வணக்கம், புலம்பெயர் எழுத்தாளர்கள் பற்றிய விபரத் திரட்டு வெளிவந்துவிட்டது.அதன் பிரதிகளை ஓவியா பதிப்பகம் மூலம் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். நண்பர்களுக்கும் அறிமுகம் செய்வதன் மூலம் வருடாந்தம் தொடர்ச்சியாக மேலதிக…
கடந்த நூற்றாண்டின் இறுதியில் ஏற்பட்ட காலவோட்டத்திற்கும் அரசியல் சூழ் நிலைகளுக்குமேற்ப தனது புதிய பாய்ச்சலை மேற்கொண்ட ஈழத்து தமிழ் கவிதையானது பதித்த தடங்களையும் பரிமாணங்களையும் மீறி பிறந்துவிட்ட புதிய நூற்றாண்டில் அடைந்த தேக்கநிலை நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. இந்நிலையானது முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் பின்னர் முற்றுமுழுதாக இதன் வீச்சு அடங்கிவிட்டதா என்று ஐயம் கொள்ளும் வண்ணம் ஒரு நிசப்தநிலையை தோற்றுவித்திருந்தது. தீபச்செல்வனின் ‘போர் தின்ற நகரம்’ நிலாந்தனின் ‘யுகபுரானம்’ இன்னும் பல இனப்படுகொலையின் பதிவுகளை அச்சேற்றிய பல கவிதைத்தொகுதிகள் வெளி வந்த போதும் ‘ஈழத்துக்கவிதை இனி மெல்ல சாகும்’ என்ற நக்கல்களும் ஆருடங்களும் கூட வெளிப்படையாக எழும்பத்தொடங்கின. புகலிடத்தில் இதற்கான முனைப்புகள் முற்றுமுழுதாக அடங்கி விடவில்லை எனினும் அதனை முடக்கும் குரல்கள் ஆங்காங்கே தோன்றின. பல மாதங்களிற்கு முன்பு கவிஞர் குட்டி ரேவதியின் இலண்டன் வருகையின் போது ஏற்பாடு செய்யப்பட்ட கலந்துரையாடலின் போது கணிசமான அளவு வாசகர்கள் கலந்துகொண்ட போதும், அதில் கலந்து கொண்ட ஒரு அறிவு ஜீவி ஒன்று “புகலிடத்தில் இலக்கியக் கூட்டங்களிக்கு அதிகம் பேர் வருவது கிடையாது. அரசியல் கூட்டமானால் மட்டும் கொஞ்சம் பேர் வருவார்கள்” என்று அந்திமழையில் பார்ப்பனத்தின் ஊதுகுழலாய் திருவாய்மலர்த்தருளினார். அதன் பின் குட்டி ரேவதி மீதான சேறு வாரியடிப்பு மிக அதிகமாக நடைபற்றது. ‘அறம்’ பாடிய ஜெயமோகனும் ‘உன்னத சங்கீதம்’ பாடிய சாரு நிவேதிதாக்களும் மிகவும் கொச்சைத்தனமான வார்த்தைப் பிரயோகங்களை மேற்கொண்டிருந்தனர்.எல்லாவற்றுக்கும் மேலாக கடந்த மாதம் நடைபெற்ற எழுநா குழுவினரால் நடத்தப் பட்ட புத்தக அறிமுக விழாவில் பேசிய கவிஞர் ஒருவர் ‘ நான் இப்போது கவிதைகளே வாசிப்பதில்லை’ என்று பிரகடனப்படுத்தி கவிதைகளை சிலுவையில் அறைய முற்பட்டார். இது பலருக்கும் ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவமாகும்.