எழுத்தாளர் ஒருவர் ஏன் இந்தக் கதைக்கருவைத் தெரிவுசெய்துகொண்டார், ஏன் அந்தக் கதைக்கருவைத் தெரிவுசெய்துகொள்ளவில்லை; ஏன் இந்தக்கதைக்கருவை இப்படிக் கையாளவில்லை, ஏன் அந்தக் கதைக்கருவை அப்படிக் கையாண்டார் என்று கேட்பதெல்லாம் ஒருவகையில் அபத்தம்தான். அதேசமயம், ஒரு கருப்பொருளை எழுத எடுத்துக்கொள்வதற்கு ஒரு கதாசிரியருக்கான நோக்கம் என்று ஒன்று இருக்கும்போதுதான் அந்த எழுத்து பொருட்படுத்தக் தக்கதாகிறது. அப்படியொரு நோக்கமிருந்து அது எழுத்துமூலம் நேர்த்தியாக, அழுத்தமாக வெளிப்படும்போதுதான் அந்தப் படைப்பு வாசகரிடையே நேர்மறையான பரிவதிர்வை ஏற்படுத்துகிறது.
தன்னுடைய கருத்தை ‘அடிமைத்தனமாக’ மண்டியிட்டுத் தெண்டனிட்டு ஏற்காத யாரையும் ’வெறியர்களாக’ச் சித்தரிப்பது சில அறிவுசாலிகளின் வழக்கமாக இருந்துவருகிறது. ஆனால், ஒரு சமூகமாற்றத்திற்கான முன்முனைப்பை மெய்யாலுமே மேற்கொள்கிறவர்கள் அந்தச் சமூகத்தைச் சேர்ந்த அனைத்துப் பிரிவினரிடமும் அதற்கான மனமாற்றத்தை உருவாக்கவே முற்படுவார்கள். ஈழத் தமிழர்கள் பிரச்னையில் கூட நிறைய அறிவுசாலிகள் ‘சிங்கள மக்களை’ ஒட்டுமொத்தமாக காடையர்கள், இனவெறியர்கள் என்று முத்திரை குத்தி எழுதிவந்தார்கள். இவ்விதமான அணுகு முறையால் அவ்வப் பிரிவு மக்களிடையே உள்ள ‘மனசாட்சியுள்ள மனிதர்களும் புறக்கணிக்கப் படும், ஒதுங்கிக்கொண்டுவிடும் எதிர்மறை பாதிப்புகளே அதிகம் ஏற்படும்.