தொழில் நுட்பம் பற்றி அலசுவதன்முன் அது எழுந்த கால எல்லை, எழவேண்டிய காரணம், அதனால் ஏற்பட்ட நன்மைகள், அதன் தற்போதைய வளர்ச்சி நிலை ஆகியவற்றைப் பார்ப்பது உசிதமென மனம் அவாக் கொள்கின்றது. கதிரவன் 460 கோடி ஆண்டுகளுக்குமுன் ஒரு நட்சத்திரம் தீப்பிடித்து எரிந்து உருவாயிற்று என்பது வானூலாரின் கணிப்பாகும். அதன்பின் கதிரவன் குடும்பத்திலுள்ள ஒன்பது (09) கோள்கள் தோன்றின. அதில், மக்கள் வாழக்கூடிய ஒரேயொரு கோளான பூமியானது 454 கோடி ஆண்டுகளுக்குமுன் தோன்றினாள்.
பூமிக்குரிய ஒரு நிலா 453 கோடி ஆண்டுகளுக்குமுன் தோன்றியது. பூமியில் 400 கோடி ஆண்டளவில் உயிரினங்கள் தோன்றத் தொடங்கின. முதல் மனிதன் 20 இலட்சம் ஆண்டளவில் தோன்றினான். மேலும், இரண்டு (02) இலட்சம் ஆண்டளவில் உறுப்பியல் அமைப்பான புது நாகரிகப் பண்பான மனிதன் தோன்றினான். இன்று பூமியில் ஓரறிவிலிருந்து ஆறறிவுடைய உயிரினங்கள் வாழ்கின்றன. இவற்றில் ஓரறிவு உயிர்களிலிருந்து ஐந்தறிவு உயிர்கள் வரையானவை ஒரே விதமான வாழ்க்கை முறைகளை என்றும் நடாத்திக் கொண்டு, எதுவித முன்னேற்றமுமின்றி மாண்டு மடிவதை எம்மால் பார்க்கமுடிகின்றது.