வ. விஜயபாஸ்கரனின் சமரன் களஞ்சியம். ஆவணமாகிவிட்ட அரசியல் இதழொன்றின் எளிய ஆரம்பங்கள்.

1_vijaya-bhaskaran5.jpg - 27.90 Kb- வெங்கட் சாமிநாதன் -சரஸ்வதி என்ற பெயரில் ஒரு இலக்கிய மாதப் பத்திரிகையை, சுமார் ஐந்து அல்லது ஆறுவருட காலம் (1956 – 1961) ஆசிரியப்பொறுப்புடன் நடத்தி வந்தவர் என்றே நான் அறிந்திருந்த, வ. விஜயபாஸ்கரன், 11.5.1962 லிருந்து 3.5.64 வரை இரண்டு ஆண்டுகள், சமரன் என்ற ஒரு அரசியல் இதழையும்  கூட நடத்தி வந்திருக்கிறார். சுமார் இரண்டு வருஷங்கள். தமிழக அரசியலில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்த கால கட்டம் அது. தமிழக அரசியலில் மாத்திரம் இல்லை. இந்திய அரசியலிலும் தான்.  இந்திய அரசியல் கட்சிகள் பெரும் சவால்களை எதிர்கொண்ட கால கட்டமும் அது. அவற்றின் நம்பிக்கை களுக்கும் , கொள்கைகளுக்கும் எழுந்த  பெரும் சவால்கள். அவை தேசீய தளத்திலும் சர்வ தேசீய தளத்திலுமான சவால்கள். தமிழக அரசியலிலோ எழுந்த சவால்கள் அதன் பண்பாட்டு, வரலாற்று, தார்மீக சவால்களாக இருந்தன.  இரண்டு தளங்களிலும் ஒரு பெரும் திருப்பு முனையாக முன்னின்ற கால கட்டம் அது.

தேசீய தளத்தில் முன் நின்ற பெரும் சவால், சீன ஆக்கிரமிப்பும் அதன் வரலாற்றிலேயே பதிந்திருந்த ஏகாதிபத்ய முனைப்புகளும் கனவுகளும். இந்தியாவின் வெளிநாட்டு உறவுகளை தீர்மானிக்கும் நிபுணத்வமும் உலக வரலாற்று அறிவும் நிறைந்த பெட்டகமாக தன்னை நினைத்துக்கொண்டிருந்த நேருவுக்கு கிடைத்த பலத்த அடி. அதை சீனாவின் நயவஞ்சகமாக, துரோகமாக நேரு பிரகடனம் செய்தார்.  நேரு போன்ற சீனாவின் வரலாறு அறிந்த, ஒரு தேசத்தை ஆளும் பொறுப்பேற்ற, தலைவர்களுக்கு, அதன் ஏகாதிபத்ய குணங்களும் வல்லரசு ஆசைகளும் நன்கு தெரிந்திருக்க வேண்டும். ஏமாந்தது நேருதானே ஒழிய, சீனா நட்புத் துரோகம் செய்ததாகச் சொல்ல முடியாது. அது தன் வரலாற்றில் அனேக நூற்றாண்டுகளாக பதிந்திருந்த தன் தேசீய குணத்தின் படி செயல்பட்டது. எப்பொழுதெல்லாம் சீனா ஒன்றுபட்டதோ, அப்போதெல்லாம் அதன் ஆக்கிரமிப்பு குணம் வெளிப்படும். திபெத்தை விழுங்கியதிலிருந்து இன்று ஜப்பானிலிருந்து ஒரு பெரும்  அரைவட்டமாக அஸ்ஸாம் வரை, பின்னும் நீண்டு லதாக் வரை அதன் ஆக்கிரமிப்பு 60 வருடங்களுக்கு மேலாக தொடர்வதைக் காணலாம். நேருவின் வரலாற்று அறிவுக்கும் வெளிநாட்டு உறவு பற்றிய பரிச்சயத்துக்கும் நேருவுடன் போட்டியிடாத, வல்லபாய் படேல், சைனா திபெத்தை ஆக்கிரமித்த அந்த ஆரம்ப கட்டத்திலேயே நேருவை எச்சரித்தும் அதை அலட்சியம் செய்தவர் நேரு.

Continue Reading →