[ அண்மையில் நீர்கொழும்பில் வெளியிடப்பட்ட நெய்தல் இலக்கியத்தொகுப்பில் வெளியான சிறுகதை அரசமரம். இதனை எழுதிய செல்வி கனகலதா நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரியின் பழைய மாணவி. தற்பொழுது சிங்கப்பூரில் ஊடகவியலாளராக பணியாற்றுகின்றார். இவரது கவிதை, சிறுகதைத்தொகுதிகள் ஏற்கனவே வெளியாகியுள்ளன. இவரது படைப்புகள் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன – முருகபூபதி –.. ]
முதலில் சில கணங்கள் என்ன பேசுவது என்று மலருக்குத் தெரியவில்லை. முதல்நாள் பேராசிரியரின் உரையைக் கேட்டதிலிருந்து அவர் மீது மலருக்கு அளவுகடந்த மரியாதை உண்டாகி இருந்தது. அவரிடம் மேலும் பேசும் ஆர்வத்தில் அவரது பரபரப்பான அட்டவணையில் எங்களுக்குச் சிறிது நேரம் ஒதுக்கக்கேட்டிருந்தோம். காலையில் என்ன சாப்பிட்டீர்கள்…? இன்றைய உங்களது திட்டம் என்ன…? அண்மையில் என்ன வாசித்தீர்கள் …? என்று மெல்ல உரையாடலைத் தொடங்கி இயல்பான நிலையில் பல விஷயங்களைப் பேசிக்கொண்டிருந்த மலர் திடீரென்று கேட்டார்
“இந்த அரச மரம் உங்களைச் சங்கடப்படுத்தவில்லையா…?”
ஒரு கட்டில் – அதைச் சுற்றி மூன்றடி இடைவெளி நாற்காலியுடன் கூடிய குட்டி மேசை மிகச் சிறிய குளியல் -கழிவறை – பொருட்கள் வைக்க ஒரு சிறு அலுமாரியுடன் இருந்த அந்த அறையை மூன்று ஸ்டார் ஹோட்டல் தகுதியுடையதாக்கிக்கொண்டிருந்தது வாசலைப் பார்த்திருந்த சற்றுப் பெரிய ஒற்றைச் சன்னல்.
சன்னலை முழுவதுமாக ஆக்கிரமித்திருந்தது அரச மரம். அறைக்குள் நுழைபவர் பார்வை நேர் கோட்டில் சென்றால் அந்த மரத்தில்தான் நிலைகுத்தும்.