அறம் வெல்லுமோ இல்லையோ என்று கவலைப்படுவதற்குப் பதில் நடந்து முடிந்தவற்றிலிருந்து பாடங்களைப் படிப்பதே சரியான நிலைப்பாடாக இருக்க முடியும். இவ்வளவு மனித உரிமை மீறல்களைப் புரிந்த இலங்கை அரசு ஏன் வென்றது? என்பதைச் சிந்திக்க வேண்டும். அவர்களிடம் ஆட்சி அதிகாரமிருந்தது. சர்வதேச, பிராந்திய அரசியலைத் தமக்குச் சார்பாகத் தந்திரமாகக் கையாண்டார்கள். நாம் எமக்குள் முட்டி மோதிக்கொண்டோம். தமிழ் அமைப்புகள் மத்தியில் ஏற்பட்ட மோதல்கள், பிளவுகள்தாம் ஆயுதப் போராட்டம் தோல்வி அடைந்ததற்கு முக்கிய காரணமென்று நினைக்கின்றேன்.
ஐக்கிய தேசியக் கட்சியோ, சிறீலங்கா சுதந்திரக் கட்சியோ இரண்டு கட்சிகளின் அரசியல் நடவடிக்கைகள் வேறானவையாக இருந்த போதிலும், ஆட்சிக் கட்டிலிருக்கும்போது அக்கட்சியினர் தமிழர்களுக்கெதிரான அரசியற் செயற்பாடுகளில் ஒன்றாகவே இருந்தார்கள்.
ஐக்கிய தேசியக் கட்சியினர் ஆட்சியிலிருந்த போதும், சிறீலங்கா கட்சியினர் ஆட்சியிலிருந்த போதும் தமிழ் மக்களுக்கெதிராக வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன். சிங்களம் ஆட்சி மொழியாகி தமிழர்கள் மேல் வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன சிறீலங்கா சுதந்திரக் கட்சியினரின் காலத்திலென்றால், ஐக்கிய தேசியக் கட்சியினரின் காலத்தில் பயங்கரவாதத் தடைச்சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு, யாழ் நூலகம் எரிக்கப்பட்டு, 83 இனக்கலவரம் கட்டவிழ்த்து விடப்பட்டு வன்முறைகள் தமிழர்கள் மேல் பிரயோகிக்கப்பட்டன, இருவர் ஆட்சியிலும் தமிழ்ப் பகுதிகளில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் நடைபெற்றன.