாகவும் இச்சிற்றிதழ்கள் அமைந்திருக்கின்றன. இலக்கியத் தாகத்தைக் கொண்டிருக்கும் எழுத்தாளர்களை ஊக்குவித்து, அவர்களின் படைப்பு ஆற்றலுக்கு தீனி போடக் கூடிய மற்றொரு பயனையும் சிற்றிதழ்கள் செய்கின்றன.
சிற்றிதழ் தன்மை
“எதிர்காலத்தில் தமிழ்ச்சூழலில் ஒரு மாற்றம் ஏற்பட வேண்டுமானால் அது சிற்றிதழ்களால் மட்டுமே நிகழும் என்பதை உறுதியாகக் கொள்ளலாம்.” 1
என்கிறது தமிழ் விக்கிப்பீடியா .மேலும் வணிக இதழ்களுக்கு மாறாகச்சிற்றிதழ்கள் அமைந்திருக்கும் தன்மையினைப் “பேச்சுத் தமிழும் ஆங்கிலக் கலப்பும் மலிந்திருக்கும் பெரும் பத்திரிக்கைச்சூழலுக்கு முற்றிலும் மாறுபட்டு, தமிழை வளர்ப்பதில் முக்கியப் பங்காற்றுபவை சிறுபத்திரிக்கைகள் “ 2 என மு.யாழினி வசந்தி கூறுவார்.தமிழக அளவிலும்,உலகில் தமிழர்கள் வாழும் பகுதியிலும் சிற்றிதழ்கள் பெரும்பான்மையாக இன்று வெளியிடப்படுகின்றன.இவ்விதமான சிற்றிதழ்களில் நவீன படைப்புகள் எவ்விதமான தன்மையினைப் பெற்றிருக்கின்றன என்பதை ஆய்வதாக இக்கட்டுரை அமைகின்றது.