திரும்பிப்பார்க்கின்றேன்: பல்துறை ஆற்றலுடன் பதிப்பாளராகவும் விளங்கிய மூத்த படைப்பாளி அன்புமணி! சமூகநலன் சார்ந்த பணிகளிலேயே தனது வாழ்நாளை செலவிட்டு விடைபெற்ற கர்மயோகி

அன்புமணிமுருகபூபதி“ஒருவன்  என்னவாக  இருக்க வேண்டும் என்பதை  அவன்  மனமோ அல்லது அவனின் அறிவோ   தீர்மானிப்பதில்லை,  அவனின் ஆன்மாதான்    தீர்மானிக்கிறது”   என்ற  மகாபாரத  தத்துவத்தை சமீபத்தில் படித்தேன்.  இந்தத்தத்துவத்தை  நெஞ்சத்துக்கு  நெருக்கமானவர்களுடன் ஒப்பிட்டுப்பார்க்கையில்   அதிலிருக்கும்    உண்மை  புலப்படுகிறது. வயது    செல்லச்செல்ல  நெஞ்சத்துக்கு  நெருக்கமானவர்கள்  யார்…? என்ற   தெரிவு  எம்மையறியாமலேயே   மனதிற்குள் உருவாகிவிடுகிறது.    அவர்களில்  பலருடைய  மறைவு வெற்றிடத்தையும்    தோற்றுவிக்கிறது. ஈழத்து    இலக்கிய  வளர்ச்சியில்  காத்திரமான பங்களிப்புச்செய்தவரும்    மூத்ததலைமுறை   எழுத்தாளரும் சமூகப்பணியாளருமான    அன்புமணி  இரா . நாகலிங்கம்  கடந்த  2014 ஆம்    ஆண்டு  ஜனவரி  மாதம்  12  ஆம்    திகதி  மறைந்தவுடன் கிழக்கிலங்கையில்    மட்டுமல்ல எழுத்தாளர்கள்  மத்தியிலும்  ஒரு வெற்றிடம்    தோன்றியதுபோன்ற  உணர்வே   வந்தது.

அவர்    தமது  வாழ்வில்  என்னவாக  இருக்கவேண்டும்   என்று விரும்பினார்…?   என்ற  வினாவுக்குத் தேவைப்படும்  பதில்  அவரது வாழ்விலேயே இருந்தது.    அவர்  தமது  அறிவை   சமூகநலன்சார்ந்து பயன்படுத்தியவர். எமது  முற்போக்கு  எழுத்தாளர்  சங்கத்தின்  பணிகளுக்கு  ஆதரவு வழங்கிய   மட்டக்களப்பு  பிராந்தியத்தின்  செயலூக்கமுள்ள நால்வரைப்பற்றி     நண்பர்  பிரேம்ஜி    அடிக்கடி   சொல்வார்.   அவர்கள்: ரீ. பாக்கியநாயகம்,   எதிர்மனசிங்கம்,   செ.குணரத்தினம்,   அன்புமணி. இவர்களில்   அதிகமாக  எழுதிக்குவித்தவர்  செ.குணரத்தினம். எதிர்மனசிங்கம்    ஒருவகையில்  எனது  உறவினர்.  கலாசார உத்தியோகத்தராக  பணியாற்றியவர்.   பாக்கியநாயகம்  மட்டக்களப்பு எழுத்தாளர்   சங்கத்தின்  தூணாக  விளங்கியவர்.  பாக்கியநாயகத்தையும்    எதிர்மனசிங்கத்தையும்  மட்டக்களப்பு கச்சேரிக்கு    1978  காலப்பகுதியில்    சென்றபொழுது  முதல்  முதலில் சந்தித்தேன்.    அவ்வேளையில்  மட்டக்களப்பை    சூறாவளி கோரமாகத்தாக்கியிருந்தது. குணரத்தினம்    அவ்வப்பொழுது  வீரகேசரி  வந்து  செல்லும் படைப்பாளி.    அதனால்  அவர்  இலக்கிய  நண்பரானார். அன்புமணி    பற்றி   மல்லிகைஜீவா  என்னிடம்  சொன்ன    காலத்தில் அவர்    கிழக்கிலங்கையிலிருந்து  மலர்  என்ற  இலக்கிய  திங்கள் இதழை    வெளியிட்டுக்கொண்டிருந்தார்.    கொழும்பு  சென்றால் கோட்டை    ரயில்  நிலையத்திற்கு  முன்பாகவிருந்த  ராஜேஸ்வரி பவனில்   இதர  இலக்கிய  இதழ்களுடன்  மலர்    இதழையும் வாங்கிவிடுவேன்.    மலர்  தரமான    இதழ்.    ஆனால்,  1972 காலப்பகுதியிலேயே   தனது  ஆயுளை   முடித்துக்கொண்டது.

Continue Reading →