சொல்லப்போனால், யாமினி மனித ரூபத்தில் வந்துள்ள மான் தான். மானின் அத்தனை குணங்களையும், அதன் துள்ளலும் வேகமும், கண்களின் மிரட்சியும், யாமினியிடம் காணலாம். எவ்வளவு வேகத்தில் வெகு இயல்பாக முக பாவங்கள் மாறுகின்றன, எத்தனை உணர்வுகளை அவை சட்டென மாறி மாறிக் காட்டுகின்றன. அத்தனை அழகுடனும் துவளும் கைகள், விரல்கள், வித வித அழகான தோற்றங்களில் காட்சி தரும் உடல்வாகு, சட்டென அழகாக வடித்த சிலையென சலனமற்று உறைந்து காட்சி தரும் பயிற்சியின் லாகவம், அதே போல் மீண்டும் சட்டென சிலையென உறைந்த நிலையிலிருந்து விடுபட்டு ஒரு துள்ளலில் மேடையை தன்னதாக்கிக் கொள்ளும் தடையற்றுப் பெருகும் ஆற்றல், எல்லாம் வருஷங்கள் செல்லச் செல்ல, திறனும் வருஷங்களோடு வளர்கின்றன
ஆனால் யாமினியின் ஆரம்ப கட்டத்தில் கண்ட திறனே, அவர் காலத்திய மற்ற நடன கலைஞர்களிடையே, பரத நாட்டியம் மட்டும் அல்ல, மற்ற குச்சிபுடி போன்ற வடிவங்களிலும்கூட அவர் தனித் திறமையும் கலை நோக்கும் கொண்டவர் என்ற நமபிக்கையைத் தோற்றுவித்துவிட்டது இங்கு யாமினியின் திறன்கள் அத்தனையையும் கொண்டு யாமினியும் வளர்கிறார். பரதமும் யாமினியின் வளரும் திறன்களுக்கும் கற்பனை வீச்சுக்கும், அவரது தனித்த பார்வைக்கும் ஏற்ப பரதமும் தன் எல்லைகளை விஸ்தரித்துக் கொள்கிறது.