மதிப்பிற்குரிய பதிவுகள் ஆசிரியருக்கு, மாதொருபாகன் கதையைப் பதிவிறக்கம் செய்து வாசித்தேன். எழுத்தாளரை ஒடுக்க நினைக்கும் போக்கிற்குக்கண்டனம் தெரிவிக்க வேண்டியது அவசியம். அதே சமயம், கதை குறித்த எதிர்மறைக் கருத்துகள் கட்டாயம் எழும்தான். ஊரைக் குறிப்பிட்டு ஒரு சர்ச்சைக்குரிய விஷயத்தை எழுதும்போது சம்பந்தப்பட்ட ஊர் மக்களுக்கு எழும் அக,புற பாதிப்புகளை நம்மால் முன்கூட்டியே ஊகித்துக்கொண்டு அதற்கேற்ப எழுத்தை வடிவமைத்துக்கொள்ள முடியாதா? இல்லை, பெண் சிசுக் கொலை போல் இத்தகைய வழக்கம் இன்னமும் சில இடங்களில் குழந்தையில்லா தம்பதிகளின் உறவினர்களின் தொல்லையால் தொடருகிறதென்றால் அதை தைரியமாக எதிர்த்து எழுத வேண்டும்.
ஆசிரியருக்கு இந்த விஷயத்தை எழுதும்படியான தூண்டுதல் எழுந்தது எதனால் என்பது அவருக்குத் தான் தெரியும். பல்வேறு காரணங்களால் அவர் வெளியிடத் தயங்கும் ஏதோ வொரு விஷயம் அவரை அலைக்கழித்திருக்கிறது என்று தோன்றுகிறது. கதை மேம்போக்காக, இந்துக்கடவுளர்களை மதிப்பழிப்பதற்காக எழுதப்பட்டதாகத் தெரியவில்லை. [பொன்னா திருவிழாவுக்குப் போகும் சமயம் நடக்கும் கூத்து நிகழ்வில் கோமாளியின் பேச்சில் கடவுளர்கள் கேலிசெய்யப்படுகிறார்கள். என்றா லும்] சொல்லப்போனால், மாதொருபாகன் என்ற கதைத் தலைப்பை ONE PART WOMAN என்று ஆங்கிலத்தில் கொச்சையாக [பரபரப்பிற்காகவா?] மொழிபெயர்த்திருப்பதுதான் அந்த வேலையைக் கச்சிதமாகச் செய்திருக்கிறது. அர்த்தநாரீஸ்வரம் என்பதன் தமிழ் மொழிபெயர்ப்பான மாதொருபாகனை,, ஆண்மையும் பெண்மையும் சரிசமவிகிதத்தில் அமையப்பெற்ற நிலையை இப்படி மொழிபெயர்த்திருப்பது சரியா? மொத்த மொழியாக்கம் எப்படியிருக்கிறது என்று இனிதான் பார்க்க வேண்டும்.