பேராசிரியர் செல்வா கனகநாயகம் : புன்னகையைத் தேக்கிவைத்திருந்த உதடுகள்

பேராசிரியர் செல்வா கனகநாயகம் ஓரு சில விஷயங்களில் மட்டும் கருத்து முரண்பாடு கொண்டு நாம் விமர்சித்தவர்கள் அகால மரணமடைகிறபோது நமக்கு ஏற்படும் உணர்வு முதலில் குற்றவுணர்வாகவே இருக்கிறது. அவர்கள் நாம் கண்டு பேசி நம்மை உபசரித்தவர்கள், நம்மோடு கனிவுடன் உரையாடியவர்கள் என்கிறபோது நமது விமர்சனம் அவர்களது இறுதிநாட்களில் அவர்களைச் சிறிதேனும் துன்புறுத்தி இருக்குமா என நினைக்கிறபோது எழுதுவதையும் விவாதிப்பதையும் சிந்திப்பதையும் கூட விட்டுவிடலாமா என்று சமயத்தில் நமக்குத் தோன்றும். தென் ஆசிய இலக்கியம் பயிற்றுவிக்கும் பேராசிரியர், ஆய்வாளர், மொழிபெயர்ப்பாளர், எழுத்தாளர் எனப் பன்முக ஆளுமை கொண்ட கனடிய நண்பரான செல்வா கனகநாயகத்தின் மரணத்தைக் கேள்வியுற்றபோது இவ்வாறான மனநிலைக்கே நான் ஆட்பட்டேன்.

அவருடன் விரிவாகப் பேசுவதற்கான இரண்டு தருணங்கள் எனக்கு வாய்த்தன. இலண்டன் ஐபிசி வானொலியில் ஒலிபரப்பவென இரண்டு மணித்தியாலங்கள் அவருடன் அவரது ஆய்வு நூல்கள் குறித்து உரையாடியிருக்கிறேன். அந்த உரையாடலுக்கெனவே அவரது நூல்கள் அனைத்தையும் இரு வாரங்களில் நான் வாசித்திருந்தேன். அன்று நான்கைந்து மணிநேரங்கள் என்னுடன் இருந்தார். தொரான்றோ பல்கலைக் கழகத்தில் நடந்த தமிழியல் கருத்தரங்கில் ஈழ நாவல்கள் பற்றிய எனது கட்டுரை சமர்ப்பிப்பதற்கான பயணத்தை தனிப்பட்ட முறையில் அவரும் ‘காலம்’ செல்வமும்தான் பொறுப்பெடுத்துச் செய்தனர். அந்த நிகழ்வுக்கும் வந்திருந்து விவாதங்களைத் துவக்கி வைத்தவரும் அவர்தான். நான் மொழிபெயர்த்த மஹ்முத் தர்வீஷ் கவிதைகள் நூல் குறித்தும் அவர் என்னுடன் தனிமையில் நெடுநேரம் பேசிக் கொண்டிருந்தார்.

Continue Reading →